இயக்குநர் மணிரத்னத்தின் சினிமா பயணத்தில் பெரும் தாக்கத்தையும், திருப்பத்தையும் ஏற்படுத்திய ரோஜா படம் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு அப்படத்தின் நாயகன் அரவிந்த் சாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இயக்குநராக மணி ரத்னம், வசனகர்த்தாவாக சுஜாதா தயாரிப்பாளராக கே.பாலசந்தர் என தலைசிறந்த படைப்பாளிகள் ஒன்றிணைந்து உருவானது இந்த படம்..
அரவிந்த் சாமி, மதுபாலா, நாசர், ஜனகராஜ் நடிப்பில் உருவான இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, வைரமுத்து பாடல்கள் என அனுபவமும், இளமையுடனுமான கூட்டணி உருவானது.

பகல் நிலவு, மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி,தளபதி என அதுவரை இளையராஜாவுடன் மட்டுமே பயணித்து வந்த மணிரத்னம் ரோஜா படத்தின் மூலம் ஏ.ஆர். ரஹ்மானை அறிமுகப்படுத்தினார்.
அந்த பயணம் இன்றுவரை தொடர்கிறது..
அரசு உயரதிகாரி ஒருவர் காஷ்மீர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட உண்மை சம்பவத்தையும், அவரின் வழக்கமான காதல் கதையையும் ஒருங்கிணைத்து ரோஜா திரைப்படத்தை உருவாக்கினார் மணிரத்னம்..
1992 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வெளியான ‘ரோஜா’ திரைப் படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்குமான மோதல் காட்சிகள், நெருப்பில் புரண்டு நாயகன் தேசியக் கொடியை காப்பாற்றுவது,
என படத்தில் கட்டமைக்கப்பட்ட தேசிய உணர்வும், படத்தின் பின்னணி இசையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சந்தோஷ் சிவனின் கேமரா காஷ்மீர் மலைத்தொடர்களின் குளிரை திரையரங்குளில் கொண்டுவந்தது.

சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த திரைப்பட பிரிவில் சிறப்பு பிரிவு ஆகியவற்றில் மூன்று தேசிய விருதுகளும், சிறந்த திரைப்படம், இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகி ஆகிய பிரிவுகளில் தமிழக அரசின் விருதுகளையும் வென்றது ரோஜா.
இப்படத்தின் வெற்றி ‘ரோஜா’வுக்கு முன்’ரோஜா’வுக்குப் பின் எனப் பிரிக்கும் அளவுக்கு மணி ரத்னத்தின் திரை வாழ்கையை புரட்டிப் போட்டதுடன் தேசிய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராகவும் அவரை உருவாக்கியது.

அதுவரை இளையராஜாவின் இசை மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் ரகுமானின் இசை தமிழ் சமூகத்தில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் தமிழ் சினிமாவில் அதுவரை இல்லாத அளவுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல் கேசட்டுகள் விற்றுத் தீர்ந்தன..
அன்று ஆரம்பித்த அந்த பயணம் நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம் ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. அதற்கு மணி மகுடமாய் 6 தேசிய விருதுகள், 32 பிலிம்பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், பாப்தா, கிராமி விருதுகளை குவித்தார்.

ஆனால் ரோஜாவின் இசையை இன்று வரை கொண்டாடிக் கொண்டிருகிறது தமிழ்கூறும் நல்லுலகு.
பல சாதனைகளையும், பல திரை கலைஞர்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘ரோஜா’ திரைப்படம் 30 வது ஆண்டில் அடியெடுத்து வைத்த பின்னும் தினம் தோறும் ரசிகர்கள் எதாவது ஒரு வகையில் ரோஜா படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
என்றென்றும் ரசிகர்களின் மனதில் வாடாத மலராய் பூத்துக் கொண்டிருக்கிறது ரோஜா.
- க.சீனிவாசன்