2023-ஆம் ஆண்டில் வெளியான தென்னிந்திய திரைப்படங்களுக்கான, 68வது பிலிம்பேர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் சிறந்த தமிழ் திரைப்படமாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் – 1’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த படத்திற்காக, மணிரத்னம் சிறந்த தமிழ் இயக்குனராகவும் தேர்வாகியுள்ளார்.
சிறந்த தமிழ் திரைப்படம் (கிரிட்டிக்ஸ்) விருதை அனைவரின் மனதையும் கவர்ந்த ‘கடைசி விவசாயி’ படம் வென்றுள்ளது. இந்த திரைப்படம் முன்னதாக சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த தமிழ் நடிகருக்கான விருதை விக்ரம் படத்திற்காக கமல்ஹாசன் பெற்றுள்ளார். அதேபோல, சிறந்த தமிழ் நடிகைக்கான விருது ‘கார்கி’ படத்திற்காக சாய் பல்லவிக்கு வழங்கப்பட உள்ளது.
அதேபோல, சிறந்த தமிழ் நடிகர் (கிரிட்டிக்ஸ்) விருதுக்கு, ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக தனுஷும், ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படத்திற்காக மாதவனும் தேர்வாகியுள்ளனர். அதேபோல, சிறந்த தமிழ் நடிகை (கிரிட்டிக்ஸ்) விருதுக்காக ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த தமிழ் துணை நடிகர் விருது கார்கி படத்திற்காக காளி வெங்கட்டிற்கும், சிறந்த தமிழ் துணை நடிகை விருது வீட்ல விஷேசம் படத்திற்காக ஊர்வசிக்கும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த தமிழ் அறிமுக நடிகர் விருதுக்கு பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே), சிறந்த தமிழ் அறிமுக நடிகை விருதுக்கு அதிதி சங்கர் (விருமன்) ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.
பொன்னியின் செல்வன் – 1 படத்தில் தனது அற்புதமான இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ‘சிறந்த தமிழ் இசையமைப்பாளர்’ விருதை வென்றுள்ளார். அதே படத்திற்கு பிரம்மாண்டமாக ஒளிப்பதிவு செய்த ரவி வர்மன் ‘சிறந்த தமிழ் ஒளிப்பதிவாளர்’ விருதை வென்றுள்ளார்.
சிறந்த தமிழ் பாடலாசிரியர் விருதுக்காக தாமரை (மறக்குமா நெஞ்சம்), சிறந்த தமிழ் பின்னணி பாடகர் விருதுக்காக சந்தோஷ் நாராயணனன் (தேன்மொழி), சிறந்த தமிழ் பின்னணி பாடகி விருதுக்காக ஆன்டாரா நந்தி (அலைகடல்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் மற்றும் சீதா ராமம் ஆகிய படங்கள் விருதுகளை குவித்துள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குனர் (எஸ்.எஸ்.ராஜமவுலி), சிறந்த நடிகர் (ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண்), சிறந்த இசையமைப்பாளர் (எம்.எம்.கீரவாணி), சிறந்த பின்னணி பாடகர் (காலா பைரவா), சிறந்த நடன இயக்கம் (நாட்டு நாட்டு), சிறந்த வடிவமைப்பு என ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 7 விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த நடிகர் – கிரிட்டிக்ஸ் (துல்கர் சல்மான்), சிறந்த நடிகை (மிருணாள் தாகூர்), சிறந்த பாடலாசிரியர் (ஸ்ரீவெண்ணல சீதாராம சாஸ்திரி), சிறந்த பின்னணி பாடகி (சின்மயி) என சீதா ராமம் திரைப்படம் 4 விருதுகளை வென்றுள்ளது.
அதுமட்டுமின்றி, சிறந்த தெலுங்கு நடிகை (கிரிட்டிக்ஸ்) விருதையும் ‘விரத பர்வம்’ படத்திற்காக சாய் பல்லவி வென்றுள்ளார்.
மலையாளத்தில், சிறந்த படம், சிறந்த இயக்குனர் (ரத்தீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால்), சிறந்த நடிகர் (குஞ்சாக்கோ போபன்) ஆகிய 3 முக்கிய விருதுகளை ‘நான் தான் கேஸ் கொடு’ படம் வென்றுள்ளது.
கன்னடத்தில், சிறந்த படம், சிறந்த இயக்குனர் (ரிஷப் ஷெட்டி), சிறந்த நடிகர் (ரிஷப் ஷெட்டி), சிறந்த நடிகை – கிரிட்டிக்ஸ் (சப்தமி கவுடா), சிறந்த துணை நடிகர் (அச்யுத் குமார்), சிறந்த இசையமைப்பாளர் (அஜனீஷ் லோக்நாத்), சிறந்த பின்னணி பாடகர் (சாய் கணேஷ்) என காந்தாரா திரைப்படம் 7 விருதுகளை வென்றுள்ளது.
– மகிழ் Filmfare Awards South 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாரத்தின் இறுதிநாள் பங்குச்சந்தை: ஏற்றம் காணுமா?
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்!!!
சாம்பியன்ஸ் டிராபி 2025: பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு?
மத்திய அரசின் தொழில்நுட்பம் அல்லாத பணிகள்: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!