Aadujeevitham: Is Amala Paul's salary so much?

ஆடுஜீவிதம் : அமலா பால் சம்பளம் இவ்வளவு தானா?

சினிமா

மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் நடிப்பில் இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி உள்ள படம் ஆடுஜீவிதம்.

2008-ஆம் ஆண்டு எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் என்ற நாவலை மையமாக வைத்து தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த புத்தகம் ஓர் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டது.

சவூதி அரேபியாவில் தனது விருப்பத்திற்கு மாறாக ஆடு மேய்க்கும் வேலையில் அமர்த்தப்பட்ட ஒரு புலம்பெயர்ந்த மலையாள தொழிலாளியை பற்றிய கதைதான் இந்த ஆடுஜீவிதம். இந்த புத்தகத்தை படித்த இயக்குநர் பிளெஸ்ஸி இக்கதையை படமாக எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு 2008 ஆம் ஆண்டே நடிகர் பிருத்விராஜை இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

அதன்பின் அதிக பொருட்செலவு காரணமாக இந்த படத்தை எடுக்க முடியாமல் நாட்கள் தள்ளிப்போனது. பல போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதன்பின் இடையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக படப்பிடிப்பு நின்று போனது.

மீண்டும் பல பிரச்சனைகளை கடந்து இறுதியாக 2022 ஆம் ஆண்டு இந்த படத்திற்கான முழு படப்பிடிப்பையும் படக் குழுவினர் நிறைவு செய்தனர். இந்த படத்திற்காக இயக்குநரும் ஹீரோவும் சுமார் 16 ஆண்டுகள் கடினமாக உழைத்து உள்ளனர். இந்த படத்திற்காக நடிகர் பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்தார்.

அதேபோல் ஆறு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த ஆடுஜீவிதம் படத்தில் நடிகர் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்த அமலா பால் இந்த படத்திற்கான சம்பளமாக வெறும் ரூ.80 லட்சம் மட்டுமே வாங்கி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

குறைந்த சம்பளமாக இருந்தாலும் தொடர்ந்து இந்த படத்திற்காக அவர் புரோமோஷன் செய்து வருவதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது இன்று (மார்ச் 28) ஆடுஜீவிதம் படம் மலையாளம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பிரீமியர் ஷோவில் பல முக்கிய திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

ஆடு ஜீவிதம் படத்தைப் பார்த்தபின் நடிகர் கமல் கூறியதாவது, “இந்த படம் பார்த்து மனம் குளிர்ந்து உள்ளேன். இந்த படம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதில் நடித்த நடிகர்கள் மிகவும் சிரமம் எடுத்து நடித்துள்ளனர். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் தொழில்நுட்ப குழுவினர் என அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். இந்த படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும். கண்டிப்பாக பல விருதுகளை வெல்லும்” என்று தெரிவித்தார்.

அதேபோல் ஆடுஜீவிதம் படத்தை பார்த்த நடிகர் சூர்யா ” உயிர் பிழைத்தல் குறித்த ஒரு கதையை சொல்வதற்கான 14 வருட கனவு இது. இதனை சாத்தியமாக்குவதற்கான இந்த மாற்றமும், கடின உழைப்பும் வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடக்கக் கூடியவை.

ஒரு பிரம்மாண்ட வெளியீட்டுக்கு தயாராகும் இயக்குநர் பிளெஸ்ஸி மற்றும் குழுவினர், பிருத்விராஜ், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து மலையாளத் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் அதிகமாக வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் திரைப்படமும் பெரும் அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கணேசமூர்த்தியின் இழப்பு பெரும் துயரம்: ஸ்டாலின் வேதனை!

ஹெல்த் டிப்ஸ்: ரத்தக்குழாய் அடைப்புகளை நீக்க இதைச் செய்தால் போதும்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *