தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடித்து வரும் ’கட்டா குஸ்தி’ திரைப்பட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் , கௌதம் வாசுதேவ் மேனனின் முன்னாள் அசோசியேட் பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ள அடுத்த படமான ’ஆர்யான்’ படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆக்ஷன் த்ரில்லர் முறையில் உருவாகிறது.
இந்தப் படத்தில், ராட்சசனுக்குப் பிறகு மீண்டும் போலீஸ்காரராக நடிக்கிறார் விஷ்ணு விஷால்.
இதுகுறித்து இயக்குனர் பிரவீன் கே, “இந்தப் படமும் போலீஸ் விசாரணைக் கதைதான் என்றாலும், விஷ்ணு விஷால் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பதால், ராட்சசன் மாதிரி இருக்காது. நான் 2018 முதல் விஷ்ணுவுக்காக சில கதைகளை எழுதி வருகிறேன்.

நான் அவரிடம் இந்தக் கதைக்களத்தைச் சொன்னேன். அவர் அதைக் கண்டு உற்சாகமடைந்தார். மேலும் அதைத் தன்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலமே தயாரிக்க முடிவு செய்தார்.
ஐந்து நாட்களில் நடக்கும் சம்பவங்களைச் சுற்றி நடக்கும் ஆக்ஷன் த்ரில்லராக இது இருக்கும். விஷ்ணு ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்”என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக வந்து மிரட்டுவார் என்றும், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ராட்சசனில் பணியாற்றிய சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்யவுள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
புதுமுகம் விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கும் என்றும், முழு படத்தையும் ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் மற்றும் சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேசுடன் செல்வராகவன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்