நடிகர்களுக்கு ரெட் கார்டு விதிக்கப்போவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்றது.
தேனாண்டாள் முரளி ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட்ட அனைவரும் தேர்தலில் வெற்றி பெற்றனர். புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்த பின் நேற்று (ஜூன் 18) காலை சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கால்ஷீட் சொதப்பல், ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்கள் சம்பந்தமாக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடிதம் எழுதுவது எனவும், அதற்கு மேலும் பழைய நிலையே தொடர்ந்தால் அந்த நடிகர்களை ஒப்பந்தம் செய்வதை தவிர்த்துவிடுவோம் என்றும் தலைவர் முரளி ராமசாமி அறிவித்தார். முதற்கட்டமாக 5 நடிகர்களுக்கு கடிதம் அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அந்த ஐந்து நடிகர்கள் யார் என்று அவர் பெயர் குறிப்பிடாததால் அவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடைசியாக நடிகர் வடிவேலு நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்புக்கு வந்த பின் வடிவேலு மீதான தடை நீக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்போது தடை விதிக்கப்பட வாய்ப்பு இருக்கக் கூடிய நடிகர்கள் யார் யார் என்று விசாரித்தபோது… விஷால், சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகிபாபு ஆகியோர்தான் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில்.
இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேசியபோது, “நீங்கள் சொன்ன தகவல் சரியானதுதான். ஆனால் அதனை நாங்கள் வெளிப்படையாக குறிப்பிட்டு பேச முடியாது” என்றனர்.
இந்த ஐந்து நடிகர்கள் மீதும் ரெட்கார்டு போடத் தயாராகும் அளவுக்கு அப்படி என்ன புகார்கள்? ஒவ்வொருவராய் பார்ப்போம்!
ஒரே நாளில் 3 படங்களில் நடிக்கும் யோகி
ஐந்து நடிகர்களில் தொடர்ச்சியாக, அதிக தயாரிப்பாளர்களால் குற்றசாட்டுக்கு உள்ளாகி இருப்பவர் காமெடி நடிகர் யோகிபாபு. காமெடி நடிகர்களின் கால்ஷீட் நெருக்கடி ஏற்பட்டபோது குறுகிய நாட்களில் விஜய், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்து காமெடி நடிகராக அசுரவளர்ச்சியை எட்டியவர் யோகிபாபு. அதன் பின்னர் ஒரே நாளில் மூன்று படங்களில் நடிக்கும் வழக்கத்தை கடைபிடிக்க தொடங்கினார். இதனால் இவரது கால்ஷீட்டை நம்பி படப்பிடிப்பை நடத்த முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
கால்ஷீட் சொதப்பும் அதர்வா
நடிகர் அதர்வா கதாநாயகனாக நடித்து வெளியான பெரும்பான்மையான படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியவையே. இருந்தபோதிலும் புதிதாக படத்தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அதர்வா கால்ஷீட் கிடைத்தால்கூட போதும் என்ற நிலை வந்த போது அவரது சம்பளத்தை கோடிக்கணக்கில் கேட்க தொடங்கினார். அப்படி ஒப்பந்தம் செய்த தயாரிப்பு நிறுவனங்களின் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது, கால்ஷீட் தேதிகளை சொதப்புவது என அவரது நடவடிக்கை தொடர்கிறது. அதனால் அதர்வாவை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பெரும்பண விரயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
கால்ஷீட்டை மாற்றிய எஸ்.ஜே.சூர்யா
மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். அதன் பின் தமிழ் சினிமாவில் வில்லன் வேடம் என்றாலே எஸ்.ஜே.சூர்யாவை அழைக்க தொடங்கினார்கள். இதனால் சம்பளத்தை அவர் அதிகரித்தார். ஒரு கட்டத்தில் அதிக சம்பளம் கொடுத்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே பிறருக்கு கொடுத்த கால்ஷீட்டை வழங்கினார். இது சம்பந்தமாக எஸ்.ஜே.சூர்யாவிடம் தயாரிப்பாளர்கள் கேட்க தொடங்கியபோது சம்பளத்தை அதிகமாக கொடுங்கள் அல்லது கொடுத்த சம்பளத்தை திருப்பி தருகிறேன் என கூற தொடங்கினார். இதனால் அவருக்கும் சிக்கல் உருவாகியிருக்கிறது.
தொடர்பு எல்லைக்குள் வெளியே விஷால்
இவர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட காரணங்களாக இருக்கிறது விஷால், சிலம்பரசன் சம்பந்தமான புகார்கள். விஷால் குறிப்பிட்ட நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வருவதில்லை என்பதுடன், தொடர்பு எல்லைக்குள் அவரது தொலைபேசி இருப்பதில்லை. தாமதமாக வருவது என்பதை கடந்து தொடர்ந்து படப்பிடிப்பிற்கு வராமல் தகவல் கூறாமலும் இருப்பார். இதனால் அவர் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ஏராளமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் விஷால் பதவியில் இருந்ததால் அவர் மீது புகார் கூறவோ, நடவடிக்கை எடுக்கவோ இயலாத நிலையில் தயாரிப்பாளர்கள் இருந்தனர். தற்போது தயாரிப்பாளர்கள் சங்க தலைமை மாறியிருந்தாலும் நடிகர் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளராக விஷால் இருக்கிறார். இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் புகாருக்கு உரியவரிடமே எப்படி பேச்சுவார்த்தை நடத்த இயலும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில்.
கமல்ஹாசன் படத்தில் சிலம்பரசன்
நடிகர் சிலம்பரசன் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒப்புக் கொண்ட அடிப்படையில் கால்ஷீட் வழங்காமல் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க தேதி கொடுத்திருக்கிறார். அதனால் சிலம்பரசன் மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் கொடுத்திருக்கிறார்.
இதன் அடிப்படையிலேயே நேற்றைய தினம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் முடிந்த பின் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஐந்து நடிகர்கள் என முரளி ராமசாமி கூறியிருக்கிறார்.
அம்பலவாணன்
ஐந்து நடிகர்களுக்கு தடை: அதிரடியில் இறங்கும் தயாரிப்பாளர்கள் சங்கம்!
சென்னையில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மைய இயக்குநர்
செந்தில் பாலாஜி வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு!