மாடர்ன் தியேட்டர்ஸ் தந்த இசை விருந்து ’வண்ணக்கிளி’!

Published On:

| By Selvam

உதயசங்கரன் பாடகலிங்கம்

சிறு வயதில் நாம் கேட்ட சில திரையிசைப் பாடல்கள் நம்முள் எரிச்சலை விதைத்திருக்கும். அப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ப அவை இல்லாதது, காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிய உணர்வைத் தந்திருக்கும். ஆனால், காலவோட்டம் ஏற்படுத்திய மாற்றத்தினால் அதே பாடல்கள் தேன் துளிகளாய் இனிக்கும் உணர்வைத் தரும். அது, வாழ்வு தந்த அனுபவத்தில் ‘எது ருசி’ என்ற தேடலின் விளைவு.

அப்படிச் சிறு வயதில் பாடாய் படுத்திய ‘வண்ணக்கிளி’ பாடல்கள், இன்று கேட்க ஆனந்தத்தைத் தருகிறது. தொண்ணூறுகளில் அப்படத்தின் பாடல் கேசட் வீட்டில் அவ்வப்போது ஒலிக்கும். அப்போதெல்லாம், அப்படத்தில் வரும் நாயகனின் பெயர் பூச்சி என்றும், நாயகி பெயர் வண்ணக்கிளி என்றும் குறிப்பிடுவார் எனது தந்தை. ’அதிலென்ன இருக்கு’ என்று அப்போது தோன்றியது.

போலவே, பெரிய நடிகர் நடிகைகள் இடம்பெறாத அந்தப் படம் பார்ப்பதற்குச் சுவாரஸ்யமாக இருக்குமென்றும், அப்பாடல்கள் ஒலிக்கும்போதெல்லாம் குறிப்பிடுவார். ‘மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் பெரும்பாலானவை அப்படித்தான் இருக்கும்’ என்றும் மறக்காமல் சொல்வார்.

சமீபத்தில் ‘வண்ணக்கிளி’ படத்தை யூடியூப்பில் பார்க்கையில் அதனை உணர முடிந்தது. திரைக்கதையோடும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களோடும் நாம் ஒன்றும் வகையில் அப்பாத்திரங்களின் பெயர்கள் இருப்பதைக் காண முடிந்தது.

’வண்ணக்கிளி’ வெள்ளித்திரையில் வெளியாகி இன்றோடு 65 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

சாதாரண கதை!

ஒரு பண்ணையார். அவருக்கு ஒரு மகள். மணம் முடிக்கிற வயதில் மகள் வீட்டில் இருக்க, ஜோதிடர் ஒருவரின் பேச்சைக் கேட்டு தனக்கு இன்னொரு கல்யாணம் நடந்தால் என்ன என்று யோசிக்கிறார் அந்தப் பண்ணையார். அவரது பார்வை, வீட்டிலும் தோட்டத்திலும் உதவிகரமாக இருக்கும் மாயனின் தங்கை வண்ணக்கிளி மீது விழுகிறது.

அதே நேரத்தில், ஊரையே அடித்து உலையில் போடும்விதமாகச் செயல்படும் ரவுடி பூச்சியின் பார்வையும் வண்ணக்கிளி மீதே இருக்கிறது.
பூச்சிக்கு ஏற்கனவே திருமணமாகிப் பத்து வயதில் ஒரு மகள் இருக்கிறார். ஆனால், பிரசவித்தவுடனேயே அவரது மனைவி இறந்துவிட்டார். அதனால், அவரும் இன்னொரு திருமணம் செய்ய நினைக்கிறார்.

இதற்கிடையே, மாயனைக் காதலிக்கத் தொடங்குகிறார் பண்ணையார் மகள் சரஸ்வதி. அவரைப் பெண் பார்க்க நகரத்தில் இருந்து வருகிறார் நடராஜன்.

எளிமையான, அழகான, கிராமத்துப் பெண் மனைவியாக வர வேண்டும் என்று நினைக்கும் நடராஜன், வண்ணக்கிளியைப் பார்த்த நொடியில் காதல் கொள்கிறார். அவரையே மணம் முடிக்க விரும்புகிறார். அது மாயனுக்கும் தெரிய வருகிறது.

நடராஜனைப் பார்க்க மாயன் நகரத்திற்குச் செல்ல, அந்த நேரத்தில் வண்ணக்கிளியைக் கடத்தி வந்து மணம் முடிக்கிறார் பூச்சி.

ஊர் திரும்பிய மாயனுக்கு அது அதிர்ச்சி தருகிறது. கோபத்தில் அவர் பூச்சியைக் கொல்லத் துடிக்கிறார். ஆனால், வண்ணக்கிளி தடுத்து விடுகிறார். ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ என்று ‘டயலாக்’ பேசுகிறார்.

அந்தச் சூழலிலும், ‘வண்ணக்கிளியை மறுமணம் செய்யத் தயார்’ என்று கடிதம் எழுதுகிறார் நடராஜன். ஆனால், வண்ணக்கிளியால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், மாயன் – சரஸ்வதி காதலை அறிந்து கொதிப்படைகிறார் பண்ணையார். மாயனைப் பொய் வழக்கில் சிறையில் தள்ளத் திட்டமிடுகிறார். அது பூச்சிக்குத் தெரிய வருகிறது.

அதன்பின் என்ன நடந்தது என்று சொல்கிறது ‘வண்ணக்கிளி’யின் மீதிக்கதை.

காதல், மோதல், வன்மம், சூழ்ச்சி, வெகுளி, விரக்தி, அகங்காரம், ஆவேசம் என்று அனைத்து உணர்ச்சிகளும் கலந்த ஒரு சாதாரண கதையைக் கொண்டது ‘வண்ணக்கிளி’ திரைப்படம். ஆனால், கே.வி.மகாதேவன் தந்த திரையிசைப் பாடல்கள் இதன் உயரத்தைச் சிகரத்தில் ஏற்றியது.

முத்தான பாடல்கள்!

டி.எம்.சௌந்தரராஜன் கோலோச்சத் தொடங்கிய அறுபதுகளில் வந்த படம் இது. ஆனாலும் இதில் சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், திருச்சி லோகநாதனை ஆண் குரல்களாக ஒலிக்க விட்டிருந்தார் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். பாடல்களை மருதகாசி எழுதியிருந்தார்.

‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ பாடல், இந்த படத்தில் பலருக்கும் தெரிந்த ஒன்று. மனோகரும் பி.எஸ்.சரோஜாவும் நடித்த அப்பாடல்காட்சி இன்றுவரை பலரால் நினைவுகூரப்படுகிறது. போலவே, இன்றைய இளைய தலைமுறையினரும் விரும்புகிற ஒரு துள்ளல் பாடல் ஆக விளங்குகிறது ‘சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு மத்தாப்பூ சுந்தரி ஒருத்தி மயிலாட வந்தாளாம்’ பாடல்.

இப்படத்தில் உள்ள ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க, மாட்டுக்கார வேலா, வண்டி உருண்டோட அச்சாணி தேவை, ஆசை இருக்குது மனசினிலே, ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே, சின்னபாப்பா எங்க செல்ல பாப்பா ஆகிய பாடல்களும் கற்கண்டாக இனிக்கும்.

இவை தவிர்த்து டி.ஆர்.ராமச்சந்திரன், டி.பி.முத்துலட்சுமி பாடி நடித்த ‘சாத்துக்குடி சாறு தானா பார்த்து குடி’ பாடல் நகைச்சுவையுடன் சந்தச் சுவை மிளிரும் வகையில் இருக்கும்.

மொத்தத்தில் ஒரு இசை விருந்தையே இந்தப் படத்தில் ரசிகர்களுக்குத் தந்தார் கே.வி.மகாதேவன். அவை என்றென்றைக்கும் அச்சுவையைத் தருவதாக அமைந்ததன் மூலமாக ‘கிளாசிக்’ மகுடத்தைச் சூடிக் கொண்டது.

இந்த படத்தில் சில கதாபாத்திரங்களுக்குப் பூச்சி, கரப்பான், ஈசல், குங்குமம் என்று பெயர் வைத்திருந்தது அன்றைய காலகட்டத்தில் சில சமூகத்தினர் இடையே அப்படிப்பட்ட பெயர் பிரயோகம் வழக்கத்தில் இருந்ததைக் காட்டுகிறது.

இதன் திரைக்கதை வசனத்தை கே.வி.வெங்கடாசலம் என்பவர் கையாண்டிருந்தார்.

காட்சிகளில் பெரிதாகப் புதுமை இல்லை என்றபோதும், ஒரு கதையில் எவற்றையெல்லாம் காட்சிகளாக வடித்து திரைக்கதை ஆக்கலாம் என்பதனை இப்படத்தில் தெரிந்து கொள்ள முடியும். இப்படத்தைக் காணும் ஒருவருக்கு, டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த நடராசன் பாத்திரம் திடீரென்று டி.பி.முத்துலட்சுமி நடித்த ஈசல் பாத்திரம் மீது காதல் கொள்வதே கொஞ்சம் துருத்தலாகத் தெரியும். ஏனென்றால், அதுவரை அப்பாத்திரம் வண்ணக்கிளியைக் காதலிப்பதாகச் சொல்லி வரும்.

அதேநேரத்தில், இப்படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் இன்றைக்கும் சுவாரஸ்யம் தரக்கூடியதாக இருக்கும்.

இதில் வயல்வெளியைக் காட்டும் பல காட்சிகள், மனோகரின் அறிமுகக் காட்சி போன்றவை மாடர்ன் தியேட்டர் ஸ்டூடியோவுக்கு வெளியே படம்பிடிக்கப்பட்டவை. அவற்றை ‘செட்’ காட்சிகளுடன் பொருத்தமாக இணைத்து ‘மாயாஜாலம்’ நிகழ்த்தியிருப்பார் ஒளிப்பதிவாளர் சம்பத்.

மனோகர், பி.எஸ்.சரோஜா, டி.ஆர்.ராமச்சந்திரன், டி.பாலசுப்பிரமணியம், ராமராவ், மைனாவதி, டி.பி.முத்துலட்சுமி, எம்.சரோஜா, சி.கே.சரஸ்வதி முதல் ‘சித்தாடை கட்டிக்கிட்டு’ பாடலுக்கு ஆடிய கள்ளபார்ட் நடராஜன் வரை அனைத்து கலைஞர்களும் இதில் சிறப்பாக நடித்திருந்தனர்.

முக்கியமாக, பிரேம் நசீர் இதில் இளம் நாயகனாகத் தோன்றியிருப்பார். அவரது நடிப்பு, நமக்கு ஜெமினியை நினைவூட்டுவதாக இருக்கும். அதற்கு, அன்றிருந்த நாடக பாணிக்கு நேரெதிரான நடிப்பை அவர் வழங்கியதும் ஒரு காரணம்.

இந்தப் படத்தை இயக்கியவர் டி.ஆர்.ரகுநாத். இவர், பழம்பெரும் இயக்குனர் ராஜா சந்திரசேகரின் சகோதரர். இவரது மகன் கார்த்திக் ரகுநாத் தமிழில் ‘மக்கள் என் பக்கம்’, ‘ராஜ மரியாதை’ போன்ற படங்களைத் தொண்ணூறுகளில் தந்தார்.

ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு, செயற்கைத்தனம் அற்ற காட்சிகள், இயல்பான மனிதர்களைப் பிரதிபலிக்கும் பாத்திர வார்ப்பு, சீராக நகரும் திரைக்கதை, அனைத்துக்கும் மேலே முத்தான பாடல்கள் உடன் எளிமையும் நேர்த்தியும் மிகுந்த பொழுதுபோக்கு படமாக அக்காலத்தில் அமைந்தது ‘வண்ணக்கிளி’.

இப்படியொரு படம் எத்தகைய சூழலிலும் வெற்றி பெறும். அந்த வகையில், இன்றைய கமர்ஷியல் வித்தகர்கள் காண வேண்டிய ஒரு படைப்பாகவும் விளங்குகிறது இப்படம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை வந்ததும் நேராக மாமல்லபுரம் சென்ற மகன் பலி : கதறும் தந்தை!

500 பேருக்கு வேலை: ஈட்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

அண்ணன் வர்றார் வழிவிடு… ‘கோட்’ ஸ்பெஷல் ஷோ-க்கு பெர்மிஷன் கிடைச்சாச்சு!

நித்யானந்தா ஆஜராக மறுப்பு : மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share