ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு இன்று (ஜூன் 20) கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படம் இந்திய சினிமாவை உலக அரங்கில் திரும்பி பார்க்க வைத்தது. அந்த படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியிருந்தார். பிரமாண்ட பொருட் செலவில் உருவான பாகுபலி மற்றும் பாகுபலி 2 உலகம் முழுவதும் சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. ஒரு இந்திய திரைப்படம் இவ்வளவு வசூல் சாதனை செய்தது அதுவே முதல் முறையாக பார்க்கப்பட்டது. ஹாலிவுட் படங்கள் மட்டுமே செய்யும் வசூல் சாதனையை ஒரு இந்திய சினிமா செய்தது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.
இதன் மூலம் நடிகர் பிரபாஸ் மற்றும் எஸ்.எஸ்.ராஜமவுலி உலகம் முழுவதும் பிரபலமானார்கள். அதன் பின்னர் பிரமாண்ட பொருட்செலவில் பிரபாஸ் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ’சாகோ’ மற்றும் 2022 ஆம் ஆண்டு வெளியான ’ராதே ஷ்யாம்’ போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் தான் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகவிருந்த ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்டார் பிரபாஸ். பின்னர், இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டன.
ராமராக பிரபாஸ்
இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ராமராக நடிகர் பிரபாஸ், ராவணனாக சயிப் அலிகான், சீதா தேவியாக கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், படம் ஆரம்பித்ததில் இருந்தே படத்தை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர் நெட்டிசன்கள். அதன்படி இந்த படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பும், வெளியான பின்னரும் சந்தித்த விமர்சனங்கள் மற்றும் கண்டனங்களை இந்த தொகுப்பில் காணலாம்:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் முதன் முதலில் வெளியிடப்பட்டது.
இந்த டீஸரில் பிரபாஸ் கடலின் அடிவாரத்தில் தவம் செய்வது போல் காட்சியளித்தார்.
அதில், ”பிளவு படட்டும் இந்த பூமியும் ஆகாயமும், நியாயத்தின் கைகள் அநியாயத்தை அடியோடு வீழ்த்தும்”என்று பிரபாஸ் பேசும் வசனங்கள் இடம்பெற்றன.
ஆனால் இதில் உருவாக்கப்பட்ட 3டி தொழில்நுட்பம் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கும் கிண்டலுக்கும் உள்ளானது. அதில் பிரபாஸ் மீசையுடன் காணப்பட்டதால்… இவர் தான் ராமரா? ராமர் எப்போது மீசையுடன் காணப்பட்டார்? என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்து அமைப்புகள் கண்டனம்
பின்னர், இந்த டீசரை பார்த்து விட்டு இது தொடர்பாக மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு சத்யேந்திர தாஸ், உத்தரப்பிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து ‘ஆதிபுருஷ்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் 16 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதனை தொடர்ந்து படத்தின் புதிய போஸ்டரை ராம நவமியை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது.
இந்த நிலையில், இந்த புதிய போஸ்டர் தொடர்பாக மீண்டும் இப்படத்தின் படக்குழு மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மும்பை சகினாக்கா காவல் நிலையத்தில் மும்பை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான ஆஷிஷ் ராய் மற்றும் பங்கஜ் மிஸ்ரா மூலம் சஞ்சய் தினாநாத் திவாரி என்பவர் இந்து மத கதாபாத்திரங்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி புகார் கொடுத்தனர்.
மேலும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 (A), 298, 500, 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்ற கோரிக்கையுடன் புகார் அளித்தனர்.
இந்நிலையில் தான் மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸுடன் இப்படத்தின் புதிய ட்ரைலர் வெளியானது. அதையும் நெட்டிசன்கள் விட்டுவைக்கவில்லை. ”வரலாற்றுச் சிறப்புமிக்க ராமாயணத்தை இப்படி மட்டமான கிராபிக்ஸில் படமாக்கிய இயக்குநர் ஓம் ராவத்தை மன்னிக்கப் போவதில்லை”என்று தங்களது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள தரகா ராம மைதானத்தில் ஆதி புருஷ் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து ஜூன் 7 ஆம் தேதி படத்தின் இயக்குனரும், நடிகை கீர்த்தி சனோனும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தனர்.
நடிகைக்கு முத்தமிட்ட இயக்குநர்
இதையடுத்து வெளியே வந்த இருவரும், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் காரில் ஏறி கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை வழியனுப்ப இயக்குனர் ஓம் ராவத் காரின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அவரை மரியாதை நிமித்தமாக கட்டிப்பிடிக்க வந்த நடிகை கீர்த்தி சனோனுக்கு இயக்குனர் ஓம் ராவத் சட்டென முத்தம் கொடுத்தார்.
ஆதிபுருஷ் இயக்குனரின் இந்த செயல் இணையத்தில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இயக்குனரின் இந்த செயலுக்கு ஆந்திர மாநில பாஜக தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
ஆந்திர பாஜக மாநிலச் செயலாளர் ரமேஷ் நாயுடு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “உங்கள் கோமாளித்தனங்களை புனிதமான இடத்திற்கு கொண்டுவருவது அவசியமா? என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி Tv9 தொலைக்காட்சியில் பேசியபோது, ”கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, பறக்கும் முத்தம் கொடுப்பது போன்ற தகாத செயல்களின் ஈடுபடுவது திருமலை திருப்பதி கோவிலின் மரபுகளுக்கு எதிரானது. இது வெங்கடேசப் பெருமானின் பல பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளது, மேலும் நடிகை , திரைப்பட இயக்குனர் இப்படி நடந்து கொண்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இது ஒரு புனிதமான இடம், ஷூட்டிங் ஸ்பாட் அல்ல. திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, ஆதிபுருஷ் திரையிடப்படும் திரையரங்களின் முன் இருக்கைகளில் ஒரு இருக்கை அனுமானுக்கு ஒதுக்கப்படும் என்று ஆதிபுருஷ் படக்குழு அறிவித்தது. இதுவும் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளானது. படத்தை பார்ப்பதற்கு அனுமார் வரவா போகிறார் ஏன் இந்த வேண்டாத வேலை என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பினர்.
இந்நிலையில் தான் ஜூன் 16 ஆம் தேதி பல்வேறு கண்டனங்கள் மற்றும் கிண்டலுக்கு மத்தியில் வெளியானது ஆதி புருஷ். தமிழ்நாட்டில் இந்த படம் வெளியான திரையங்குகளில் எல்லாம் காற்று வாங்கியது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நேபாளத்தில் தடை
இதனிடையே நேபாளத்தில் இந்த படம் தொடர்பாக பிரச்சனை கிளம்பியது. ”நேபாளத்தின் ஜனக்பூரை ஆண்ட ஜனகனின் மகளாக அறியப்படும் சீதையை, ‘இந்திய தாயின் மகள்’ என்று ஆதிபுருஷ் திரைப்படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” என்று காத்மாண்டு நகர மேயரான பலன் ஷா தெரிவித்திருந்தார்.
“சீதை குறித்து ஆதிபுருஷ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபத்துக்குரிய வசனத்தை நீக்கும்படி, படத்தின் தயாரிப்பாளர்களை மூன்று நாட்களுக்கு முன் நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம்.
இந்த நிலையில், நேபாளத்தின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் சுய மரியாதையை காக்க வேண்டியது அரசு மற்றும் நேபாள குடிமக்கள் அனைவரின் பொறுப்பாக உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, சர்ச்சைக்குரிய வசனம் படத்தில் இருந்து நீக்கப்படும் வரை காத்மாண்டு நகரில் உள்ள எந்த திரையரங்கிலும் இந்திய சினிமாக்கள் திரையிடப்படாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
“படத்தில் இடம்பெற்றுள்ள சீதை குறித்த தவறான சித்தரிப்பை சரிசெய்யாமல் படத்தை திரையிட அனுமதித்தால், அது நேபாளத்தின் கலாசாரம் மற்றும் தேசிய அடையாளத்தின் மீது ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிடும்” என்று அவர் விளக்கமும் அளித்தார்.
இச்சூழலில் தான் , ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு இன்று (ஜூன் 20) கடிதம் எழுதியுள்ளது.
அதில், “ஆதிபுருஷ் திரைப்படத்தின் திரைக்கதை, வசனம் ஆகியவை இந்துக்களின் மத உணர்வையும் சனாதன தர்மத்தையும் புண்படுத்தும் வகையில் உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ராமன் மற்றும் ராவணன் கதாபாத்திரங்கள் வீடியோ கேமில் வரும் பொம்மை போல் காட்டப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி இப்படத்தின் வசனங்களும் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. அதனால் இப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, ஓடிடியில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். அதோடு இப்படத்தின் இயக்குனர் ஓம் ராவத், எழுத்தாளர் மனோஜ் சுக்லா மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தள்ள வேண்டும்” என்று அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம், ஆதிபுருஷ் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 340 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
செந்தில் பாலாஜி மனைவி கேவியட் மனு தாக்கல்!
’அமமுக இல்லாமல் அதிமுக ஜெயிக்க முடியாது’: டிடிவி தினகரன்