பிரபலமான நடிகர் நடிகைகள் தங்களை பற்றி வரும் சர்ச்சைக்குரிய செய்திகள், காதல் கிசுகிசுக்களுக்கு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்வார்கள் அல்லது ஓடி ஒளிந்து கொள்வார்கள்.
சிலர் கேள்வி கேட்ட செய்தியாளரை தனிப்பட்ட முறையில் அழைத்து பொதுவெளியில் தர்மசங்கடமான கேள்விகளை கேட்கவேண்டாம் என வேண்டுகோள் வைப்பது உண்டு. சிலர் மிரட்டுவதும் உண்டு. இதில் இருந்து வித்தியாசமானவராக தன்னை வெளிப்படுத்தியுள்ளார் இந்தி நடிகர் ஆமீர் கான்.
ரீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு 16 ஆண்டுகளும், அதன் பிறகு இயக்குனர் கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு 15 ஆண்டுகளும் சேர்ந்து வாழ்ந்தார் ஆமீர்கான். பின்னர் அவர்களுடன் சட்டப்படி விவாகரத்து பெற்றார் என்பது கடந்த கால செய்திகள்.
தற்போது பிரபல டாக் ஷோவான கரண் ஜோகர் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டி அளித்தார் ஆமீர் கான். அப்போது அவரிடம் முன்னாள் மனைவிகள் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் கூறுகையில், ‛‛எனது முன்னாள் மனைவிகளான ரீனா மற்றும் கிரண் ஆகிய இருவரையும் வாரம் ஒருமுறை நேரில் சந்திப்பேன். அதோடு நான் எனது முன்னாள் மனைவிகளை மிகவும் மதிக்கிறேன். அதன் காரணமாகவே அவர்களுடன் நட்பை கடைபிடித்து வருகிறேன். விவாகரத்து செய்து கொண்டாலும் எப்போதும் நாங்கள் ஒரே குடும்பம் தான்.

அதனால் தான் நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் எனது முன்னாள் மனைவிகளை சந்திப்பதற்கு தவறுவதில்லை. எப்போதும் எங்களுக்கிடையே அன்பு, பாசம் , மரியாதை இருந்து கொண்டே இருக்கிறது” என்று ஆச்சரியமான பதிலை கூறியிருக்கிறார்.
–இராமானுஜம்