தமிழ் திரையுலகம் பல ஜாம்பவான்களை நமக்கு அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறது. வாழும் காலத்திலும் சரி, மறைவுக்குப் பின்னும் சரி, ஒவ்வொருவரது தனித்துவத்தையும் உயர்த்திக் காட்டிச் சிலாகிக்க வைத்திருக்கிறது.
அப்படிப்பட்ட சிலரது படைப்புகள் எக்காலத்திற்கும் ஏற்றதாக விளங்குவதை நம்மால் கண்டுணர முடியும். ஆனால், அவர்களில் மிகச்சிலர் மட்டுமே தனிமனிதருக்கான முன்னோடிகளாக, வாழ்க்கை பாடங்களைப் போதிக்கும் ஆசான்களாக அமைந்திருக்கின்றனர்.
அப்படியொருவர் தான், மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் கே.வி.ஆனந்த். அவர் மறைந்தாலும் அவரது 57வது பிறந்தநாளான இன்று (அக்டோபர் 30) திரையுலகினர் பலரும் சிலாகித்து வருகின்றனர்.
ஏனென்றால் கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்த படங்களும் சரி, இயக்கிய படங்களும் சரி, வழமையான பொழுதுபோக்கு படங்கள் என்று புறந்தள்ள முடியாதவை. போலவே, அதற்கு முன்பான அவரது வாழ்வும் மிகத்தனித்துவமானது.
ஒரு பத்திரிகையாளராக..!
கே.வி.ஆனந்தின் பெற்றோர் பெயர் கரிமணல் முனுசாமி வெங்கடேசன் – அனுசுயா. பழவேற்காடு பகுதியில் சிறு வயதில் வாழ்ந்த ஆனந்த், சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் பயில்வதற்காகச் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். அங்கு இளங்கலை இயற்பியல் பயின்றவர், பின்னர் லயோலா கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
பால்ய வயதில் ஆனந்துக்குப் புகைப்படக்கலையின் மீது ஆர்வம் பிறந்தது. கல்லூரிக் காலத்தில் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்தது அதற்குத் தீனி போடுவதாக அமைந்தது. அந்த ஈடுபாடு அதிகமானபோது, கல்லூரிகளில் நடந்த புகைப்படப் போட்டிகளில் பங்கேற்றார். அதில் பல பரிசுகளும் வென்றார். அப்போது கிடைத்த நட்பு, அவரை ‘அடுத்தது என்ன’ என்ற எண்ணத்தை விதைத்தது.
இயற்கையின் அழகைத் தனது கேமிராவில் அடைக்க முயன்றவர், பின்னர் சமூக நடப்பைப் பதிவு செய்வதில் தனிக்கவனம் செலுத்தினார். அப்படித்தான் அவர் எடுத்த புகைப்படங்கள் கல்கி, இந்தியா டுடே, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, அசைடு உள்ளிட பல இதழ்களில் வெளிவந்தன.
தொண்ணூறுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த பல முக்கியமான சம்பவங்களை நேரடியாகச் சென்று புகைப்படம் எடுத்த அனுபவம் ஆனந்துக்கு உண்டு. போலவே, அப்போதிருந்த பல அரசியல், சினிமா, கலையுலக ஜாம்பவான்களைச் சந்தித்து அனுபவங்களும் அவருக்குண்டு.
பத்திரிகையாளராகப் பணியாற்றியபோதே, அவரைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களால் பாராட்டப்படுபவராக இருந்தார். சில நேரங்களில், அவர்களை ஆச்சர்யப்பட வைப்பவராகத் திகழ்ந்தார்.
ஆனந்துடன் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர்கள், இன்றளவும் அதனைச் சிலாகித்து வருவதைச் சமூக வலைதளப் பதிவுகளில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
’எப்போதும் பரபரப்பாகவும், அதேநேரத்தில் மிகநேர்த்தியான புகைப்படக்காரராகவும் விளங்கியவர்’ என்பதே அதிலிருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய சாராம்சம். அந்த அர்ப்பணிப்புமிக்க உழைப்பும் வேலையில் காட்டிய சிரத்தையும் இன்றைய தலைமுறையினருக்கான பால பாடங்கள்.
உதவி ஒளிப்பதிவாளராக..!
வெற்றிகரமான பத்திரிகையாளராக விளங்கியபோது, அப்போது திரையுலகில் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளராக இருந்த பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்தார் கே.வி.ஆனந்த்.
அந்த நேரத்தில் ஜீவா, அப்துல் ரஹ்மான், திருநாவுக்கரசு, எம்.எஸ்.பிரபு என்று பலர் அவரிடம் உதவி ஒளிப்பதிவாளர்களாக இருந்தனர். அந்த வரிசையில் கடைசி நபர் ஆனந்த் தான்.
ஒரு துறையில் பிரபலமாக இருந்துவிட்டு இன்னொரு துறையில் ‘பயிற்சியாளர்’ நிலையில் சேர்வதென்பதைப் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே பெற்ற அனுபவம் தனது ‘இருப்பை’ ஆங்காங்கே வெளிக்காட்டிவிடும். அதனால், சில நேரங்களில் குழப்பங்களும் மோதல்களும் கூட விளையும்.
அது நிகழாமல் இருக்க வேண்டுமானால், எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிற குணமும், ஏற்கனவே பெற்ற பெருமைகளைத் தலைக்கு ஏற்றிக்கொள்ளாத மனநிலையும் வாய்க்கப் பெற வேண்டும். அவற்றை கே.வி.ஆனந்த் கைக்கொண்டிருந்தார்.
அது மட்டுமல்லாமல் திருநாவுக்கரசு, எம்.எஸ்.பிரபுவோடு அவர் கொண்டிருந்த நட்பு அளப்பரியதாக இருந்தது. போட்டி பொறாமை எதுவுமில்லாமல், ஒளிப்பதிவு குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்கிற வழக்கம் அவர்களிடத்தில் இருந்தது. அதுவே, ஆனந்தையும் அவரது சகாக்களையும் வெற்றிகரமான ஒளிப்பதிவாளர்களாக இயங்க வைத்தது.
கோபுர வாசலிலே, அமரன், மீரா, தேவர் மகன், போன்ற படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றினர்.
தன்னால் ஒளிப்பதிவு செய்ய இயலாத நிலையில், அதனைத் திறம்படக் கையாளக்கூடிய கலைஞர்களைப் பரிந்துரை செய்யும் வழக்கம் கொண்டவர் பி.சி.ஸ்ரீராம். அப்படித்தான், அவரைத் தேடி வந்த வாய்ப்புகள் பல அவரது உதவியாளர்களுக்குச் சென்றடைந்தன.
அப்படித்தான் பிரியதர்ஷனின் ‘தேன்மாவின் கொம்பத்து’ படத்தில் ஒளிப்பதிவாளராக ஆனந்த் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒளிப்பதிவுக்கான தேசிய விருதையும் வென்றார். இதிலிருந்தே, பி.சி.ஸ்ரீராமிடத்தில் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் எத்தகையவை என்று உணர்த்தும்.
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், நண்பர் ஒருவர் எனக்குச் சொன்ன தகவல் இது. அதனால், அவர் விளக்கிய சம்பவம் அதற்கும் முன்னர் நிகழ்ந்ததாகக் கொள்ள வேண்டும்.
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த படத்திற்கான ‘பிரிவியூ’ நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு ‘ரீல்’ தவறாகத் திரையிடப்பட, அப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சிலர் பதைபதைத்திருக்கின்றனர். ஸ்ரீராம் அருகே இருந்த அந்நபர்கள், அதனை மாற்றச் சொல்வதற்காக புரொஜக்டர் அறை நோக்கி ஓடியிருக்கின்றனர். அவர்கள் அனைவருமே அப்போது வெற்றிகரமான ஒளிப்பதிவாளர்களாக இருந்தவர்கள். அவர்களில் ஒருவர் கே.வி.ஆனந்த். இதனை வெறுமனே ‘குரு பக்தி’ என்று சொல்லில் அடக்கிவிட முடியாது.
பிறந்த குழந்தையின் நாக்கில் இனிப்பு தடவும் வழக்கம் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்றும் உண்டு. அந்த நபரைச் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் வாழ்நாள் முழுக்க நினைவில் வைத்திருப்பார்கள். சில நேரங்களில் அந்த நபர்கள் எதேச்சையாக அவர்கள் வாழ்வில் வந்து போனவர்களாகவும் இருப்பார்கள்.
அதே போன்று, விஜயதசமியன்று தாம்பாளத்தில் அரிசியை நிரப்பி ஐந்து வயது நிரம்பிய குழந்தைக்கு ‘அ’ எழுதக் கற்றுக் கொடுப்பார்கள். அந்த நபர் ஆசிரியராகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அவர், அக்குடும்பத்தினரைப் பொறுத்தவரை சிறந்த மாண்புடையவராகக் கருதப்படுபவராகவும் இருப்பார்.
அந்த குழந்தை வளர்ந்து வாழ்வில் உயரங்களைக் காணும்போது, அந்த நபரை நினைவுபடுத்தும் வழக்கத்தைக் கைக்கொண்டிருப்பார்கள் அக்குடும்பத்தினர்.
அந்த வகையில், பி.சி.ஸ்ரீராமை ‘ஆதர்சமாக’ நினைத்து வாழ்ந்தவர்களில் முதன்மையானவர் கே.வி.ஆனந்த்.
மேற்சொன்னவற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ஏராளம்.
வெற்றிகரமான திரைக்கலைஞராக..!
காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், ஜோஷ், நாயக், விரும்புகிறேன், தி லெஜண்ட் ஆஃப் பகத்சிங், காக்கி, செல்லமே போன்ற படங்களில் பல பரீட்சார்த்த முயற்சிகளை வெற்றிகரமாகக் கையாண்டவர் கே.வி.ஆனந்த்.
அந்த காலகட்டடத்தில் அவர் மேற்கொண்ட நுட்பங்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தன. பல ஒளிப்பதிவாளர்கள் பின்னாட்களில் அதனைப் பின்பற்றினர்.
அப்படிப்பட்ட சூழலில், ‘கனா கண்டேன்’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானார் கே.வி.ஆனந்த். தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கும்விதமாக ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரு இளைஞனைச் சுற்றி நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை. இதன் திரைக்கதையாக்கத்தில் எழுத்தாளர்கள் சுபாவோடு இணைந்து பணியாற்றினார் ஆனந்த். போலவே, இதில் ஒளிப்பதிவாளராகச் சௌந்தர்ராஜன் பணியாற்றினார்.
ஒரு படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தின் கீழ் இயக்குனர் தனது பெயரை இட்டுக்கொள்ளும் வழக்கமிருந்த காலத்தில், தன் சகாக்களோடு டைட்டிலை பகிர்ந்துகொண்டார் ஆனந்த். இன்னொரு ஒளிப்பதிவாளர் உடன் பணியாற்றி, தனது கவனம் இயக்கத்தில் மட்டுமே இருக்கும் என்று வெளிக்காட்டினார்.
அப்படியொரு முடிவை கைக்கொள்வது அவரவர் விருப்பம் என்றபோதும், அதனைச் செய்து காட்டும் துணிச்சல் அவரிடத்தில் இருந்ததைப் பாராட்டத்தான் வேண்டும்.
’கனா கண்டேன்’ வெற்றி தோல்வி பற்றி யோசிக்காமல், அடுத்த படத்தை இயக்குவது குறித்த எண்ணமே ஆனந்துக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால், அவரோ ‘சிவாஜி’யில் மீண்டும் ஒளிப்பதிவாளராக இயங்கினார்.
ரஜினி, ஷங்கர் கூட்டணியில் பணியாற்றுவது சிறப்பானது என்று அவர் நினைத்திருக்கலாம். அதையும் மீறி, மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்படும் திரைப்படத்தில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று கூட எண்ணியிருக்கலாம்.
அப்படி நாம் சிந்திக்கும் அளவுக்கு, தான் இரண்டாவதாக இயக்கிய ‘அயன்’ படத்தை படு கமர்ஷியலாக தந்தார் கே.வி.ஆனந்த். அப்படத்தின் ‘விஷுவல்’ ரசிகர்களைத் திகைக்க வைப்பதாக இருந்தது.
பிறகு கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் ஆகிய படங்கள் தந்தார் கே.வி.ஆனந்த். இப்படங்கள் அனைத்தும் வெவ்வேறு வகைமையில் அமைந்தவை. கமர்ஷியல் சினிமாவுக்கான இலக்கணத்தில் இருந்து கொஞ்சம் கூடப் பிசகாதவை.
அதேநேரத்தில் மிகப்புதுமையான, துணிச்சலான சில விஷயங்களைச் சமூகத்திற்குச் சொல்லக்கூடிய கதை சொல்லலைக் கொண்டவை.
இன்றைய சூழலில், கே.வி.ஆனந்தைப் போல ஒருவர் வெற்றிகரமான ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் இயங்குவதென்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது.
எத்துறையில் பணியாற்றினாலும் பரபரப்பும் வேகமும் நேர்த்தியும் அவரது பணியில் நிறைந்திருந்தது. அவரது படைப்புகள் முழுமையைக் கொண்டிருந்தன. அதுவே சக மனிதர்களிடத்தில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது. அதுவே, அவரை என்றென்றும் நினைவுகூரவும் காரணமாகிறது.
அப்படிப்பட்ட கே.வி.ஆனந்த், தான் ஒரு ‘ஒளிப்பட பத்திரிகையாளர்’ என்று அடையாளம் காணப்பட்ட காலத்தையே பொற்காலமாக நினைத்தார். அது பத்திரிகையாளராக இருந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் பெருமை தரக்கூடிய விஷயம்.
கே.வி.ஆனந்த் பிறந்த தினமான இன்று, அவர் குறித்த எண்ணங்களை அசைபோடுவதுதான் எத்தனை சுகமானது..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி : விஜய் மரியாதை!
வாடகை கார் ஓட்டுநர்களை குறிவைத்து நூதன மோசடி! சிக்குவாரா ஏமாற்று பேர்வழி?
IPL : வெளியேறும் கே.எல். ராகுல்? கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் 4 அணிகள்!