தொண்ணூறுகளில் பண்ணையார்தனத்தைத் தாங்கிப் பிடிக்கும் விதமாக வெளியான சில படங்கள், ஒட்டுமொத்த திரையுலகின் போக்கையும் மாற்றியமைத்ததாகச் சொல்லப்படுவதுண்டு.
சின்னக்கவுண்டர், தேவர் மகன், நாட்டாமை, சூரியவம்சம் போன்ற படங்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. அதற்கு முன்பும் குறிப்பிட்ட இனக்குழுவை அல்லது சாதியினரை மையப்படுத்திய படங்கள் வந்ததுண்டு என்றபோதும், அவை இப்படியொரு அடையாளத்துக்குள் சிக்கவில்லை. ஆனால், மிதமிஞ்சிய நாயகத்தன்மையும் துதி பாடுதலும் அப்படியொரு பெயரைப் பெறக் காரணமாயின.
அப்படிப்பட்ட படங்களின் வரிசையில் இடம்பெறுகிற ’நாட்டாமை’ வெளியாகி, இன்றோடு 29 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. விமர்சகர்களின் கருத்துகளுக்கு அப்பாற்பட்டு, இப்போதும் சாதாரண ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. அதில் நிறைந்திருக்கும் அபார உழைப்பும், அதனைக் கனகச்சிதமாகத் திரையில் வார்த்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் திறமையுமே அதற்குக் காரணம்.
எல்லோருக்கும் தெரிந்த கதை!
ஒரு ஊரில் ஒரு பெரிய மனிதர் இருந்தார். அவரது நேர்மையான குணங்களால், நெருங்கிய உறவினரோடு பகை ஏற்படுகிறது. அது அவரது மறைவுக்குப் பின்னும் தொடர்கிறது. அந்த மனிதரின் மூன்று மகன்களையும் பழி வாங்கக் காத்திருக்கிறார் உறவினர்.
திருமணம், குழந்தை பிறப்பு என்று வரும்போது அந்த சகோதரர்களுக்குள் பிரச்சனைகள் எழுகின்றன. அவர்களை எதிரியாகக் கருதும் நபர், அந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டாரா அல்லது அவர்தான் அவற்றை உருவாக்கினாரா என்ற கேள்வியோடு நாட்டாமை திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
உண்மையைச் சொன்னால், எல்லா ஊரிலும் இது போன்றதொரு கதையை நம்மால் கேட்க முடியும். உறவினர்களுக்குள் ஏற்படும் மோதல்கள் பெரும்பாலும் பெண் சார்ந்தோ அல்லது நிலம் சார்ந்தோ அல்லது வறட்டுக் கவுரவம் சார்ந்தோ அமைவது வழக்கம். அந்த வகையில், இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை.
இந்தக் கதையில் விஜயகுமார், சரத்குமார், பொன்னம்பலம் ஆகியோரே முதன்மையான பாத்திரங்கள். பொன்னம்பலத்தின் பெற்றோர் என்ற வகையில் ஈரோடு சௌந்தர் – மனோரமா ஏற்ற பாத்திரங்கள் முக்கியத்துவம் பெறும். அவர்களைப் பிணைத்திருக்கும் இழை வழியே குஷ்பூ, மீனா, ராஜா ரவீந்தர், வைஷ்ணவி, சங்கவி உள்ளிட்ட பல பாத்திரங்களின் இருப்பு அமைந்திருக்கும்.
அறியாத சில விஷயங்கள்!
நாட்டாமையில் முதலில் குஷ்பூ நடிப்பதாக இல்லை. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கதையை விளக்கியபோதும், அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. அந்த காலகட்டத்தில் வயதான தோற்றத்தில் சரத்குமாருக்கு அண்ணியாக நடிப்பதென்பது, எந்தவொரு நாயகிக்கும் தயக்கத்தைத் தந்திருக்கும் என்பதே உண்மை. ஆனால், தான் நடிக்காவிட்டால் அந்த பாத்திரத்தில் யார் நடிப்பார் என்று குஷ்பூ கேட்டபோது ‘லட்சுமி’ என்று பதிலளித்திருக்கிறார் இயக்குனர். அந்த பதிலே, அப்பாத்திரம் திரையில் எவ்வாறு தென்படும் என்பதை அவருக்கு உணர்த்தியிருக்கிறது. அதன்பிறகே, குஷ்பு அப்படத்தில் இடம்பெறச் சம்மதித்திருக்கிறார்.
அதேபோல, விஜயகுமார் பாத்திரத்தில் மம்முட்டியை நடிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் ரவிக்குமார். அதற்கு முன்பாக, இயக்குனர் பாரதிராஜா போன்ற ஒருவரை அப்பாத்திரத்தில் நடிக்க வைக்கலாமா என்று யோசித்திருக்கிறார். ஆனால், அது நிகழவில்லை.
படப்பிடிப்பு தொடங்கியபிறகு, அப்பா வேடத்திலும் மூத்த சகோதரர் வேடத்திலும் விஜயகுமாரையே நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார் ரவிக்குமார். எப்படியோ அந்த எண்ணங்கள் சிதறடிக்கப்பட்டு, இறுதியில் சரத்குமாரே இரு வேடங்களிலும் நடித்தார்.
நம்ம அண்ணாச்சியில் சரத்குமார் மூன்று வேடங்களில் நடித்தபோதும், ‘நாட்டாமை’க்கு ரசிகர்கள் தந்த வரவேற்பே அவரை ‘சூர்யவம்சம்’, ‘நட்புக்காக’, ‘அரசு’, ’1977’, போன்ற படங்களில் தந்தை மகனாக நடிக்க வைத்தது. ’ரிஷி’, ‘திவான்’, ‘வைத்தீஸ்வரன்’, ‘சண்டமாருதம்’ உள்ளிட்டவற்றில் இரட்டை வேடங்களில் தோன்றச் செய்தது.
இந்த படத்தில் சித்ரா குரலில் ‘கோழிக்கறி குழம்பு’ என்றொரு பாடல் ஆடியோ கேசட்டில் இடம்பெற்றது. சரத்குமார் உடன் இணைந்து ராணி ஆடுவதாக வடிவமைக்கப்பட்ட இப்பாடல் ஏனோ படத்தில் இல்லை. ‘ஓவர் கவர்ச்சி ஒட்டுமொத்த படத்தையும் கவுத்துடும்’ என்று கடைசி நேரத்தில் ‘கட்’ செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால், அப்பாடல் இன்றும் சிலரது மனங்களில் ‘பார்ட்டி சாங்’ ஆக நிலைத்துள்ளது.
யானை கட்டி போரடிக்கும் காட்சி உட்பட இப்படம் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களில் தொழில்நுட்பக் கலைஞர்கள் கொட்டிய உழைப்பைப் பற்றிப் பேசப் பல தகவல்கள் ‘நாட்டாமை’ குழுவினரிடம் மிச்சமிருக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரிஜினல் மற்றும் நகல் நகைச்சுவை!
‘நாட்டாமை’ படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி – செந்தில் நகைச்சுவை இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். ’டேய் தகப்பா’ என்று கவுண்டமணி விளிப்பதும், ‘மை சன்’ என்று செந்தில் பம்முவதும், இன்றும் தினசரி வாழ்வில் நண்பர்களுக்கிடையேயான கேலி கிண்டல்களில் பிரதியெடுக்கப்படுகின்றன.
நாட்டமை படத்தையே கிண்டலடிக்கும் ‘ஸ்ஃபூப்’ வகையறா காமெடிகளும் கூட ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கின்றன. விவேக், சிவா ஆகியோர் திரைப்படங்களிலும், சந்தானம் போன்றோர் தொலைக்காட்சியிலும் அதனைத் திறம்படச் செய்திருக்கின்றனர். அவ்வளவு ஏன், கவுண்டமணியே கூட ’நாட்டமை’ பஞ்சாயத்து காட்சியைப் பகடி செய்து நடித்திருக்கிறார்.
அந்த காட்சியில் நடித்த காரணத்தினாலேயே, இன்றளவும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த மகேந்திரன் ரசிகர்களால் உற்றுநோக்கப்படுகிறார்.
ராணி, சரத்குமார் இடையேயான தொடர்பு பற்றி கவுண்டமணி இன்னொரு சரத்குமாரிடம் விவரிப்பதாக வரும் காட்சி, மீம்ஸ்களிலும் கூட பயன்படுத்தப்படுகின்றன. கவுண்டமணி பெண் பார்க்கச் செல்லுமிடத்தில், அப்பெண்ணின் தந்தை மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதும் அப்படியொரு சிறப்பைக் கொண்டதுதான்.
வெற்றிலையைக் குதப்பும் விஜயகுமாரும், சரத்குமார் முன்னால் பம்மும் வினுசக்ரவர்த்தியும் கூட, அந்த வகையறா கிண்டல்களுக்குத் தப்பவில்லை. நாட்டாமையை மேற்கோள் காட்டி உருவாக்கப்படும் மீம்ஸ்கள், இப்போதும் அப்படம் திரும்பத் திரும்ப ரசிக்கப்படுவதையே மறைமுகமாக உணர்த்துகிறது.
ரீபூட் செய்யலாமா?!
புகழ்பெற்ற படங்களை, பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் குதறுவதில் எப்போதும் உடன்பாடில்லை. ஆனால், அவற்றை மூலமாகக் கொண்டு வேறொரு படைப்பை உருவாக்கலாம் அல்லது அவற்றுக்குச் சமர்ப்பணம் செய்யும்விதமான ஒன்றைத் தரலாம்.
‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் வந்த ‘தீப்பிடிக்க’ பாடல் அப்படியொரு உதாரணம். ஷாரூக்கான் நடிப்பில் பர்ஹான் அக்தர் இயக்கிய ‘டான்’ மற்றும் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் அபய் தியோல் நடித்த’ தேவ் டி’ ஆகியவற்றையும் அந்த பட்டியலில் சேர்க்கலாம். ஏற்கனவே ஒரு படைப்பில் இருக்கும் கட்டமைப்பை எடுத்துக்கொண்டு, அதன் உள்ளடக்கத்தை முற்றிலுமாக மாற்றும் முயற்சிகளே அவற்றை வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.
அந்த வகையில், ‘நாட்டாமை’ போன்ற வெற்றிப்படங்களை ‘ரீபூட்’ செய்தால் நன்றாக இருக்கும். அப்போது, அக்கதையில் நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தை, சாதீயப் போற்றுதலை, ஜனநாயகத்திற்கு எதிரான எதேச்சதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்த முடியும். கூடவே, ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பங்களோடு சுவாரஸ்யமிக்க ஒரு திரைப்படத்தையும் தர முடியும். அதுவே, பழமைவாதத்தைத் தாங்கிப் பிடிக்கிற தீர்ப்புகளை மாற்றுவதாக இருக்கும்.
அதேநேரத்தில், ‘நாட்டாமை 2.0’ என்ற பெயரில் ‘அதே கதையை இன்றைய காலத்திற்கேற்ப ஸ்டைலிஷாக எடுக்கிறேன்’ என்று எவராவது களமிறங்கினால், அது இன்னும் பெரிய ஆபத்தாகத்தான் அமையும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு : விரைவில் குறுஞ்செய்தி!
ODI World Cup 2023: அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா? மற்ற அணிகளுக்கான வாய்ப்பு என்ன?
இசை நிறுவனத்தை தொடங்கும் வைஜெயந்தி மூவிஸ்!
ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!