உதயசங்கரன் பாடகலிங்கம்
ஒரு திரைப்படம் வெளியாகும் காலகட்டத்தில் ‘நாங்கள்லாம் யாரு..’ என்று வடிவேலு ஸ்டைலில் எதிர்திசையில் நடை போட்டுவிட்டு, சில காலம் கழித்து தற்செயலாக அதே படத்தைப் பார்த்ததும் ‘அட.. படம் சூப்பரா இருக்கே’ என்று உணரும் அனுபவம் இருக்கிறதே..! ‘கூஸ்பம்ஸ்’ என்ற வார்த்தைக்கெல்லாம் அப்பாற்பட்ட உணர்வு அது.
தற்போது சீரியல்களில் குணசித்திர நடிகராக நெல்லை வட்டார வழக்கில் பொழந்து கட்டிவரும் பாரதி கண்ணன் இயக்கிய ‘கண்ணாத்தாள்’ பார்த்தபோது அந்த அனுபவம் கிடைத்தது.
1988ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 2) ரிலீசான இப்படத்தை, சமீபத்தில் சூப்பர்குட் பிலிம்ஸின் யூடியூப் தளத்தில் பார்த்தபோது, ‘இந்தப் படம் இங்க எப்படி’ என்ற கேள்வி எழுந்தது. ஆனால், ஆர்.பி.சௌத்ரி தான் இதன் தயாரிப்பாளர் என்றபோது மலைப்பு பெருகியது. காரணம், தொண்ணூறுகளின் பிற்பாதியில் மிஸ்டர் ரோமியோ, செங்கோட்டை படங்களுக்குப் பிறகு ஆக்ஷனை கைவிட்டு விதவிதமாகக் காதலைச் சொல்கிற, குடும்ப உறவுகளைக் கொண்டாடுகிற படங்களை மட்டுமே அவர் தயாரித்திருக்கிறார் என்று நினைத்து வந்தது தான்.
‘நீலா மாலா’ தொலைக்காட்சித் தொடர் மற்றும் சில திரைப்படங்கள் வழியே தனித்துவமான கவனம் பெற்றவர் நடிகை நீனா. பதின்ம வயதில் அவர் நடித்த ‘விடுகதை’யைப் பார்க்க முடியாமல் தவித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அவரது கேரியரில் ஒரு முக்கியமான படமாக விளங்குகிறது ‘கண்ணாத்தாள்’.
நாட்டார் தெய்வம்!
கிராமப்புறங்களில் ஒரு குடும்பத்துக்கென்று தனியாகக் கோயில்கள் இருப்பதைக் காண முடியும். குறிப்பிட்ட தெய்வத்தை ஒரு ஊரார் மற்றும் அவர்கள் வழி வந்தவர்களே வணங்குவார்கள். சிலருக்கு அது குலதெய்வமாக அமையும். சில நேரங்களில் அந்த மண்ணைக் காப்பவராக, அம்மக்களின் குறை தீர்ப்பவராக, அந்த தெய்வம் போற்றப்படும். அப்படியொரு நாட்டார் தெய்வங்களின் கதைகளில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது ‘கண்ணாத்தாள்’.
ஒரு கோயிலில் கொடை நடக்கும்போது வில்லுப்பாட்டு பாட வந்த கலைஞரிடம் அந்த ஊர் மக்கள் ‘கண்ணாத்தாள் கதையை சொல்லுங்க’ என்று கேட்க, அவர் அதனைச் சொல்வதாகத் திரைக்கதை தொடங்குகிறது.
ஒரு ஏழைக் குடும்பம். அந்த பெற்றோருக்கு 5 பெண் பிள்ளைகள். மூத்த பெண் தான் கண்ணாத்தாள். தந்தை இசைக்கலைஞராக இருக்க, மகள் கரகாட்டம் ஆடுபவராக இருக்கிறார். அது மட்டுமல்லாமல், அந்த ஊரில் இருப்பவர்கள் நோய் நொடி என்று வந்தால் அதனைத் தனது பார்வையிலேயே தீர்ப்பவராக இருக்கிறார்.
கண்ணாத்தாளை ஒரு ஜமீன் வாரிசு திருமணம் செய்ய விரும்புகிறார். காணும் பெண்ணை எல்லாம் காமுறுகிற குணம் கொண்டவர் அந்த நபர்.
கண்ணாத்தாளுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆனால், அவரது தந்தை ‘இந்த ஏழை அப்பனுக்கு இதைத் தவிர வேற வழியில்லை’ என்கிறார். காரணம், அந்த நபர் வரதட்சணை ஏதுமில்லாமல் திருமணம் செய்ய முன்வந்தது தான்.
திருமணமாகிச் சென்றபிறகு, அந்த வாழ்க்கை கண்ணாத்தாள் நினைத்தது போலவே இருக்கிறது. மாமனார், மாமியார் வெறுப்பைக் கொட்டுகின்றனர். கணவனோ அடிமை போல நடத்துகிறார்.
இதனை நேரில் காணும் கண்ணத்தாளின் தந்தை மனமுடைகிறார். தன் வீடு திரும்பியதும் அதிர்ச்சியில் இறந்து போகிறார்.
அதையடுத்து, சகோதரிகளையும் தாயையும் புகுந்தவீட்டுக்கு அழைத்து வருகிறார் கண்ணாத்தாள். மாமனார் மாமியார் மட்டுமல்லாமல், கணவனும் அவருக்குத் தெரியாமல் சில குயுக்திகளை வெளிப்படுத்துகிறார். அதனால், கண்ணாத்தாளின் தாய் விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிடுகிறார்.
சொந்த வீட்டுக்குத் திரும்பும் அவர்கள் ஐவரும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த விஷயம் கண்ணாத்தாளுக்குத் தெரியாமல் மறைத்துவிடுகின்றனர் கணவன் குடும்பத்தார். ஆனாலும், அவர்கள் செய்யும் கொடுமைகள் மட்டும் குறைவதாக இல்லை.
ஒருகட்டத்தில் கண்ணாத்தாளைத் தள்ளிவைத்துவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளைச் செய்கின்றனர் கணவனின் பெற்றோர். இந்த நிலையில், கண்ணாத்தாள் கர்ப்பமுற்றது தெரிய வருகிறது. உடனே, அவரைக் கொலை செய்யத் திட்டமிடுகின்றனர். அதற்கு அந்த கணவனும் உடந்தையாக இருக்கிறார்.
அதன்பிறகு என்னவானது? கண்ணாத்தாள் என்னவானார்? கணவர் குடும்பம் என்ன ஆனது என்று சொல்கிறது இதன் மீதிப்பாதி.
தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலும் கூட அகால மரணமடைந்த பெண்கள் பிற்காலத்தில் தெய்வங்களாகப் போற்றப்படுவதைக் காண முடியும். நாட்டார் தெய்வங்களின் கதைகளை அடுத்தடுத்து நோக்கினால், அவற்றுக்கு இடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அறிய முடியும்.
அதன் ஒரு துளியாக அமைந்திருக்கிறது ‘கண்ணாத்தாள்’.

அசத்தும் வடிவேலு!
‘கண்ணாத்தாள்’ படத்தை முழுமையாகப் பார்த்திராதவர்கள் கூட, இதில் வரும் வடிவேலுவின் ‘சூனாபானா’ பாத்திரத்தை அறிந்திருப்பார்கள். இன்றைய தலைமுறையும் மீம்ஸ் வழியாக அறியக்கூடிய அந்த பாத்திரம், திரையுலக வரலாற்றில் இடம்பெறும் அளவுக்குத் தனித்துவமானது.
திரைக்கதையில் கண்ணாத்தாளின் கணவனுக்கு நண்பனாக அப்பாத்திரம் காட்டப்படுகிறது. அதேநேரத்தில், உயிர்த்தோழனாக அல்லாமல் அவருக்குத் தெரிந்த வளையத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆடு திருடிவிட்டு பஞ்சாயத்தில் இருந்து தப்பிக்க நினைப்பது, சைக்கிளில் ‘லோடு’ ஏற்ற ஆசைப்படும் வாலிபனின் பேச்சை நம்பிச் சென்று அடி வாங்குவது, கல் குவாரியில் வெடி வைக்கப்பட்ட இடத்தில் குடிபோதையில் சென்று அலப்பறை செய்வது என்று அந்த நகைச்சுவைக் காட்சிகள் ரொம்பவே பிரபலம்.
இயக்குனர் பாரதி கண்ணன் வரும் காட்சி அதில் ஹைலைட்டாக இருக்கும். காதலிக்குத் திருமணம் ஆகிற துக்கத்தில் மதுவில் விஷத்தைக் கலந்து அவர் குடிக்கப் போக, இடையே வரும் வடிவேலு அதனை வாங்கிக் குடித்துவிடுவார். அதன்பிறகு அவர் செய்கிற அதகளம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.
வடிவேலுவின் தனி ‘ட்ராக்’ அமைந்த படங்களில் அவரது காமெடி காட்சிகள் ஒருவிதமாக அமைக்கப்பட்டிருக்கும். அவற்றைவிட, 2000ஆவது ஆண்டுக்கு முன்னர் அவர் நடித்த படங்கள் சில ரசிகர்களுக்குப் பிடிக்கும். அவர்களைக் கொண்டாட வைப்பதாக, இதில் வடிவேலுவின் நகைச்சுவை இருக்கிறது. ஒரு வகையில், அவரது ‘தனி’ ட்ராக் உத்திக்கு ‘கண்ணாத்தாள்’ போன்ற படங்களே முன்னோடி என்று சொல்லலாம்.
இந்தப் படத்தில் ‘ரத்தக்கண்ணீர்’ எம்.ஆர்.ராதாவைப் பிரதியெடுத்தது போல மணிவண்ணன், அவரது மகனாக நடித்த கரண் பேசும் வசனங்கள் அமைக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் அது ‘குபீர்’ சிரிப்பை வரவழைப்பதாக இருக்கும்.

‘மெஸ்மரிசம்’ செய்யும் இசை!
இப்போது சில படங்களில் பழைய திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பயன்படுத்தப்படுவது ஒரு திரைக்கதை உத்தியாகவே மாறி வருகிறது. ‘கண்ணாத்தாள்’ படத்தில் அதற்கேற்ற வகையில் சில பாடல்கள் இருக்கின்றன.
’காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்’ என்று நீனா பாடுகிற பாடல், அத்தகைய ‘கூஸ்பம்ஸ்’ அனுபவத்தைத் தரக்கூடியது. அது மட்டுமல்லாமல் ’அம்மன் புகழைப் பாட எனக்கு’, ‘மாலை வெயிலழகி’, ’பதிலெங்கே சொல்வாய் நீ அம்மா’ ஆகிய பாடல்களும் சட்டென்று மனதைத் தொடுபவை. இப்பாடல்களை முதல்முறையாகக் கேட்கும்போதே, இசை இளையராஜா என்று சொல்லிவிடலாம். பின்னணி இசை பற்றிக் கேட்கவே வேண்டாம்.
இந்த படத்தில் முதல் முக்கால் மணி நேரத் திரைக்கதை பரபரவென்று நகரும். கரண் செய்யும் ‘அட்ராசிட்டி’, கிளைமேக்ஸ் பாடல் உட்பட சில காட்சிகள் ‘க்ளிஷே’வாக தெரியும். தொடக்க காட்சியும் அப்படியொரு ரகத்தில் தான் இருக்கும். ஆனால், அது போன்ற காட்சிகளைத் தாண்டினால் இப்படம் தரும் அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.
ஒரு எளிமையான கதையை எடுத்துக்கொண்டு, அதனைக் குழப்பமின்றித் திரையில் சொன்னாலே போதுமென்ற அளவுக்கு இதன் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் பாரதி கண்ணன்.
தாய் உட்படத் தனது குடும்பத்தினர் இறந்து போனது நாயகிக்குத் தெரியாமல் போனது எப்படி என்பது உட்படச் சில லாஜிக் மீறல்கள் குறித்து நாம் கேள்வி எழுப்பலாம். கதை நிகழும் காலம் சமகாலமாகத்தான் காட்டப்பட வேண்டுமா என்ற எண்ணமும் எழலாம்.
அவற்றை எல்லாம் மறக்கடிக்கும் விதமாக, குஷ்பு தனது வில்லுப்பாட்டில் மொத்தக் கதையையும் சொல்வதாக வடிவமைத்தது அருமையான உத்தி. அதனிடையே கோயிலுக்கு வரும் மக்களின் ஷாட்களையும் இணைத்தது ‘இது ஒரு வழக்கமான பக்திப் படம்’ எனும் எண்ணத்தைத் துடைத்தெறிகிறது.
இந்தப் படத்தில் கரண், நீனா, இந்து, மணிவண்ணன், வடிவுக்கரசி, வடிவேலு, பாத்திமா பாபு, டெல்லி கணேஷ், அல்வா வாசு, திடீர் கன்னையா உள்ளிட்ட பலரோடு வினு சக்ரவர்த்தியும் குஷ்புவும் கௌரவ வேடத்தில் தலைகாட்டியிருப்பார்கள்.
இதில் நடித்தவர்களில் பலர் இன்று திரையுலகை விட்டு ஒதுங்கி வேறு திசையில் பயணிக்கின்றனர். ஆனால், அவர்களை எதிர்கொள்கிற ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளும் வகையிலேயே உள்ளது ‘கண்ணாத்தாள்’.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் குஷ்பு வரும் காட்சிகள் மட்டுமே பின்னணியில் பெருங்கூட்டத்தைக் காட்டுவதாக அமைந்திருக்கும். அந்த ஷாட்களும் கூட தனியாக எடுக்கப்பட்டு கோர்க்கப்பட்டவைதான். படம் பார்க்கும் போது அதனை நம்மால் உணர முடியாது.
விஜய்யின் ஒளிப்பதிவு, ஜெய்சங்கரின் படத்தொகுப்பு, இ.ராம்தாஸின் வசனங்கள் என்று இதன் தொழில்நுட்ப உள்ளடக்கம் அந்த மாயாஜாலத்தைச் செய்திருக்கும்.
கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பது ஒரு வகை சுகம். அப்படியொரு அனுபவத்தை நிரம்பத் தரவல்லதாக இருக்கிறது இப்படம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!