கார் ரேஸ் பயிற்சி மேற்கொண்ட நடிகர் அஜித், விபத்தில் சிக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை பதற்றமடைய செய்துள்ளது.
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டது.
இதனால் சோகமடைந்த அவரது ரசிகர்களை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
எனினும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நடிகர் அஜித்தின் கார் விபத்து வீடியோ மீண்டும் அவரது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
நடிகர் அஜித் குமார் சமீபத்தில் சிங்கப்பூரில் தனது குடும்பத்தினருடன் புத்தாண்டு விடுமுறையை கழித்து விட்டு, துபாய் சென்றடைந்தார். அங்கே வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள 24H Dubai 2025 கார் ரேஸ் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதற்கான தீவிரமான பயிற்சியில் தனது குழுவினரோடு அவர் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி இன்றும் வழக்கம்போல அவர் கார் பயிற்சி மேற்கொண்டார். அப்போது வேகமாக ரேஸிங் சர்க்கியூட்டில் சீறிய அவரது கார் தடுப்பு சுவரில் திடீரென மோதி கடுமையாக சேதமடைந்தது.
எனினும் தகுந்த பாதுகாப்புடன் பயிற்சி மேற்கொண்ட நடிகர் அஜித், காயமின்றி தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பதற்றமடைய செய்த நிலையில், ரசிகர்கள், அவர் பாதுகாப்புடன் பயிற்சி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக முதல் விஜய்யின் தவெக வரை… நிலைப்பாடு என்ன?