கோவையில் நேற்று (அக்டோபர் 8) யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யுவன் சங்கர் ராஜா தனது இசை மற்றும் குரல் மூலம் ஏராளமான ரசிகர் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கிறார். இவரது ரசிகர்கள் பலர் “நான் யுவன் சங்கர் ராஜா வெறியன்” என்று கூறுவதும் உண்டு.
இவர் படங்களில் இசையமைப்பது மட்டுமல்லாது தனது ரசிகர்களுக்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்த வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள எஸ்.என்.எஸ் கலை அறிவியல் கல்லூரியில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி அக்டோபர் 8 மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக யுவன்சங்கர் ராஜா ஏற்கனவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இசை நிகழ்ச்சியை காண்பதற்கு அதிகமான கூட்டம் வந்ததால் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனாலும் நிகழ்ச்சியைக் காண வந்தவர்கள் அங்கிருந்த கல்லூரி சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே செல்ல முயன்றுள்ளனர்.
இதனால், திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த சிறப்புப் பெண் உதவி ஆய்வாளர் பிலோமினா என்பவர் உட்பட 5 மாணவர்கள் காயமடைந்தனர்.
சுவர் இடிந்ததையும் கவனிக்காமல் பலர் விழுந்தவர்கள் மீது ஏறிச் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியிலிருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், நிகழ்ச்சிக்கு அதிக கூட்டம் வரும் என்பதால் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா? என்பது குறித்தும் அனைத்து துறைகளிடமும் உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்தும் சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோனிஷா
இயக்குநர் ராமின் அடுத்த படம்: தலைப்பு என்ன?
மகளிர் ஆசியக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா!