டெல்லி கணேஷ். தமிழ் சினிமாவுல இப்படி ஒரு நடிகரை பார்த்ததில்லை என்று சொல்கிற அளவுக்கு தனித்துவமானவர். திரைக்கு முன்னும் பின்னும் பல லட்சம் ரசிகர்கள் வாஞ்சையோடு உற்றுநோக்குகிற ஒரு மனிதர்.
இவரது இயற்பெயர் கணேசன்.
1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் வல்லநாட்டில் பிறந்தவர் கணேசன். ஒரு சகோதரி, ஒரு சகோதரன், சிற்றன்னை பிள்ளைகள் என்று கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தவர்.
கிராமத்து வாழ்வுக்குரிய குறும்புகளும் சேட்டைகளும் நிரம்பியது அவரது பால்யம். பள்ளிப்படிப்புக்குப் பிறகு கல்லூரியில் சேர விரும்பிய கணேசன், குடும்பச்சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளானார்.
பதின்ம வயதுகளில் பிழைப்பு தேடி தொடங்கியது கணேசனின் முதல் பயணம். மதுரையில் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்தபோது, விமானப்படை தேர்வு குறித்த அழைப்பைக் கண்டார். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர், 1964இல் விமானப்படையில் சேர்ந்தார்.
டெல்லி தொடங்கி நாட்டின் எல்லைப்பகுதிகளில் சேவையாற்றும் பணி. போர்க்காலச் சூழலை நேரில் கண்ட அனுபவம். அனைத்துமாகச் சேர்ந்து, கணேசனின் மனதில் சில கேள்விகளை எழுப்பியது. வாழ்வு குறித்த பார்வையும் மாறியது.
அந்த காலகட்டத்தில், போரில் காயமடைந்த வீரர்களுக்காக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளே அதற்கான மருந்தாக அமைந்தது. நாடகங்களில் சின்னச் சின்ன பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய கணேசன், ஒருகட்டத்தில் விமானப்படையில் பெரும்பாலானோருக்குத் தெரிந்த முகமாக மாறினார். டெல்லியிலுள்ள தென்னிந்திய நாடக சபை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
பத்தாண்டு கால விமானப்படை வாழ்க்கை போதுமென்று தோன்றியபோது, சென்னை திரும்புவதே கணேசனின் எண்ணமாக இருந்தது.
1974இல் சென்னை திரும்பிய கணேசன், காத்தாடி ராமமூர்த்தி உட்பட அப்போதிருந்த நாடக கலைஞர்களின் குழுக்களில் இணைந்து நடித்தார். அதன் வழியே தனக்கென்று அபிமானத்தையும் பெற்றார்.
அப்படி நடித்த ஒரு நன்னாளில், இயக்குனர் கே.பாலச்சந்தரின் பார்வையில் விழுந்தார் கணேசன். அதன் விளைவாக, அவர் இயக்கிய ‘பட்டினப் பிரவேசம்’ படத்தில் முருகன் என்ற பாத்திரத்தில் நடித்தார். அதன் தொடர்ச்சியாக, ‘ஏர்ஃபோர்ஸ்’ கணேசன் என்ற பெயர் டெல்லி கணேஷ் என்றானது.
நாடகம், சினிமா என்று இரட்டைச்சவாரி கண்ட டெல்லி கணேஷ் மிகச்சிறந்த நடிகர் என்பதை அடுத்தடுத்து வந்த ஜெயபாரதியின் ‘குடிசை’, துரையின் ‘ஒரு வீடு ஒரு உலகம்’ போன்ற படங்கள் தெரியப்படுத்தின.
அதன் அடுத்தகட்டமாக, துரையின் ‘பசி’ படத்தில் நடித்து தீவிர சினிமா ரசிகர்களுக்குப் பிரியமானார்.
‘பொல்லாதவன்’ படத்தில் ரஜினிகாந்தோடு மல்லுக்கட்டும் பாத்திரத்தில் நடித்தபிறகு அனைவருக்கும் தெரிந்தவராக மாறினார்.
‘எங்கம்மா மகாராணி’ போன்ற சில படங்களில் நாயகனாக நடித்தபோதும், எந்தப் பாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருந்தார் டெல்லி கணேஷ். அதனால், இளம் வயதிலேயே மிகச்சிறந்த குணசித்திர நடிகர் என்ற பெயரைப் பெற்றார்.
ராஜ பார்வை, புதுக்கவிதை, எங்கேயோ கேட்ட குரல், சிவப்பு சூரியன், டவுரி கல்யாணம் என்று தொடர்ந்து மேலேறியது அவரது கிராஃப்.
அச்சமில்லை அச்சமில்லை, கல்யாண அகதிகள் என்று தொடர்ந்து பாலச்சந்தரின் படங்களில் இடம்பிடித்த டெல்லி கணேஷுக்கு ஒரு மகுடமாக அமைந்த படம் ‘சிந்து பைரவி’. அதில் மிருதங்க வித்வானாக தோன்றி, ரசிகர்களின் கண்களில் கண்ணீரை பெருக்கெடுக்க வைத்தார்.
இன்னொரு பக்கம், விசுவின் குடும்பச் சித்திரங்கள் பலவற்றில் டெல்லி கணேஷின் பங்களிப்பு ஒரு அங்கமாக அமைந்தது.
சம்சாரம் அது மின்சாரம் படத்தில் டெல்லி கணேஷ் தோன்றிய காட்சிகள் மிகக்குறைவு. ஆனால், அப்படி அவர் நடித்த காட்சிகள் அனைத்திலும் வீரியம் அதிகம். அதனை இன்றும் நாம் உணரலாம்.
புன்னகை மன்னன் படத்தில் கமலின் தந்தையாக டெல்லி கணேஷ் நடித்த பாத்திரம் அருவெருப்பை ஊட்டக்கூடியது. பின்னர் ‘நாயகன்’ படத்தில் அவரோடு தோன்றிய பாத்திரம் நம்மை நெகிழ்வூட்டியது.
தொண்ணூறுகளில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ் என்று பல நாயகர்கள், நாயகிகளோடு டெல்லி கணேஷ் நடித்த படங்கள் இன்றும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் இருக்கின்றன.
நடிக்க வந்த மிகச்சில ஆண்டுகளிலேயே நாயகன், நாயகியின் தந்தையாகத் தோன்றியவர், சில படங்களில் கொடூர வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
ருத்ரா, பட்டத்து ராணி, ஜாதி மல்லி என்று ஒரேநேரத்தில் அவர் நடித்த பாத்திரங்களில் ‘வெரைட்டி’ தெரியும்.
மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, பொற்காலம், ஆஹா, பொன்மனம், காதலா காதலா, தொடரும், பூவெல்லாம் கேட்டுப்பார் என்று டெல்லி கணேஷ் நடிப்புக்கு உதாரணம் காட்டப் பெரும்பட்டியலே உண்டு.
2000ஆவது ஆண்டுக்குப் பிறகு விஜய், அஜித், சூர்யா, சிம்பு, மாதவன், விக்ரம், விஷால், விமல் என்று அடுத்த தலைமுறை நடிகர்களோடும் கைகோர்த்தார் டெல்லி கணேஷ்.
தீயா வேலை செய்யணும் குமாரு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பாபநாசம், இரும்புத்திரை போன்ற படங்களில் 2கே கிட்ஸ்களுக்கும் தெரிந்த முகமாகத் திகழ்ந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார் டெல்லி கணேஷ்.
தொலைக்காட்சி தொடர்களைப் பொறுத்தவரை எத்தனையோ ஆயிரம் எபிசோடுகள் கண்டிருக்கிறார்.
இவை தவிர தொலைக்காட்சிப் படங்கள், குறும்படங்கள், விளம்பரப்படங்கள் என்று அனைத்திலும் சகலகலா வல்லவனாக திகழ்ந்தார்.
தனக்கு முந்தைய தலைமுறை தொடங்கி அடுத்தடுத்த தலைமுறைகளைக் கடந்து இன்றும் எல்லோருக்கும் தெரிந்த கலைஞனாகத் திகழ்வது சாதாரண விஷயமில்லை.
நடிப்புத்திறமையோடு உலகம் குறித்த நல்லதொரு பார்வையும் சக மனிதர்கள் மீதான நேசிப்பும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அப்படிப் பார்த்தால், கடிகார முள்ளின் நகர்வைப் போல முழுவட்டமான வாழ்வொன்றைக் கண்டவர் டெல்லி கணேஷ்.
அந்த நிறைவாழ்வு மங்காத நிலவொளியாய் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவு : ஸ்டாலின் இரங்கல்!