சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் இலங்கையை சேர்ந்த முத்தையா முரளிதரன். அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என 2020ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது.
இலங்கை தமிழர்களுக்கு எதிராக இனவெறியுடன் செயல்படும் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் தமிழரான விஜய்சேதுபதி நடிக்கலாமா என தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த படத்தில் நடிக்க வேண்டாம் எனமூத்த இயக்குநர் பாரதிராஜா விஜய்சேதுபதிக்கு பகிரங்கமாக கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
எதற்கும் பதில்கூறாமல் மெளனம் சாதித்து வந்த விஜய்சேதுபதி ஒரு கட்டத்தில் முத்தையா முரளிதரன் 800 படத்தில் நடிப்பதில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.
தற்போது மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம், ‘800’ என்ற தலைப்பில் விளையாட்டு சார்ந்த படமாக இதைத் தயாரித்துள்ளது.
இப்படத்தில் முரளிதரனாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் நடித்துள்ளார். இதில் முரளிதரன் மனைவி மதிமலர் ராமமூர்த்தியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.
எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு புக்கர் (2022) பரிசு பெற்ற ஷெஹான் கருணாதிலகா திரைக்கதை வசனத்தை இயக்குநருடன் இணைந்து எழுதியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா இன்று (செப்டம்பர் 5) மும்பையில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
வரலாற்று சாதனை மிக்க பல போட்டிகளை சச்சின் இந்தியாவுக்காகவும், முரளிதரன் தனது நாடான இலங்கைக்காகவும் விளையாடியுள்ளனர்.
ஸ்ரீதேவி மூவீஸின் மூத்த டோலிவுட் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் ‘800’ படத்தின் அனைத்து மொழிகளுக்குமான விநியோக உரிமையை வாங்கியுள்ளார்.
தமிழில் உருவாகி இருக்கும் இப்படம் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த டிரெய்லர் வெளியீட்டு விழா குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசுகையில், “டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மைதானத்தில் தனது ஆட்டத்தால் கோடிக்கணக்கான இந்தியர்களை மகிழ்வித்தவர்.
முரளிதரன், மற்ற பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல திரையுலக பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். ‘800’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது” என்றார்.
இராமானுஜம்
கொட்டித்தீர்க்கப்போகும் மழை : வானிலை மையம்!
”சனாதனத்தை அறிந்த நாங்கள் சொல்கிறோம்… அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்” – ஆ.ராசா