இந்திய சினிமாவில் இந்தி திரைப்படங்கள் தயாரிப்பு, அது சார்ந்த முதலீடுகள் பிறமொழி சினிமாக்களில் இருந்து வேறுபட்டது.
தயாரிப்பாளருடன் முதன்மை கதாநாயகன் குறைந்தபட்ச அடையாள முன் தொகை மட்டும் பெற்றுக் கொண்டு, வியாபாரம் முடிந்து லாபத்தில் சதவீத அடிப்படையில் தங்களது சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறை அங்கு உண்டு.
அதனாலேயே பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்திப்படங்கள் தயாராகிறது. அதே போன்று முன்னணி நடிகர்கள் தனித் தயாரிப்பாளர், கூட்டுத் தயாரிப்பாளராக இருப்பது இந்தி சினிமாவில் சர்வ சாதாரணம்.
அதனால் தயாரிப்பு, விநியோகம், திரையிடல் இவற்றில் காலத்திற்கு ஏற்ப புதிய முடிவுகளை அமல்படுத்துவதில் இந்தி சினிமா முதல் இடத்தில் உள்ளது. அதே போன்றதொரு புதிய முயற்சியை நடிகர் அமீர்கான் தன் படத்தின் மூலம் அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பொது முடக்கத்திற்கு முன்பு வரை திரையரங்குகளில் தான் முதலில் படங்கள் வெளியாகின. ஓடிடி வருகைக்கு பின் அவர்களது ஆதிக்கம் அதிகரித்து விட்டது.
புதிய படங்களை வாங்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளனர். ஓடிடி நிறுவனங்கள் கதைகளில், வெளியீட்டு தேதி என எல்லாவற்றிலும் தலையிடுகின்றனர். இதற்கு காரணம் முன்னதாகவே ஓடிடி உரிமையை விற்பதால் இந்த சிக்கல் ஏற்படுகிறது.
இதனை கலைவதற்கு தனது அடுத்த படத்தின் மூலம் பழைய முயற்சியினை மீண்டும் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகர் அமீர்கான்.
அவர் நாயகனாக நடித்துள்ள ‘சிட்ரே ஜமீன் பர்’ படத்தின் போஸ்டர், ட்ரெய்லர் மற்றும் படத்தில் டிஜிட்டல் நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்களின் பெயர்கள், நிறுவன முத்திரைகள் எதுவுமே இடம்பெறாது.
படத்தினை திரையரங்கில் மட்டுமே வெளியிட்டு, அதன் வரவேற்பை முன்வைத்து டிஜிட்டல் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்திருக்கிறார்.
இந்த முடிவு தொடர்பாக தனது படத்தின் தயாரிப்பாளர்கள், பங்குதாரர்கள், படக்குழுவினர் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். திரையரங்கில் படம் ஓடி முடிந்தபின் ஓடிடி, தொலைக்காட்சி உரிமைகளை விற்பனை செய்யலாம் என்கிற அமீர்கான் ஆலோசனை இந்தி சினிமாவில் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன்? – ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கேள்வி!
வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம்!
எங்க தமிழ்நாட்டுல அப்டிலாம் இல்ல; படம் ஓடுதோ இல்லியோ, முன்னாடியே பல கோடியில சம்பளமும், சில ஏரியா விநியோக உரிமையும் வாங்குனமா, காசை கண்ணால பாத்தமானு அவ்ளோதான்.