உதய் பாடகலிங்கம்
’கலைப்படங்கள் எடுப்பது எளிது; கமர்ஷியல் படங்கள் எடுப்பது கடினம்’. திரையுலகில் அற்புதமான கலைப்படைப்புகளைத் தந்த இயக்குனர்கள் பலர் சொன்ன, சொல்கிற வார்த்தைகள் இவை.
அதனால்தான் எண்பதுகளில் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன் கோலோச்சிய அதேநேரத்தில் முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படங்களைத் தந்த எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் போன்ற இயக்குனர்கள் பெரிதாகக் கொண்டாடப்பட்டார்கள். அவர்களுக்கு முன்னும் பின்னும், அந்த வரிசையில் நிறைய இயக்குனர்கள் போற்றப்படுகின்றனர். அதுவே, பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே நிறைத்திருக்கும் கமர்ஷியல் படமொன்றைத் தருவது எவ்வளவு சிரமங்கள் நிறைந்தது என்பதைச் சொல்லிவிடும்.
அந்த வகையில், ‘உங்களால் ஒரு கமர்ஷியல் படத்தைத் தர முடியுமா’ என்ற சிலரது கேள்விக்கு இயக்குனர் பாலு மகேந்திரா தந்த பதிலே ‘நீங்கள் கேட்டவை’ திரைப்படம். அது ஒரு வெற்றிப்படம். ஆனாலும், அது வெளியான காலகட்டத்தில் ‘இதையா நாங்கள் கேட்டோம்’ என்ற விமர்சனங்கள் அவரிடத்தில் முன்வைக்கப்பட்டன.
1984, ஜுன் 28 அன்று ‘’ வெளியானது. அந்தப் படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அது எப்படிப்பட்ட எண்ணத்தை நம்மிடத்தில் ஏற்படுத்துகிறது?
ரொம்பச் சாதாரணமான கதை!
கணவனை இழந்த கைம்பெண் ஒருத்தி, தனது இரு மகன்களோடு ஒரு மலைப்பாங்கான பிரதேசத்தில் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார். ஒருநாள், நகரத்தில் இருந்து வந்த ஒரு காமுகனால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்கப்பட்டு, அவர் கொல்லப்படுகிறார். அந்த நபரைக் கண்ணால் காண்கின்றனர் அவரது மகன்கள்.
பத்து வயது கூட நிரம்பாத அவர்களால், அவரை எதுவும் செய்ய இயலவில்லை. அந்த நபர் தப்பியோடி விடுகிறார்.
தாயின் ஈமச்சடங்குகள் முடிந்த இரண்டொரு நாட்களில், அவ்வூருக்கு வரும் பார்வைத்திறனற்ற ஒரு முதியவருடன் இளைய மகன் சென்றுவிட்டதாகச் சொல்கின்றனர். காரணம், அந்தச் சிறுவனின் சங்கீத மோகம்.
தங்கை மரணத்தைக் கேள்விப்பட்டு, ராணுவத்தில் பணியாற்றும் அப்பெண்ணின் சகோதரர் அவ்வூருக்கு வருகிறார். அந்த இடத்தின் வெறுமையைத் தாங்க முடியாமல், தங்கையின் மூத்த மகனை சொந்த ஊருக்கு அழைத்துப் போகிறார்.
ஆண்டுகள் உருண்டோடுகின்றன.
அந்தச் சகோதரர்களில் மூத்தவர் களரி முதலான நாட்டுப்புறத் தற்காப்புக் கலைகளில் வல்லவராகத் திகழ்கிறார். இளைய மகனோ, மெட்ராஸில் ஒரு புகழ்வாய்ந்த இசைக்கலைஞராக இருக்கிறார்.
அந்த சகோதரர்களின் மனதைக் கோரப்படுத்திய அந்த காமுகன், ஒரு பெரிய மனிதராக மெட்ராஸில் இருந்து வருகிறார்.
தாய்மாமா மறைவுக்குப் பின்னர், பிழைப்பு தேடி மெட்ராஸ் வருகிறார் மூத்த சகோதரர். ஒரு ஸ்டண்ட் இயக்குனரிடம் உதவியாளராகச் சேர்கிறர்.
சந்தர்ப்ப சூழ்நிலையால், அவர் தனது தம்பியோடு மோத வேண்டிய நிலை உருவாகிறது.
அப்போது, தனது சகோதரனோடு மோதுகிறோம் என்ற உண்மையை அவர் அறிந்தாரா, பல ஆண்டுகளாகத் தாங்கள் பழி தீர்க்கக் காத்திருக்கும் அந்த நபரை அவர்கள் மீண்டும் சந்தித்தார்களா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
எண்பதுகளில் வெளியான பல ‘கமர்ஷியல்’ திரைப்படங்களில் இது போன்றதொரு கதையைக் காண முடியும். அந்த வகையில், ‘நீங்கள் கேட்டவை’யின் கதை ரொம்பச் சாதாரணமானது. ஆனால், அதற்கு இயக்குனர் பாலு மகேந்திரா கொடுத்த திரை வடிவம் ரொம்பவே அசாதாரணமானது. அந்த காலகட்டத்தில் மட்டுமல்லாமல் இன்றும் கூட நமக்கு வித்தியாசமான காட்சியனுபவத்தைத் தரவல்லது.
வழக்கமாக, இது போன்ற ‘பழிக்குப் பழி’ வகையறா படங்களில் வில்லனை நாயகன் கொல்வார். இதில், நாயகர்கள் இருவரும் அவரைப் போலீஸிடம் ஒப்படைப்பதாகப் படத்தின் முடிவு அமைந்திருக்கும். இதுவே, அப்போது வெளிவந்த ஆக்ஷன் படங்களின் மீது பாலு மகேந்திரா எத்தகைய விமர்சனத்தைக் கொண்டிருந்தார் என்பதனைப் புலப்படுத்தும்.
வித்தியாசமான ‘காம்பினேஷன்’!
எண்பதுகளில் வெளியான பெரும்பாலான திரைப்படங்களில் நாயகன், நாயகி, வில்லன், குணசித்திர நடிகர் நடிகைகள் எவ்வாறு தோற்றமளித்தார்களோ, அவ்வாறு ‘நீங்கள் கேட்டவை’யில் நடித்தவர்கள் தென்படமாட்டார்கள். அவர்களது ஒப்பனை, ஆடைகள், நடிப்பு பாணி என்று எல்லாமே முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
தியாகராஜன், பானுசந்தர் இதில் நாயகர்களாக நடித்திருந்தனர். ‘நீங்கள் கேட்டவை’க்குப் பின் இருவருமே ஆக்ஷன் படங்களில் இடம்பிடித்தனர். அந்த வகையில், அவர்களது ஏற்றத்திற்கு வழி வகுத்த படம் இது என்றும் சொல்லலாம்.
அர்ச்சனா நாயகியாக அறிமுகமான படம் இது. ஜெய்சங்கர் இதில் வில்லனாக நடித்திருந்தார்.
செந்தாமரை, ஒய்.ஜி.மகேந்திரன், வனிதா என்று அன்றைய காலகட்டத்தில் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த சில முகங்களும் இப்படத்தில் உண்டு. அவர்கள் மட்டுமல்லாமல் மலையாள நடிகரான பாலன் கே.நாயர் இதில் பானுசந்தரின் தாய்மாமனாகத் தோன்றியிருந்தார்.
வழக்கமாக ஒரு பாடலுக்கு நடனமாடும் வழக்கத்தைக் கொண்டிருந்த ‘சில்க்’ ஸ்மிதாவை ஒரு பாத்திரத்தில் நடிக்க வைத்த பெருமை பாரதிராஜா, கங்கை அமரன் போலவே பாலு மகேந்திராவுக்கும் உண்டு. இதில் நான்கைந்து காட்சிகள் அவர் இடம்பெற்றிருந்தார்.
இது போன்ற வித்தியாசமான ‘காஸ்ட்டிங்’கை மிகச்சில படங்களில் மட்டுமே நாம் காண முடியும்.
இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை கிருபா வடிவமைத்திருந்தார். கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியை ஜுடோ ரத்னம் அமைத்திருந்தார். அக்காட்சிகள் இன்றும் நம்மை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
பிளாஷ்பேக்கும் சமகாலமும் மாறி மாறி வரும் தொடக்கக் காட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தாத அளவுக்கு வாசுவின் படத்தொகுப்பு இருந்தது.
இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் இப்படத்தின் உயரத்தை சிகரத்திற்கு ஏற்றின என்றே சொல்ல வேண்டும்.
‘கனவு காணும் வாழ்க்கை’, ‘பிள்ளை நிலா’ போன்ற மெலடி மெட்டுகள் மென்மையை மனம் உணரும் தருணங்களுக்கான ‘பிளே லிஸ்ட்’டில் இடம்பெறத்தக்கவை. ‘ஓ வசந்த ராஜா’, ‘அடியே மனம் நில்லுன்னா நிக்காதுடி’, ‘நானே ராஜா’ பாடல்கள் இன்றும் நமக்குள் துள்ளலாட்டத்தை விதைக்கும் தன்மை கொண்டவை. பின்னணி இசை நிறைக்கும் பரபரப்பு பற்றித் தனியே பேச வேண்டிய தேவையில்லை.
இந்தப் படத்திற்கு திரைக்கதை வசனம் அமைத்து ஒளிப்பதிவு செய்து இயக்கிய பாலு மகேந்திரா, டைட்டில் கார்டில் கதைக்கு நேராகத் தனது மனைவி அகிலாவின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னிருக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை.
’நீங்கள் கேட்டவை’ திரைக்கதை அப்போது வெளியான படங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டதாக இருந்தது. ஆனால், அடிப்படையான கதையும் சில சம்பவங்களும் ‘க்ளிஷே’ தன்மை கொண்டவையாக இருந்தன. அவற்றைக் காட்சியாக்கம் செய்த விதத்தில் வித்தியாசத்தைப் புகுத்தியிருந்தார் பாலு மகேந்திரா.
பூர்ணிமாவின் பாத்திரம் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாவதைத் திரையில் அவர் காட்டவில்லை.
இளைய சகோதரன் இசையார்வத்தால் ஒரு சாலையோரக் கலைஞருடன் சென்றுவிட்டார் என்பது கூட பானுசந்தர் பேசும் வசனம் வழியாகத்தான் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.
தியாகராஜன் தான் சிறு வயதில் தான் பார்த்த பூர்ணிமாவின் இளைய மகன் என்பதனை வில்லன் ஜெய்சங்கர் பாத்திரம் உணருமிடம், இக்கதையின் முக்கியத் திருப்பமாகச் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், அதனை வெறுமனே தனது மகள் கொண்டுவரும் ஆல்பத்தைக் காண்பதன் வழியாக அவ்வுண்மையை அந்த நபர் தெரிந்துகொள்வதாகக் காட்டியிருப்பார் இயக்குனர். அதனை நியாயப்படுத்துகிற விதமாக, தியாகராஜன் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மகள் பாத்திரம் வருவதாகக் காட்டியிருப்பார்.
உண்மையைச் சொன்னால், மிகச்சிறிய கதையொன்றை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள பாத்திரங்களைத் தனித்தன்மை மிக்கதாகப் படைத்து, வழக்கமான காட்சிகளை வேறொரு கோணத்தில் சொல்வதன் மூலமாக, காட்சியாக்கத்தை வழக்கத்திற்கு மாறானதாக உணர வைக்க முடியும் என்று ‘நீங்கள் கேட்டவை’யில் நிரூபித்திருந்தார் பாலு மகேந்திரா. இந்த கதை சொல்லல், நாம் சிலாகித்த பல கமர்ஷியல் படங்களில் நாம் காண முடியாதது.
இன்று நாம் ஒரு வித்தியாசமான கமர்ஷியல் படங்களைப் பார்க்க நேர்ந்தால், அவற்றில் இந்த பாணியை உணர முடியும். அந்த வகையில், ‘நீங்கள் கேட்டவை’ அவற்றைப் படைப்பதற்கான முன்னோடி என்றும் சொல்லலாம்.
வெளியே தெரியாத உழைப்பு!
பிலிம்கோ நிறுவனம் இப்படத்தைத் தயாரித்தது குறித்து யூடியூப்பில் வெளியான பேட்டியொன்றில் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றிய எம்.கபார்.
’கனவு காணும் வாழ்க்கை பாடலின் ஓரிடத்தில் வரும் சவ ஊர்வலத்தைக் காட்ட, மலைப்பாதையை ஒட்டி சுமார் நூறு அடி உயரத்திற்கு மேடை அமைத்துப் படம்பிடித்தது எவ்வளவு சிரமமாக இருந்தது’ என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். பாலு மகேந்திராவின் வற்புறுத்தலின் பெயரில் அதற்கான ஏற்பாடுகளைக் கஷ்டப்பட்டு செய்ததாகவும், திரையில் அந்த ஷாட்டை பார்த்து தான் வியந்ததாகவும் அதில் அவர் கூறியிருந்தார்.
ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் மட்டுமே பாலு மகேந்திரா படம்பிடிப்பார் என்று சொல்லப்படுவதுண்டு. இந்தப்படத்திலும் மலைப்பாங்கான பகுதிகளைத் திரையில் காட்டியிருப்பார். ஆனால், அவற்றின் சதவிகிதம் மிகக்குறைவு.
அந்த வகையில், ‘வீடு’, ‘சந்தியாராகம்’ போன்ற படங்களை முழுக்கச் சென்னை போன்ற பெருநகரமொன்றில் எடுப்பதற்கான ஊக்கத்தினை இப்படத்தில் அவர் பெற்றார் என்றும் நாம் கருதலாம்.
பாலு மகேந்திரா இயக்கிய படங்களில் கமர்ஷியல் அம்சங்கள் மிகுந்தவை என்று சதிலீலாவதி, ரெட்டைவால் குருவி போன்ற மிகச்சில படங்களையே குறிப்பிட முடியும்.
’நான் ஒரு கமர்ஷியல் படம் எடுத்தால் அது இப்படித்தான் இருக்கும்’ என்று அந்த காலகட்டத்தில் பாலு மகேந்திரா திரையுலகினருக்குத் தந்த பதிலாகவே ‘நீங்கள் கேட்டவை’ படம் குறிப்பிடப்படுகிறது. அதனைத் தர அவர் எவ்வளவு சிரமப்பட்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
’நீங்கள் கேட்டவை’ பார்த்து ரஜினி வாய்ப்பு தந்தபோதும் கூட, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ படத்தை தனது பாணியிலேயே அவர் தர விரும்பினார். அதனை முழுமையாகச் செயல்படுத்த முடியாத சூழலில், அப்படம் தோல்வியுற்ற காரணத்தால் மீண்டும் தன் பாதைக்குத் திரும்பினார்.
அந்த படத்திலிருக்கும் வழக்கமான சில விஷயங்களைப் புறந்தள்ளினால், அதில் பாலு மகேந்திராவின் முத்திரையைக் காண முடியும். ரஜினி, மாதவி, ஒய்.ஜி.மகேந்திரா மட்டுமல்லாமல் செந்தாமரை, வி.கே.ராமசாமி போன்றவர்களையும் வித்தியாசமாகக் காட்டிய படம் அது.
அந்த ரசனையை அவர் தன்னுள் மறைத்து வைத்திருந்த காரணத்தாலேயே, சிஷ்யர் வெற்றிமாறன் ‘பொல்லாதவன்’ படத்தைத் தந்தபோது அவரால் மனம் குளிரப் பாராட்ட முடிந்திருக்கிறது.
ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை என்று இயங்கிவரும் வெற்றிமாறன் கூட, மீண்டும் ஒரு ‘பொல்லாதவன்’ தர முயற்சிக்கவே இல்லை.
அதுவே, ரசித்து இழைத்து ஒரு ‘கமர்ஷியல் மசாலா படத்தை’ ஆக்குவது எவ்வளவு கடினம் என்பதனை நமக்குணர்த்தும்.
அந்த உண்மையே, ‘நீங்கள் கேட்டவை’ தரும் காட்சியனுபவத்தை இன்றும் சிலாகிப்புடன் ரசிக்கச் செய்கிறது..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“தக்லைஃப்” படத்தில் இணைந்த முக்கிய நடிகர்: யார் தெரியுமா?
”பொய் பிரச்சாரத்தை பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்” : மாணவர்களுக்கு விஜய் அறிவுரை!
உச்சத்தை தொட்ட தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?
Share Market : அதானியின் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் பங்குகள் உயர்வு!
10 ஆண்டுகளுக்கு பிறகு ஃபைனலில் இந்தியா… சாதிப்பாரா கோலி? : ரோகித் சர்மா பதில்!