கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை!

Published On:

| By Kalai

Action on theaters charging extra

அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது,  கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்து வருகிறது.

அப்படிப்பட்ட திரையரங்கங்கள் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்களை சிறப்பு குழு அமைத்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி,

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் சோதனை நடத்தப்பட்டு , கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் , அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு எதிராக  உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் தொடரும் என்றும்,

சினிமா டிக்கெட் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசு கண்காணிப்பு தொடர வேண்டும் என்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

கலை.ரா

ஈரோடு கிழக்குக்கு வந்த அண்ணா, கலைஞர், ஸ்டாலின்

முத்தக் காட்சியில் ஏன் நடித்தேன் தெரியுமா? விளக்கம் கொடுத்த குட்டி நயன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share