800 movie review

800 – விமர்சனம்!

சினிமா

நுனிப்புல் மேயும் அனுபவமா?

முத்தையா முரளிதரன். சர்வதேச கிரிக்கெட் ஆளுமைகளில் மிக முக்கியமானவர். சர்வதேசப் போட்டிகளில் பங்குபெறுவதற்கு முன் தொடங்கி, ஏற்ற இறக்கங்களுடன் கூடிய கிரிக்கெட் வாழ்வைக் கைக்கொள்வது வரை எல்லா வீரர்களுமே பல சவால்களை எதிர்கொண்டிருப்பார்கள் தான். அவர்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டது முரளிதரன் வாழ்க்கை. அதனைத் திரைப்படமாக உருவாக்குவது சாதாரண விஷயமில்லை. அதனைப் பரிட்சித்துப் பார்த்திருக்கிறது எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ள ‘800’.

எப்படியிருக்கிறது இந்தத் திரைப்படம்? முரளிதரன் தன் வாழ்வில் எதிர்கொண்ட சர்ச்சைகளை இப்படம் பேசியிருக்கிறதா?

மலையகத்தில் இருந்து

கண்டியைச் சேர்ந்த முத்தையா – லட்சுமி தம்பதியரின் மூத்த மகன் முரளிதரன். தமிழ்நாட்டில் இருந்து மலையகப் பகுதிக்குச் சென்று பின்னர் தாயகம் திரும்பிய சின்னசாமியின் மகன் தான் முத்தையா. அவர், தனது சகோதரர் மகன்களுடன் இணைந்து ஒரு பிஸ்கட் கம்பெனியை நடத்தி வருகிறார்.

1977ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரத்தில் முத்தையாவின் நிறுவனம் சூறையாடப்படுகிறது. அதன்பிறகு, குழந்தையாக இருந்த முரளிதரன் கண்டியிலுள்ள செயிண்ட் ஆண்டனி கல்லூரிக்கு அனுப்பப்படுகிறார். அங்கு கிரிக்கெட் விளையாட்டில் முழுமூச்சாக இறங்குகிறார். பயிற்சியாளர் சுனில் அறிவுரையின் பேரில் சுழற்பந்துவீச்சாளராக மாறுகிறார்.

தொடர்ந்து பள்ளி, கல்லூரி அளவில் வெற்றிகள் காணும் முரளிதரன் (மாத்தூர் மிட்டல்), அப்போது இலங்கை அணியின் கேப்டனாக இருந்த அர்ஜுன ரணதுங்காவின் கண்ணில் படுகிறார். அதன் விளைவாக, லண்டன் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணிக்குத் தேர்வு செய்யப்படுகிறார். ஆனாலும், ஒரு போட்டியில் கூட ஆடாமல் நாடு திரும்புகிறார். அது அவருக்குப் பெரும் மன உளைச்சலைத் தருகிறது.

அதன்பிறகு, குடும்பத் தொழிலில் ஈடுபடுமாறு பெற்றோரும் உறவினர்களும் கூறுகின்றனர். ஆனாலும், கிரிக்கெட்டே வாழ்க்கை என்பதில் முரளிதரன் உறுதியாக இருக்கிறார். தமிழ் யூனியன் கிளப்புக்காக ஆடுகிறார். அப்போது அவரது ஆட்டம் உச்சம் பெற, நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை அணியில் இடம்பெறுகிறார். முதல் போட்டியிலேயே விக்கெட்டுகளை அள்ள, சர்வதேச அளவில் கவனம் பெறுகிறார்.

அதன்பிறகு, ஆஸ்திரேலியா சென்று விளையாடுகையில் முரளிதரன் பந்தை எறிவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்காக எத்தகைய சோதனைகளுக்கு அவர் ஆட்பட்டார், எவ்வாறு சாதனை நாயகனாக மாறினார் என்பதைச் சொல்கிறது ‘800’ படத்தின் மீதி.

இலங்கை தேசிய அணிக்காக முரளிதரன் பங்கேற்றது இப்படத்தின் இரண்டாம் பாதியிலும், அவரது குழந்தைப் பருவம், பதின்பருவ கிரிக்கெட் ஆர்வம், தொடர் முயற்சிகளால் கிடைத்த நல்ல பந்துவீச்சாளர் எனும் அடையாளம் ஆகியன முதல் பாதியிலும் விவரிக்கப்படுகின்றன.

மலையகப் பகுதியில் இருந்து உருவான ஒரு கிரிக்கெட் வீரர் என்பதுதான் முரளிதரனின் ஆகப்பெரும் அடையாளம். கிரிக்கெட் உலகின் நட்சத்திரமாக மாறியபோதும், அதுவே அவர் மீதான சர்ச்சைகள் பெருகக் காரணமானது.

அதன் தொடர்ச்சியாக, சிங்கள மற்றும் ஈழத் தமிழ் மக்களின் வெறுப்புகளை அவர் எதிர்கொண்டதாகச் சித்தரிக்கிறது இத்திரைப்படம். இரு இன மக்களிடையே எழுந்த மோதல்களின்போது, முரளிதரன் நடுநிலைமையைப் பின்பற்றியதையும் சொல்கிறது. அவற்றில் பல காட்சிகள் பத்திரிகைச் செய்திகளின் வழியே நாம் அறிந்தவையாக உள்ளன என்பதுதான் திரைக்கதையின் பலவீனம்.

சிறப்பான ஒளிப்பதிவு

இருபதாண்டுகளுக்கு மேலான முரளிதரன் தோற்றத்தைத் திரையில் காட்ட உதவியிருக்கிறது அப்பாத்திரத்தில் நடித்த மாத்தூர் மிட்டல் பங்களிப்பு. மொழி தெரியாதபோதும், பெரிதாகப் பிசகின்றித் திரையில் வாயசைத்திருப்பதே அவரது நடிப்பார்வம் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லிவிடுகிறது. அவரது இருப்பு, அந்த வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார் எனும் தகவலையே நம் மனதில் இருந்து அகற்றிவிடுகிறது.

இதில் முத்தையாவாக வேல.ராமமூர்த்தி, தாய் லட்சுமியாக ஜானகி சுரேஷ், பாட்டி அங்கம்மாளாக வடிவுக்கரசி, இளம் அங்கம்மாளாக ரித்விகா, மதிமலர் ஆக மஹிமா, அர்ஜுனா ரணதுங்காவாக கிங் ரத்னம் மற்றும் நாசர், ஹரிகிருஷ்ணன், நரேன், திலீபன், வினோத் சாகர், சரத் லோகித்சவா, குழந்தை ரித்விக் உட்படப் பலர் நடித்துள்ளனர்.

இலங்கை வீரர்களாக நடித்தவர்களில் சிலரது தோற்றம் சம்பந்தப்பட்டவர்களை நினைவூட்டுகிறது. சங்கக்கரா ஆகச் சில நொடிகள் வருபவரும் அதில் அடக்கம். அதேபோல, இந்திய வீரர் இஷாந்த் சர்மா ஆக நடிக்கவும் பொருத்தமானவரைத் தேர்ந்தெடுத்துள்ளது படக்குழு.

அது போலவே சச்சின், சேவாக் உள்ளிட்டோரைத் தேர்வு செய்யக் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதால், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளையே தவிர்த்திருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி.

இப்படத்தில் மனிதத் தலைகளின் எண்ணிக்கைக்குப் பஞ்சமில்லை. அனைவருக்கும் முக்கியத்துவம் தந்தால் திரைக்கதை கொத்துக்கறி ஆகிவிடும் என்று முரளிதரனுக்கு நெருக்கமான மிகச்சிலரை மட்டுமே திரையில் காட்டியிருப்பது அருமையான விஷயம்.

இந்த படத்தின் திரைக்கதை வசனத்தை ஷெகன் கருணதிலகா உடன் இணைந்து ஸ்ரீபதி எழுதியுள்ளார். சில இடங்களில் சிங்கள வசனங்கள் வந்தாலும், அங்கெல்லாம் ஆங்கில சப்டைட்டில் இடம்பெற்றிருப்பது குழப்பங்களைத் தவிர்க்க உதவியிருக்கிறது.

முன்பாதி அளவுக்குப் பின்பாதி எழுத்தாக்கத்தில் நேர்த்தி இல்லை. அதற்கு படத்தின் பட்ஜெட்டை நினைவில் கொண்டு பணியாற்றியது காரணமா என்று தெரியவில்லை. அந்த இடத்தைக் கொஞ்சம் சரி செய்திருந்தால், இரண்டாம் பாதியும் தொய்வின்றி நகர்ந்திருக்கும்.

ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரின் பணியானது, படம் முழுக்க ‘ரிச் விஷுவல்ஸ்’ நிரம்பியிருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அவரது சிறப்பான ஒளிப்பதிவின் காரணமாக, இது பெரும் பட்ஜெட்டில் உருவான படம் என்ற எண்ணம் நமக்குள் நிறைகிறது.

பிரவீன் கே.எல். படத்தொகுப்பு சீராகக் கதை சொல்ல உதவியிருக்கிறது. கிரிக்கெட் மைதானக் காட்சிகளில் விஎஃப்எக்ஸ் உதவியுடன், நேர்த்தியான காட்சியாக்கம் என்ற நினைப்பை ஊட்டுகிறது. ஆனாலும், முழுப்படமும் பார்த்தபிறகு உருவாகும் திருப்தி மட்டும் கிடைக்கவே இல்லை.

விதேஷ் தயாரிப்பு வடிவமைப்பில் வேறொரு உலகத்தைக் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. கிப்ரானின் பின்னணி இசை, கிளாசிக் படங்களைப் பார்க்கும் அனுபவத்தை ஊட்டுகிறது.

இப்படத்தின் காட்சியாக்கம் பல வாழ்க்கை வரலாற்றுப் படங்களின் கலவையாக, க்ளிஷேக்களின் தொகுப்பாகத் தோன்றும். இதில் முரளிதரனுக்கும் கிரிக்கெட்டுக்குமான தொடர்பை முன்னிலைப்படுத்திய அளவுக்கு அவரது சூழல் காட்டப்படவில்லை. இப்படத்தின் பெரும்பலவீனம் அதுவே. அதனைச் செய்திருந்தால், இப்படத்தைக் கொண்டாடுபவர்களும் எதிர்ப்பவர்களும் ஒருசேரத் தத்தமது தரப்பு வாதங்களை முன்வைக்க வசதியாக இருந்திருக்கும். அந்த வகையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கூர்மையற்ற கத்தியைப் பயன்படுத்த முடியாமல் திணறுவது போன்ற அனுபவத்தைத் தருகின்றன.

800வது விக்கெட்

என்னைக் கேட்டால், மொத்தப்படமும் 800வது விக்கெட்டை முரளிதரன் வீழ்த்தும் கணத்தைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்வேன். ஒரு சுழற்பந்துவீச்சு சாதனையாளராக, அது அவருக்கு இன்னுமொரு விக்கெட். அவ்வளவுதான். ஆனால், தொடக்கம் முதல் அந்த மைதானத்தில் பேட்ஸ்மேனுக்கு எதிரே நிற்கும் கணம் வரை தொகுத்துப் பார்த்தால், முரளிதரனின் வாழ்க்கை ஒரு சாதனை. அந்த வகையில், அவரது கிரிக்கெட் சாதனைகளை விடத் தனிப்பட்ட வாழ்க்கையனுபவங்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்க வேண்டும். இயக்குனர் ஸ்ரீபதி திரையில் அதனை நிகழ்த்தவில்லை.

சிங்கள ஊடக உலகினரோ, அப்போது அதிகார மையத்தில் இருந்தவர்களோ, முரளிதரனை எவ்வாறு நோக்கினார்கள் என்பது இப்படத்தில் சொல்லப்படவில்லை. சக வீரர்கள் மத்தியில் அவருக்கான இடம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதும் பேசப்படவில்லை. மாறாக, யாழ்ப்பாணப் பகுதிக்கு ஐநா தூதுவராக முரளிதரன் சென்ற நிகழ்வு இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராக வரும் ஹரிகிருஷ்ணன், மலையகத்தைச் சேர்ந்த முரளிதரனின் சாதனைகளை ஏற்க மறுப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன், சிங்கள மற்றும் தமிழ் இன மக்களுக்கு இடையிலான மோதல்களும் கூட இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

ஒருவேளை மேற்சொன்ன அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, முரளிதரன் வளர்ந்த சூழலையும் அவரது மனப்போராட்டங்களையும் மட்டுமே இப்படம் முன்னிலைப்படுத்தியிருந்தால் எப்படியிருக்கும்? ‘அவற்றைப் புறக்கணித்தது ஏன்’ என்று சில எதிர்ப்புக்குரல்கள் எழுந்திருக்கும்; அதேநேரத்தில், முரளிதரன் குறித்த புதிய சித்திரம் ஒன்று பார்வையாளர்களிடம் உருவாகியிருக்கும். ஆனால், அது நிகழவில்லை.

அதுவே, இப்படத்தை முரளிதரன் வாழ்க்கை அனுபவங்கள் தொடர்பான நுனிப்புல் மேயும் மேம்போக்கான அனுபவமாக மாற்றிவிடுகிறது. அது சிலரைத் திருப்திப்படுத்தும்; சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது. ஒருவேளை முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை ஒரு வெப்சீரிஸ் ஆக எடுத்திருந்தால் இந்தக் குழப்பங்கள் நேர்ந்திருக்காது. படத்தில் விடுபட்ட அனைத்தையும் சொல்ல இயலாவிட்டாலும், மிகச்சில விஷயங்களையாவது சீரிய வகையில் உணர்த்த அது வழி வகுத்திருக்கும்.

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தனிமனித அமைதி எப்படி உலக அமைதிக்கு வழிவகுக்கும்?

டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *