பிவிஆர்-ஐநாக்ஸ் திரையரங்குகளுக்கு எதிராக, ஆடுஜீவிதம் இயக்குநர் பிளெஸ்ஸி போராட்டம் நடத்தப்போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொதுவாக திரையரங்குகளில் நாம் படங்களைக் காணும்போது QUBE, UFO, PXD, TSR போன்ற வாசகங்கள் படம் ஆரம்பிக்கும் முன்னர் ஒளிரும்.
இவை விர்ச்சுவல் பிரிண்ட் கட்டண சேவைகளை (Virtual Print Fee) வழங்கும் நிறுவனங்கள் ஆகும். இதற்கான கட்டணத்தினை தயாரிப்பாளர்களிடம் இருந்து திரையரங்குகள் வசூலித்துக் கொள்ளும்.
வாரம் ஒருமுறை என்ற அடிப்படையில் ஒரு காட்சிக்கு, ரூ.450 கட்டண சேவையாக வசூல் செய்கின்றனர்.
அதாவது மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் 1 வாரத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து, ரூ. 24,500 வரை திரையரங்குகள் வசூல் செய்கின்றன.
இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கருதிய கேரளா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் KFPA (Kerala Film Producers Association) மாற்று வழியாக, பிடிசியை (PDC) அறிமுகம் செய்தது.
கேரளா முழுவதும் உள்ள திரையரங்குகள் இந்த பிடிசியை பயன்படுத்த வேண்டும் என்று, தயாரிப்பாளர்கள் சங்கம் விரும்புகிறது.
ஆனால் பிவிஆர்-ஐநாக்ஸ் நிறுவனம் இதை ஏற்கவில்லை. இதனால் இரு தரப்பிற்கும் பிரச்சினை வெடித்தது.
இதையடுத்து தங்களது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த மஞ்சும்மெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், பிரேமலு படங்களை நிறுத்தியது பிவிஆர்.
மேலும் கேரளாவில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் டப்பிங் செய்து வெளியிடப்படும் மலையாள படங்களையும் திரையிடுவதை நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான பஹத் ஃபாசிலின் ஆவேசம், நிவின் பாலியின் வர்ஷங்களுக்கு சேஷம், உன்னி முகுந்தனின் ஜெய் கணேஷ் ஆகிய படங்கள் பிவிஆர்-ஐநாக்ஸ் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
இந்தநிலையில் ஆடுஜீவிதம் இயக்குநர் பிளெஸ்ஸி,” இந்தியா முழுவதும் ஆடுஜீவிதம் கடந்த 16 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 1௦-ம் தேதியில் இருந்து ஆடுஜீவிதம் படத்தை பிவிஆர் நிறுத்தி வைத்துள்ளது. ஏப்ரல் 13, 14 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனையான போதிலும் பிவிஆர் அதனைக் கருத்தில் கொள்ளவில்லை.
பிவிஆரின் இந்த செயலை பொதுமக்களும், சினிமா ஆர்வலர்களும் தட்டிக் கேட்க வேண்டும். 16 வருடங்கள் கஷ்டப்பட்டு படத்தினை உருவாக்கி உள்ளேன். படத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் என்னுடைய இயக்குநர் வாழ்க்கை முடிவிற்கு வந்துவிடும்.
படத்தை திரையிடுவதற்கான வழிகளைக் கண்டறியும்படி நான் திரையரங்கு உரிமையாளர்களைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன்”, என தெரிவித்து இருக்கிறார்.
இதற்கிடையில் பிவிஆர் திரையரங்கின் இந்த செயலைக் கண்டித்து, கொச்சியில் உள்ள பிவிஆர் லுலு முன்பு பிளெஸ்ஸி மேடைப்போராட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.
பிவிஆர் கொச்சியில் 22 ஸ்கிரீன்களையும், கேரளா முழுவதும் 44 ஸ்கிரீன்களையும் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 15௦௦-க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்கள் பிவிஆரிடம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ED கைதுக்கு எதிரான கெஜ்ரிவாலின் மனு: ஏப்ரல் 15ல் விசாரணை!
ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் பறிமுதல் செய்தது என்ன?: ED விளக்கம்!