உதய் பாடகலிங்கம்
காலையில் குழந்தைகளைப் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு, கணவர் வேலைக்குச் சென்றபின்பு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தோழிகள், உறவினர்களுடன் பெண்கள் தியேட்டருக்கு செல்லும் வழக்கம் தொண்ணூறுகளின் இறுதி வரை தொடர்ந்தது. அதனாலேயே, ‘தாய்மார்களின் பேராதரவுடன்’ என்ற வாசகங்களைத் தாங்கி நின்றன பல வெற்றிப் படங்களின் சுவரொட்டிகள்.
அவர்களைக் கவர்வதற்காகவே நகைச்சுவை, காதல், செண்டிமெண்ட் காட்சிகளை வலியப் புகுத்தும் வழக்கமும் அன்றிருந்தது. அறுபதுகளைத் தாண்டிய கோலிவுட் படைப்பாளிகளைக் கேட்டால், ‘அது ஒரு பொற்காலம்’ என்று சொல்வார்கள்.
எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர், ராம.நாராயணன், கே.பாக்யராஜ் போன்ற அப்போதைய முன்னணி இயக்குனர்களைத் தாண்டி மணிவண்ணன், மனோபாலா, ஜி.என்.ரங்கராஜன், கங்கை அமரன், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல இயக்குனர்கள் அதற்கேற்ற திரைக்கதைகளை அமைத்து வெற்றிப்படங்களைத் தந்தார்கள். அவர்கள் தந்த குடும்பச் சித்திரங்களில் பெண்கள் உயர்வாகச் சித்தரிக்கப்பட்டார்கள்.
அந்த வழியில் பயணத்தைத் தொடங்கினாலும், தனக்கென்று தனிப்பாதையை அமைத்துக் கொண்டவர் விக்ரமன். ‘புது வசந்தம்’ தொடங்கி அவர் இயக்கிய பல படங்கள் பெண்களைக் கண்ணியமாகக் காட்டியவை தான். அந்த வரிசையில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது ‘கோகுலம்’.
பானுப்ரியா, அர்ஜுன், கல்யாண்குமார், சின்னி ஜெயந்த், வடிவேலு, குமரேசன், மேஜர் சுந்தர்ராஜன், ஜெய்சங்கர், ஜானகி, ராஜா ரவீந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி இதனைத் தயாரித்திருந்தார். 1993ஆம் ஆண்டு ஜுன் 11ஆம் தேதியன்று இப்படம் வெளியானது.
31 ஆண்டுகள் ஆனாலும், இப்போதும் அதே கண்ணீரையும் புன்னகையையும் நம்மிடம் உருவாக்குகிறது இப்படம்.
கண்ணனின் வரவுக்காக..
கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் கிராமத்தில் வாழ்ந்து வருகிறது கண்ணனின் (அர்ஜுன்) குடும்பம். அவரது தாய், தந்தை, சகோதரிகள் அங்கிருக்கின்றனர். பெங்களூருக்கு வேலை நிமித்தம் சென்ற கண்ணன் என்ன செய்கிறார்? தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில், அவர் மணியார்டர் வழி அனுப்பும் பணத்தை நம்பியே அக்குடும்பம் வாழ்கிறது.
இந்த நிலையில், அவர்களது வீட்டின் எதிரே குடி வருகிறார் மேரி என்ற இளம்பெண். கண்ணனின் குடும்பத்தோடு நெருங்கிப் பழகுகிறார். அவர்கள் வீட்டில் நிலவும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாகத் தீர்க்கப் பாடுபடுகிறார்.
அந்த ஊரில் தையல் கடை நடத்தி வரும் செல்லப்பா (ஜெயராம்) மேரியோடு நட்புறவு கொள்கிறார். மெதுவாக அவர் மீது காதல்வயப்படுகிறார். அவரிடம் அதனைத் தெரிவிக்கிறார்.
அப்போதுதான், தனது பெயர் காயத்ரி (பானுப்ரியா) என்றும், கண்ணனின் காதலி என்றும் சொல்கிறார்.
பெங்களூரில் இருக்கும்போது தானும் கண்ணனும் காதலித்ததாகவும், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும், அது நிகழ்வதற்கு முன்னதாகச் சிலரோடு நடந்த சண்டையில் கண்ணன் கொலை செய்யப்பட்டதாகவும், அந்த தகவல் அறிந்தால் அவரது குடும்பமே நிலைகுலைந்துவிடும் என்பதால் அதனைச் சொல்லாமல் தான் தவிர்த்ததாகவும், அக்குடும்பத்தைக் கடைத்தேற்றுவதற்காகத் தான் அவ்வூருக்கு வந்ததாகவும் சொல்கிறார்.
காயத்ரி தன்னைக் காதலிக்கவில்லை என்று சொன்னது அதிர்ச்சியளித்தாலும், கண்ணனின் குடும்பம் மீது அவர் காட்டும் அக்கறையும் அன்பும் செல்லப்பாவை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
இந்த நிலையில், கண்ணனின் தங்கை திருமணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கிறார் காயத்ரி. அப்போது, அப்பெண்ணைக் காதலித்த கயவன் ஒருவன், திருமணத்தை நிறுத்த முயற்சிப்பதை அறிகிறார். அந்தப் பெண்ணும் அவனும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக் காட்டி மிரட்டுவதைக் காண்கிறார்.
அன்றிரவே, அவனது அறைக்குச் செல்கிறார் காயத்ரி. அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. காயத்ரியைக் காப்பாற்றும்பொருட்டு செல்லப்பா அங்கு செல்கிறார். அவர்களுக்குள் நடக்கும் சண்டையால், அந்த இடத்தில் அக்கம்பக்கத்தினர் திரள்கின்றனர்.
அப்போது, தன்னைத் தேடித்தான் காயத்ரி வந்ததாக ஊராரிடம் சொல்கிறார் அந்த நபர். அதனைக் கேட்டதும், கண்ணனின் குடும்பமே அவரை அவமானத்துடன் நோக்குகிறது. திருமண நிகழ்வுக்கு வரவேண்டாம் என்று ஒதுக்குகிறது.
உண்மையைச் சொல்ல முடியாத இக்கட்டில் தவிக்கும் காயத்ரி, அப்பெண்ணின் திருமணம் முடியும் வரை அமைதி காக்கிறார். அதன்பிறகு, எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அந்த ஊரில் இருந்து கிளம்புகிறார்.
மிகத்தாமதமாக, செல்லப்பாவினால் காயத்ரி குறித்த உண்மைகளை அறிகின்றனர் கண்ணனின் குடும்பத்தினர். அப்பெண் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் தவிக்கின்றனர். அதன்பிறகு, காயத்ரியின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தொடங்குகின்றனர் கண்ணனின் பெற்றோர். அதோடு அப்படம் முடிவடைகிறது.
‘கோகுலம்’ படத்தின் தொடக்கமே, கண்ணன் வரவை எதிர்பார்த்து அவரது தந்தை அவ்வூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வதாக அமைக்கப்பட்டிருக்கும்.
கண்ணனின் காதலி காயத்ரியைத் தங்களது மகளாக ஏற்றுக்கொண்டு, அவருக்காகத் தினமும் அந்த மனிதர் தனது காத்திருப்பைத் தொடர்வதாகப் படத்தின் முடிவு அமைந்திருக்கும்.
அக்காலத்தில் ‘கோகுலம்’ படத்தைத் தாய்மார்கள் திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்க, இந்த காட்சியமைப்பே உதவிகரமாக அமைந்தது.
படத்தின் சிறப்பு
அர்ஜுன் கௌரவ தோற்றத்தில் நடித்த இப்படத்தில் பானுப்ரியாவின் பாத்திரமே முதன்மையானதாக அமைக்கப்பட்டிருக்கும். அதையும் மீறி, ஜெயராம் ஏற்ற செல்லப்பா பாத்திரம் திரையில் தனித்து தெரியும். மலையாளத்தில் குறிப்பிடத்தக்க நடிகராகக் கவனிப்பைப் பெற்ற அவர், தமிழில் அறிமுகமான முதல் படம் இது.
விக்ரமனின் சீடர் ராஜகுமாரன் இயக்கிய ‘நீ வருவாய் என’ படத்தில் ‘கோகுலம்’ சாயல் பல இடங்களில் தெரியும். அர்ஜுன் பாத்திரத்தோடு அஜித் பாத்திரத்தைப் பொருத்திப் பார்த்தால், தேவயானியும் பானுப்ரியாவும் ஒரேமாதிரியாகத் தோற்றமளிப்பதை உணர முடியும்.
’கோகுலம்’ படத்தில் சிற்பி தந்த பாடல்கள் அனைத்தும் ‘ஆஹா’ ரகம். ’நான் மேடை மேலே வீசும் தென்றல் காற்று’, ‘புது ரோஜா பூத்திருச்சு’, ‘அந்த வானம் வந்து’, ‘செவ்வந்திப் பூவெடுத்தேன்’, ‘பொன் மாலையில்’ உட்பட இப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களும் ரசிகர்கள் மனதைக் கவ்விக் கொண்டன.
போலவே, ‘ஆஆஆஆ..’ என்று பாடகிகள் கோரஸாக குரல் கொடுக்கும் இடங்கள் நம்மை கண்ணீர் மழையில் நனைய வைப்பதாக இருக்கும். பின்னாட்களில் ‘பூவே உனக்காக’, ‘சூரியவம்சம்’, ‘வானத்தைப் போல’ பல ‘பிளாக்பஸ்டர்’ படங்களில் இந்த உத்தியை அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பார் இயக்குனர் விக்ரமன்.
மிக முக்கியமாக வடிவேலு, சின்னி ஜெயந்த் கூட்டணி பானுப்ரியா பின்னால் காதலுடன் சுற்றித் திரியும் காட்சிகள் நகைச்சுவை அலையில் நம்மைத் தள்ளும். அது போதாதென்று குமரேசன் வேறு ஜெயராமிடம் வம்பு இழுத்துக் கொண்டிருப்பார். முன்பாதி மட்டுமல்லாமல் பின்பாதியிலும் அது தொடர்வது இப்படத்தின் சிறப்பு.
அடுத்தடுத்து நகைச்சுவை, காதல், செண்டிமெண்ட் காட்சிகள் வரும் வகையில் ஒரு கமர்ஷியல் படம் எடுப்பது எளிது. ஆனால், அப்படத்தை ரசிகர்கள் தங்கள் மனதுக்கு நெருக்கமாக உணரும் வகையில் உருவாக்குவது மிகக்கடினம்.
அந்த வித்தையில் ஜித்தன் ஆகத் திகழ்ந்தவர் இயக்குனர் விக்ரமன். தனக்கு முன்னே சென்றவர்கள் காட்டிய வழியில் இருந்து கொஞ்சமும் பிசகாமல், அதேநேரத்தில் பெண்களைச் சிறிதளவு கூடக் கண்ணியக் குறைவாகத் திரையில் காட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவர். அதற்கொரு உதாரணம் ‘கோகுலம்’ திரைப்படம்.
ஏன் இது போன்ற திரைப்படங்கள் அக்காலகட்டத்தில் கொண்டாடப்பட்டன என்ற கேள்வி இன்றைய இளைய தலைமுறையினர் மனங்களில் நிச்சயம் எழும். ஒரே ஒருமுறை தமது முந்தைய தலைமுறையோடு இணைந்து ‘கோகுலம்’ படத்தைப் பார்த்தால் அதற்கான பதில் தெரியவரும். அழுகையிலும் சிரிப்பிலும் ஊறிய அவர்களது முகங்கள் அதனைத் தெளிவாகச் சொல்லிவிடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: முகத்தில் அரும்பும் பூனை முடிகளை நீக்க…
ஹெல்த் டிப்ஸ்: சிறுநீர் கழிப்பதை ஒத்திப்போடுபவரா நீங்கள்?
கிச்சன் கீர்த்தனா: நட்ஸ் பர்கர்!