வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ஆதார்.
அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான ஆதார் படத்தில் கதை நாயகர்களாக கருணாஸ், அருண்பாண்டியன், காலா திலீபன், பாகுபலி பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த்தேவா இசையில், மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் ஆதார்.
கட்டிட தொழிலாளியான கருணாஸ் தன்னைவிட வயது குறைவான ரித்விகாவை திருமணம் செய்திருக்கிறார்.
கர்ப்பிணியாக இருக்கும் ரித்விகாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவருக்கு துணையாக இனியாவை விட்டு விட்டு செல்கிறார் கருணாஸ்.
காலையில் மருத்துவமனைக்கு வந்து பார்க்கும்போது குழந்தை மட்டுமே இருக்கிறது.
அவரது மனைவி ரித்விகாவை காணவில்லை என்பதுடன் அவருக்கு துணையாக இருப்பதாக கூறிய இனியாவும் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.
தனது மனைவியை காணவில்லை என்று கைக் குழந்தையுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார் கருணாஸ்.
புகார் மனு விசாரணையின் முடிவில் கருணாஸை அழைக்கும் இன்ஸ்பெக்டர் பாகுபலி பிரபாகரன், மற்றும் உயர் அதிகாரி உமா ரியாஸ்கான் இருவரும், உன் மனைவி காணாமல்போகவில்லை, அவள் பள்ளியில் படிக்கும் போது காதலித்தவருடன்
ஓடிப் போய் விட்டாள் என்று கூறி கேசை முடிக்க முயற்சிக்கின்றனர்.
என் மனைவி அப்படிப்பட்டவள் இல்லை என்று காவல் விசாரணை அதிகாரிகளிடம் மன்றாடுகிறார். ஆனால் போலீஸாரோ அவர்களது கருத்தில் உறுதியுடன் இருக்கின்றனர்.

கருணாஸின் மனைவி என்ன ஆனார்? இனியா எப்படி உயிரிழந்தார்? காவல்துறை சொன்னது உண்மையா? என்ற கேள்விகளுடன் வேகம் எடுக்கிறது
ஆதார் திரைப்படம்.
கருணாஸ் தனது அனுபவமான நடிப்பால் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
கட்டிடத் தொழிலாளியாகவே வாழ்ந்துள்ளார். அதே போல இன்ஸ்பெக்டராக வரும் பாகுபலி பிரபாகரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது.
இவர்களைத் தவிர அருண் பாண்டியன், உமா ரியாஸ்கான் இருவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இனியா மற்றும் ரித்விகா இருவரும் படத்தின் சோகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.
முதல் பாதியில் கருணாஸ் மனைவியை தேடும் படலமும், இரண்டாம் பாதியில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அவர்கள் தரும் லஞ்ச பணத்தை வாங்கிகொண்டு அரசு அதிகாரிகள் அரசு எந்திரத்தை எப்படி அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்
என்பதை ரத்தம் உறைய பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் கௌரவம், நலன்களுக்காக
சாமானியனின் உயிர் புல் பூண்டு போன்று மனித இரக்கம் இன்றி பயன்படுத்தப்படுவதை சமரசமின்றி அப்பட்டமாக தோலுரித்துள்ளார் இயக்குநர்.
சொல்ல வந்த கருத்தில் நேர்மை இருப்பதால் ஆதார் படம் இந்த வருடம் வெளியான படங்களில் தவிர்க்க முடியாத படப்பட்டியலில் இடம் பெறுகிறது.
இராமானுஜம்