Laapataa Ladies movie review

லாப்தா லேடீஸ் : விமர்சனம்

சினிமா

அமீர்கான் தயாரிப்பில் இன்னொரு வெற்றிப்படம்!

அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்களால் பெரும் வரவேற்புக்கு உள்ளாகியிருக்கின்றன. லகான், தாரே ஜமீன் பர், டங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் என்று அவர் நடித்த படங்கள் மட்டுமல்லாமல் ஜானே தூ யா ஜானே நா, பீப்லி லைவ், தோபி காட், டெல்லி பெல்லி என்று வேறு கலைஞர்களைக் கொண்டு அவர் தயாரித்தவையும் அவற்றில் அடக்கம். அந்த வரிசையில் இன்னொன்றாக இணைந்திருக்கிறது ‘லாப்தா லேடீஸ்’. இதனை கிரண் ராவ் இயக்கியுள்ளார். இவர் அமீர்கானின் முன்னாள் மனைவி.

திருமணம் முடிந்து மணமகளைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லும் மணமகன், தன்னுடன் வந்தது வேறொருவரின் மனைவி என்று அறிந்து அதிர்வதைச் சொன்னது ‘லாப்தா லேடீஸ்’ ட்ரெய்லர். வட இந்தியக் கிராமப்புறங்களில் பெண்களின் நிலைமை என்னவென்பதை இப்படம் நகைச்சுவையுடன் சொல்லும் என்பதைப் பறைசாற்றியது.

உண்மையில் படமும் அப்படித்தான் அமைந்திருக்கிறதா?

Laapataa Ladies movie review

காணாமல் போன பெண்கள்!

தொலைதூரக் கிராமமொன்றில் இருந்து மனைவி பூல் குமாரியை (நிதான்ஷி கோயல்) அழைத்துக்கொண்டு, சூர்யமுகி எனும் தனது ஊருக்குச் செல்கிறார் தீபக் குமார் (ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா). ஸ்கூட்டர், பேருந்து, ரயில் என்று மாறி மாறி இருவரும் பயணிக்கின்றனர். ரயிலில் கூட்டம் நிறைந்து வழிய, தீபக் ஒரு பக்கமும், பூல் ஒருபக்கமும் அமர்கின்றனர்.

நள்ளிரவில் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும், மனைவி என்று நினைத்து வேறொரு பெண்ணை அழைத்துக்கொண்டு இறங்குகிறார் தீபக். பூல் குமாரி போலவே அப்பெண்ணும் சிவப்பு வண்ணச் சேலையணிந்து முகத்தை மூடித் திரையிட்டிருக்கிறார்.

வீட்டிற்குச் சென்றபிறகே, மனைவிக்குப் பதிலாக வேறொரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்திருப்பதை அறிகிறார் தீபக். முதலில் நடந்ததை எண்ணி அதிர்ச்சியடைந்தாலும், பிறகு அப்பெண்ணைத் தங்களது வீட்டிலேயே தங்க வைக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

தனது பெயர் ‘புஷ்பா ராணி’ என்றும், கணவர் பெயர் ‘பங்கஜ்’ என்றும் சொல்கிறார் அந்தப் பெண். அவர் சொல்லும் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டால், ‘ராங் நம்பர்’ என்ற பதிலே வருகிறது. அது மட்டுமல்லாமல், அவரது நடவடிக்கைகளும் வினோதமாக இருக்கின்றன.

ரயிலில் கணவர் தந்த செல்போனில் இருந்து சிம்கார்டை எடுத்து தீயில் இட்டுக் கொளுத்துகிறார். கிராமத்தில் இருந்து நகரத்திற்குச் சென்று தனது நகையை அடகுக்கடையில் கொடுத்துப் பணம் பெறுகிறார். அதனை யாரோ ஒருவருக்கு ‘மணியார்டர்’ அனுப்புகிறார். இண்டர்நெட் மையம் சென்று எதையோ தேடுகிறார். அவையனைத்தும் அவரது பெயர் ‘புஷ்பா ராணி’ அல்ல என்றும், அவர் சொல்வதெல்லாம் உண்மைகள் அல்ல என்பதையும் நமக்குப் புரிய வைக்கின்றன.

அதேநேரத்தில், தீபக்கின் மனைவி பூல் வேறொரு ரயில்நிலையத்தில் இறங்குகிறார். கணவர் தன்னைவிட்டுச் சென்றதை அறிந்து மனம் பதைபதைக்கிறார். அந்த ரயில் நிலையத்தில் இருக்கும் சோட்டு எனும் நபர் அவருக்கு உதவுகிறார். அதன் தொடர்ச்சியாக, அங்கு கடை வைத்திருக்கும் மஞ்சு மாய் எனும் பெண்ணோடு பழகத் தொடங்குகிறார்.

கணவர், மகனை விட்டுப் பிரிந்து தன்னந்தனியே வாழும் மஞ்சு, பூல் குமாரியைப் பார்த்துப் பரிதாபப்படத் தயாராக இல்லை. ஆண்கள் அனைவருமே அரக்க குணமுடையவர்கள் என்றெண்ணும் அவரிடத்தில், அந்த இளம்பெண்ணிடம் உள்ள நற்குணங்கள் மெல்லச் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

இரண்டொரு நாட்களிலேயே, மஞ்சு மாய் கடையில் அனைத்து பணிகளையும் செய்யத் தொடங்குகிறார் பூல். கூடவே, நிச்சயம் தீபக் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்றும் நம்புகிறார்.

இன்னொரு புறம், தீபக்கின் வீட்டில் தங்கியிருக்கும் பெண்ணின் உண்மையான பெயர் ‘ஜெயா’ என்பது தெரிய வருகிறது. அவரது கணவர் தனது ஊரிலுள்ள காவல்நிலையத்தில் அது தொடர்பாகப் புகார் அளித்திருக்கிறார்.

அந்த தகவல்கள் தீபக் அளித்த புகாரோடு பொருந்திப்போவதைக் காண்கிறார் இன்ஸ்பெக்டர் மனோகர் (ரவி கிஷன்). அதையடுத்து, ‘உன் வீட்டில் இருக்கும் புஷ்பாவை ஸ்டேஷனுக்கு அழைத்து வா’ என்று தீபக்கிடம் சொல்கிறார். விசாரணையின்போது அந்தப் பெண் பல உண்மைகளை மறைக்கிறார் என்பதை முதல் பார்வையிலேயே கண்டறிகிறார் மனோகர்; அவரைப் பின்தொடரத் தொடங்குகிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது? ஜெயா என்ற பெண் ஏன் கணவர் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்க்கிறார்? மனைவி பூல் இருக்குமிடத்தை தீபக் அறிந்தாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி.

’லாப்தா லேடீஸ்’ என்றால் காணாமல்போன பெண்கள் என்று அர்த்தம். லேடீஸ் என்று நம்மூரில் சொல்வதை வட இந்தியாவில் ‘லேடீஜ்’ என்று உச்சரிப்பதைச் சுட்டுகிறது படத்தின் டைட்டில்.

அதேபோல மத்தியப்பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் தனியாகப் பிரிக்கப்பட்ட காலகட்டத்தில் படத்தின் கதை நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது. அப்பெயரைக் குறிப்பிட்டால் ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்று யோசித்து அம்மாநிலத்தின் பெயரைத் திரையில் ‘நிர்மல் பிரதேஷ்’ என்று குறிப்பிடுகிறது இப்படம்.

Laapataa Ladies movie review

சிரிப்பூட்டும் வசனங்கள்!

இந்த படத்தில் இளம் தம்பதிகளாக வரும் ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா – நிதான்ஷி கோயல் ஜோடியின் நடிப்பு அபாரமாக உள்ளது. இணையைப் பிரிந்த ஏக்கம் அனைத்து ஷாட்களிலும் இருக்குமாறு அமைந்துள்ள அவர்களது நடிப்பே, இப்படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

புஷ்பா ராணி என்ற ஜெயாவாக நடித்துள்ள பிரதிபா ரந்தா, இப்படத்தில் நகைச்சுவைக்கும் பரபரப்புக்கும் உத்தரவாதம் தருகிறார். இன்ஸ்பெக்டராக வரும் ரவி கிஷன் அவரைப் பின்தொடரும் இடங்கள் நம்மைக் குலுங்கிச் சிரிக்க வைக்கும் ரகம். கணவர் வீட்டுக்குப் போகாமல் தவிர்ப்பது ஏன் என்ற கேள்விக்கு பிரதிபா பதில் சொல்லுமிடம் திரைக்கதையில் மிகச்சரியாகக் கையாளப்பட்டுள்ளது.

காவல் துறையைச் சேர்ந்த மோசமான நபராகப் படம் முழுக்க ரவி கிஷன் சித்தரிக்கப்பட்டாலும், கிளைமேக்ஸில் அவரது நடிப்பு ‘சபாஷ்’ என்று சொல்ல வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

மஞ்சு மாய் ஆக வரும் சாயா கடம், சோட்டுவாக வரும் சத்யேந்திர சோனி, தீபக்கின் பெற்றோராக நடித்தவர்கள், நண்பர்களாக இடம்பெற்றவர்கள் போன்றவர்களுக்குத் திரையில் உரிய இடம் தரப்பட்டிருப்பது அருமையான விஷயம்.

மிகச்சின்ன பாத்திரங்களில் நடித்தவர்களும் கூட இப்படத்தில் முக்கியத்துவத்துடன் காட்டப்பட்டுள்ளனர். அதனால் ஸ்டேஷன் மாஸ்டராக வருபவரும், மாய் கடையில் சமோசாவுக்கு அதிக சட்டினி கேட்பவராக வரும் நபரும் கூட நம் மனதைக் கவர்கின்றனர்.

கதை நிகழும் களத்தினை அதிக ஒப்பனை இல்லாமல் திரையில் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விகாஸ் நௌலகா. அதேநேரத்தில், ஒவ்வொரு பிரேமிலும் அழகியல் அம்சங்கள் நிறைந்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஜபீன் மெர்ச்சண்டின் படத்தொகுப்பு, காலம் நேரம் குறித்த குழப்பங்களுக்கு இடம் தராமல் கதையை ‘ஸ்மூத்’தாக நகர்த்திச் செல்கிறது.

கண்ணைப் பறிக்கும் வகையில் வண்ணங்களைத் திரையில் நிறைக்காமல் கிராமத்து வீடுகள், காவல்நிலையம் உள்ளிட்ட பல்வேறு களங்களை நேரில் கண்ட உணர்வை ஊட்டுகிறது தயாரிப்பு வடிவமைப்பாளர் விக்ரம் சிங்கின் குழு.

இசையமைப்பாளர் ரவி சம்பத் தந்திருக்கும் பாடல்கள் சட்டென்று நம் மனதைத் தொடுகின்றன. அவை திரைக்கதையில் நிகழும் மாற்றங்களைச் சொல்கிற ‘மாண்டேஜ்’ பாடல்களாக இருப்பதால், ‘ரெஸ்ட்ரூம்’ செல்லும் வேட்கை மங்கி மறைகிறது. போலவே, காட்சிகளில் இருக்கும் நகைச்சுவையை முன்கூட்டியே உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது பின்னணி இசை.

சுமார் இரண்டு டஜன் பாத்திரங்களைக் கொண்டிருந்தாலும், பிப்லாப் கோஸ்வாமி எழுதியுள்ள கதையானது தீபக், பூல் மற்றும் ஜெயாவை மட்டுமே மையப்படுத்தி நகர்கிறது. இந்தச் சமூகம் எவ்வாறு ஆண்களை மையப்படுத்தி இயங்குகிறது என்பதை முக்காடு இட்ட இரண்டு புதுமணப் பெண்கள் இடம் மாறிச் செல்வதன் வழியே உணர்த்துகிறது.

யதார்த்தத்தோடு சினிமாத்தனமும் கலந்த இதன் திரைக்கதையில் நிச்சயமாக லாஜிக் மீறல்களை நம்மால் கண்டுபிடிக்க முடியும். அது மட்டுமே இப்படத்திலிருக்கும் பெருங்குறை.

அதேநேரத்தில் சினேகா தேசாய் அமைத்துள்ள திரைக்கதையானது, பெண்கள் முன்னேற்றம் குறித்த கருத்துகளை நகைச்சுவையோடு சொல்வதை முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது. அதனால், படம் முழுக்கத் திரையரங்கில் சிரிப்பொலிகளைக் கேட்க முடிகிறது.

கூடவே, பெண்களின் அடிப்படை உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்குகிற பல சமூக வழக்கங்களைப் போகிறபோக்கில் அடுக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர் கிரண் ராவ்.

Laapataa Ladies movie review

நிகழ்த்தப்படும் மாற்றங்கள்!

தீபக் பாத்திரம் தனது மனைவி என்று நினைத்து வேறொரு பெண்ணைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வதுதான் இத்திரைக்கதையிலுள்ள முதல் திருப்பம். ஆனால், அந்த பெண் அதனை ஏன் வலிய ஏற்றுக்கொண்டார் என்பதற்கான காரணத்தை விளக்குவது இரண்டாவது திருப்பம்.

இவ்விரண்டுக்கும் இடையே அந்தப் பெண்ணால் தீபக்கைச் சுற்றியிருக்கும் பலரது வாழ்வில் மாற்றங்கள் நிகழ்வதாகச் சொன்ன வகையில் கவர்கிறது ‘லாப்தா லேடீஸ்’.

தீபக்கின் சகோதரர் தொலைதூரத்தில் பணியாற்றி வர, அதனை எண்ணி அவரது மனைவி வெறுமையில் உழல்கிறார். அவரிடத்தில் இருக்கும் நகைச்சுவை உணர்வையும் ஓவியம் வரையும் திறனையும் அக்குடும்பத்தினர் அறியச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது ஜெயா பாத்திரம்.

‘பொம்பளைங்க தங்களுக்குப் பிடிச்சதை சமைச்சு சாப்பிடக் கூடாதா’ என்று தீபக்கின் தாயிடம் கேள்வி எழுப்புகிறது. இயற்கை விவசாயத்தில் தனக்குள்ள அறிவைக் கொண்டு, பூச்சி மருந்துகள் தெளிக்காமல் பயிர் வளர்ப்பது குறித்து தீபக்கின் தந்தையிடம் அறிவுறுத்துகிறது.

போலவே, ஆண் துணை இல்லாமல் இந்த உலகில் கண்ணியமான வாழ்வை மேற்கொள்ள முடியும் என்று உரக்கச் சொல்கிறது மஞ்சு மாய் பாத்திரம்.

‘துவைக்கவும் சமைக்கவும் வீட்டைச் சுத்தப்படுத்தவும் சொல்லித்தந்த உன்னோட அம்மா, புருஷனோட ஊர் எங்கிருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னு சொல்லித் தரலையா’ என்று பூல் குமாரியிடம் கேள்வி எழுப்புகிறது. பெண்கள் சொந்தக்காலில் நின்றால்தான் பெருமை என்று உணர்த்துகிறது. அதன் பலனாக, ‘தீபக்கை பார்த்தபிறகு, நானும் உங்களை மாதிரியே சுய தொழில் செய்யப்போறேன்’ என்று அப்பாத்திரத்தைச் சொல்ல வைக்கிறது.

மனைவி என்று நினைத்து வேறொரு பெண்ணைத் தீபக் தவறாக அழைத்து வந்ததாலேயே இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததாகக் காட்டுகிறது ‘லாப்தா லேடீஸ்’. அதற்காகவே, இயக்குனர் கிரண் ராவ் திரையில் நிகழ்த்தியிருக்கும் மாயாஜாலத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

சென்சார் பிடியில் சிக்காமல், சர்ச்சைகளுக்கு ஆளாகாமல், அமீர்கான் புரொடக்‌ஷன்ஸில் இருந்து ’மெசேஜ்’ சொல்லும் இன்னொரு வெற்றிப்படத்தைத் தந்திருக்கிறார் கிரண். இந்த ‘லாப்தா லேடீஸ்’ஐ குடும்பத்தோடு கண்டு ரசிக்கலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதய் பாடகலிங்கம்

”பாஜவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வழக்கு தொடர்வேன்” : சீமான்

’புதுச்சேரியில் யார் போட்டி?’: அறிவித்த ரங்கசாமி

+1
1
+1
0
+1
1
+1
2
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *