அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்தவொரு அப்டேட் வந்துவிட்டது. டிசம்பர் 31, 2022, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு மிகச்சரியாக ’துணிவு’ டிரைலர் வெளியாகிவிட்டது. இன்னொரு மங்காத்தாவா, பில்லாவா அல்லது வாலியா என்று ரசிகர்கள் அனல் பறக்க மேற்கொண்ட பட்டிமன்றங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது. ஏனென்றால், இதிலும் வில்லத்தனமான வேடத்தில்தான் நடித்திருக்கிறார் ஏகே.
பல மாதங்களுக்கு முன்னர், துணிவு படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ‘மனிஹெய்ஸ்ட்’ வெப்சீரிஸை தழுவி இதன் கதை இருப்பதாகத் தகவல்கள் வந்தன. அதேபோல, இப்படம் ஒரு ’ஹெய்ஸ்ட் த்ரில்லர்’தான் என்று டிரைலரும் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஒரு வங்கியையோ, கேசினோவையோ, அருங்காட்சியகத்தையோ அல்லது முக்கியப் பிரமுகர்களின் செல்வாக்கையோ ஒட்டுமொத்தமாக ‘லபக்’குவதுதான் ‘ஹெய்ஸ்ட்’ படங்களின் அடிநாதம். வேறு ஒன்றுமில்லை, கொள்ளையடிப்பதை மையமாக வைத்து ஒட்டுமொத்த கதையும் நகரும்.
எப்படி ஸ்பெயின் நாட்டின் தலைமை நிதியகத்தை கொள்ளையடிப்பது போல ‘மனிஹெய்ஸ்ட்’ வெப்சீரிஸ் கதைகள் அமைந்திருந்தனவோ, அதேபோல இந்திய ரிசர்வ் வங்கியினுள் நடக்கும் கொள்ளையை குறி வைக்கிறது ‘துணிவு’. டிரைலரின் சில ஷாட்கள் ‘தி இத்தாலியன் ஜாப்’, ‘ஓசன்ஸ் 11’ உள்ளிட்ட பல ஹாலிவுட் ஹெய்ஸ்ட் படங்களை நினைவூட்டலாம்.
மொகலாயர் பாணி தாடி, காதில் கடுக்கன், கூலிங்கிளாஸ், கையில் எந்திரத் துப்பாக்கி என்று ‘ஸ்டைலான’ வில்லன் போல தோன்றியிருக்கிறார் அஜித். சீரியசான சூழலில் சிரித்துக்கொண்டே டான்ஸ் ஆடுவதாக வரும் ஷாட்கள், திரையரங்கில் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கப் போவதை கட்டியம் கூறுகிறது.
ஜென்டில்மேன், திருடா திருடா, சதுரங்க வேட்டை, வில்லன், அயன், ஆரண்யகாண்டம் போன்றவை தமிழ் சினிமாவில் கொள்ளையடிக்கும் நாயக நாயகிகளைக் காட்டியிருந்தாலும், கொள்ளையடிக்கும் நிகழ்வை முன்னிலைப்படுத்தும் மங்காத்தா, நாணயம், ராஜதந்திரம், கொரோனாவுக்கு முன்னதாக வெளியான கொரில்லா போன்ற தமிழ் படங்களும் ரசிகர்களிடம் கணிசமான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
ஆங்கிலம் உள்ளிட்ட அயல் மொழிகளில் இது போன்ற ‘ஹெய்ஸ்ட்’ படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அந்த வகையில், பல மொழிகளிலும் வெற்றி பெறுவதற்கான கூறுகள் ‘துணிவு’ படத்தில் இருக்க வாய்ப்புகள் அதிகம்.
டிரைலரின் ஒவ்வொரு பிரேமையும் புட்டு புட்டு வைப்பதைவிட, அதில் இருக்கும் முக்கிய அம்சங்கள் மட்டும் அப்படிப்பட்ட வாய்ப்புகள் இருக்குமென்று உறுதி சொல்கின்றன.
பாலசரவணன், மோகனசுந்தரம் போன்றவர்கள் கொள்ளை நடக்குமிடத்திற்கு வெளியே அதனை வேடிக்கை பார்ப்பவர்களாகத் தென்படுகின்றனர். சமகால சமூக அரசியல் நையாண்டிகளை மையப்படுத்தி இவர்களது வசனங்கள் அமைக்கப்பட்டிருந்தால், திரையரங்குகளில் சிரிப்பலைகள் உறுதி.
தெலுங்கை குறிவைத்து அஜய், சமுத்திரக்கனி, பக்ஸ் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக இதில் தோன்றியிருக்கின்றனர். ஜான் கொக்கன், பிரேம் போன்றவர்களுக்கும் இதில் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. யூடியூப்களில் பேட்டிகள் தந்திருக்கும் வீரா, தர்ஷன் போன்றவர்களின் பாத்திரங்கள் என்னவென்று சொல்லப்படவில்லை.
மஞ்சு வாரியார் தவிர்த்து பெண் பாத்திரங்களில் நடித்தவர்கள் எவரையுமே டிரைலரில் காண முடியவில்லை. முக்கியமாக, இக்கதையில் முக்கியமான வில்லன் யார் என்பதே காட்டப்படவில்லை. நிச்சயமாக, கதையின் முடிச்சே அதில்தான் இருக்கும்.
அதனால் வங்கி கொள்ளை என்பது கதையின் ஒரு பகுதி என்பது தெளிவாகிறது. மீதமுள்ள காட்சிகள் அதற்கான திட்டமிடலையோ, ஒத்திகையையோ, கொள்ளைக்கு முன் பின்னாக அமைந்த நிகழ்வுகளையோ மையப்படுத்தியிருக்கலாம். அவ்வாறிருந்தால், துணிவு திரைக்கதை தரும் அனுபவம் ‘ரோலர்கோஸ்டர்’ பயணமாக அமையலாம்.
நிச்சயமாக அதில் சாதாரண ரசிகன் தன்னைப் பொருத்திப் பார்க்கும் வகையிலான உணர்ச்சிகரமான அம்சங்கள் இருக்குமென்றும் நம்பலாம். ஒருவேளை அப்படியில்லாமல் போனால், அழகான பொம்மையைப் பார்ப்பது போலவே ‘துணிவு’ படமும் நோக்கப்படும். அஜித் ரசிகர்கள் அதற்கு இடம்கொடுக்க மாட்டார்கள் என்பது ஒருபுறமிருக்க, அஜித் பேசும் வசனங்களும்கூட, அதகளம் நிச்சயம் என்று சொல்கிறது.
’டோன் ஆக்ட் லைக் எ ஹீரோ, அந்த வேலையை நான் பார்த்துக்கறேன்’, ‘பேங்க்ல வந்து பியரும் பிராந்தியுமா கேட்பாங்க’, ’என்னை மாதிரி ஒரு அயோக்கியப் பய மேல கைய வைக்கலாமா’ என்பது போன்ற ‘பஞ்ச்’களை தாண்டி ‘செய்றோம்’ என்று சொல்வது மட்டுமே ரசிகர்களை மீண்டும் மீண்டும் டிரைலரை பார்க்கச் செய்கிறது.
முடிவாக, டிரைலரின் தொடக்கத்தைப் போலவே முடிவிலும் ஒரேமாதிரியான பின்னணி இசை ஒலிப்பது மொத்த திரைக்கதையும் ஒரு சுழல் போன்றிருக்கும் என்று எண்ண வைக்கிறது; ஒருவேளை ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ என்பதற்கான குறியீடாகவும் இருக்கலாம். யார் கண்டது? ஜனவரி 12ஆம் தேதியன்று அதிகாலையில் மேலே சொன்னவற்றுக்கெல்லாம் பதில் தெரிந்துவிடும்.
உதய் பாடகலிங்கம்
அன்பில் மகேஷுக்கு அன்பு கோரிக்கை வைத்த சீமான்
2022 தமிழ் சினிமா படங்களின் வசூலும் சாதனையும்!