பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற பான் இந்தியா திரைப்படங்களின் மூலம் மாபெரும் வசூல் சாதனை படைத்த இயக்குநர் ராஜமெளலி .
இவர் 1973-ஆம் ஆண்டு, அக்டோபர் 10-ஆம் தேதி கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் தீவிர சிவன் பக்தர்கள். இவர்கள் ஸ்ரீசைலம் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வந்த பின்னர், ராஜமெளலி பிறந்ததால், அவரது பெயருக்கு முன்னால் ஸ்ரீசைலா ஸ்ரீ ராஜ மெளலி என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது.
சிறு வயதிலிருந்தே ராஜமெளலி பெற்றோர்கள் அவருக்கு ராமாயணம், மகாபாராதம், பகவத்கீதை போன்ற புராண கதைகளை சொல்லிக்கொடுத்தனர்.
சிறு வயதில் பள்ளி பாடங்களை படிப்பதை விட, கதைகள் படிப்பதில் அதிக நாட்டம் கொண்டவராக ராஜமெளலி இருந்தார்.
தான் படித்த கதைகளை அவர் தனது நண்பர்களுக்கு சொல்வதன் மூலமாக, சிறந்த கதை சொல்லியாகவும் ராஜமெளலி அறியப்பட்டார்.
வெங்கடேஸ்வர ராவ் என்ற ஒளிப்பதிவாளரிடம் முதல்முறையாக உதவியாளராக தனது பணியை துவங்கினார் ராஜமெளலி.
சில பேட்டிகளில் தனது இளமை காலம் குறித்து ராஜமெளலி, “என்னுடைய 20-களில் நான் எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறேன் என்ற தெளிவு எனக்கு இருந்ததில்லை. நான் எதிர்காலம் குறித்து திட்டமிடாததால் எனது தந்தை அடிக்கடி என்னை திட்டுவார்.
அவரது நச்சரிப்பில் இருந்து தப்பிக்கவே திரைப்படங்கள் பார்க்க துவங்கினேன். பின்னர் தான் எனக்கு திரைப்பட இயக்கத்தின் மீது காதல் ஏற்பட்டது” என்று கூறியிருக்கிறார்.

தெலுங்கு தேசம் கட்சிக்காக சில விளம்பரங்களை தயாரித்த ராஜமெளலி, சாந்தி நிவாசம் என்ற தெலுங்கு சீரியலை இயக்கினார்.
“அந்த நாட்களில் நான் 17-மணி நேரம் உழைத்ததால் என்னை பேய் என்று அனைவரும் அழைப்பார்கள்” என்றும் ராஜமெளலி கூறியிருக்கிறார்..
2001-ஆம் ஆண்டு ராகவேந்திர ராவ் தயாரிப்பில், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற திரைப்படத்தை முதன் முதலில் ராஜமெளலி இயக்கினார். இந்த படம் பெரிதாக பேசப்படவில்லை.
இதற்கு முன்பு சீரியலில் பணிபுரிந்ததால், படப்பிடிப்பின் போது தனக்கு கிரேன் கூட இயக்க தெரியவில்லை என்றும் ராஜமெளலி தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தை தொடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, சிம்ஹாத்ரி என்ற ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் ஹிட் கொடுத்து தெலுங்கு சினிமாவை தன் பக்கம் பார்க்க வைத்தார் ராஜமெளலி.
தொடர்ந்து, சை, ரக்பை, சத்ரபதி என அடுத்தடுத்து ஹிட் கொடுக்க தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆனார் ராஜமெளலி.
இவரது படங்கள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ரவி தேஜா, அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் நடித்த விக்ரமாகுடு திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் சிவா இயக்கத்தில் சிறுத்தையாக இப்படம் வெளியானது.
ராம் சரண், காஜல் அகர்வால் நடித்த மகதீரா படம் தமிழில் மாவீரன் என்ற தலைப்பில் வெளியானது.

கதை சொல்லும் உத்தி, திரைக்கதைக்காக மெனக்கெடல், பிரம்மாண்ட ஒளிப்பதிவு என இவரது படங்களுக்கென தனித்த அடையாளத்தையும், ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கினார்.
நான் ஈ திரைப்படத்தை அவர் இயக்கியபோது, ஈ வைத்தெல்லாம் படம் இயக்குவார்களா என கேலியாக விமர்சிக்கப்பட்டாலும், இந்த படத்தின் கலெக்ஷன் நான் ஈ திரைப்படத்தின் வெற்றியை பேச வைத்தது.
40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நான் ஈ திரைப்படம் 125 கோடி கலெக்ஷன் செய்து கேலி பேசியவர்களின் வாயை அடைக்க வைத்தது.
இந்திய திரையுலகமே பார்த்து வியந்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் ராஜமெளலி உலகம் அறியும் இயக்குனரானார்.
இந்திய சினிமாவில் வசூல் வேட்டை நடத்திய இத்திரைப்படம், பல ரெக்கார்டுகளை பிரேக் செய்தது.
இந்தி மொழியில் டப் செய்யப்பட்டு மிக விரைவில் 100 கோடி வசூல் சாதனை செய்த முதல் திரைப்படம் இது தான். பல விருதுகளை இந்த படம் அள்ளி குவித்தது.

இந்திய சினிமா என்றாலே பாலிவுட் திரைப்படங்கள் தான் என உலகளவில் பேசப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், பாகுபலி வெற்றியின் மூலம் தென் இந்திய சினிமா மீது உலக சினிமா பார்வையை படரச்செய்தார் ராஜமெளலி.
பாகுபலி இரண்டாம் பாகம் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. பாகுபலி இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. வசூல் சாதனையில் தொடர்ந்து அசைக்கமுடியாத சக்கரவர்த்தியாக வலம் வந்த ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், வெளியான முதல் நாளில் 240 கோடி வசூல் செய்தது.
இப்படி தனது பல படங்களிலும் ஹிட் கொடுத்து, தனித்துவமான இயக்கத்தால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ராஜமெளலி இந்திய சினிமாவின் நம்பிக்கை.
இயக்குனர் ராஜமெளலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
செல்வம்