துள்ளல் அஜித்தை காட்டிய ‘உல்லாசம்’!

சினிமா

‘நாஸ்டால்ஜியா’ எனப்படும் நினைவுகளைப் பின்னோக்கித் திரும்பப் பார்க்கச் செய்யும்விதமாகச் சில திரை படைப்புகள் அமைவதுண்டு. அந்த திரைப்படம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களிடத்திலும் கூட குறிப்பிடத்தக்க நினைவுகளை, தாக்கங்களை அவை விட்டுச் செல்லும். ஒவ்வொருவருக்கும் அப்படிப்பட்ட அனுபவங்களைத் தந்த படங்கள் என்று விரல்விட்டு எண்ணத்தக்க வகையில் சில திரைப்படங்கள் இருக்கும். அந்த வகையில் என்னைக் கவர்ந்த ஒரு திரைப்படம் ‘உல்லாசம்’.

1997, மே 23 அன்று இத்திரைப்படம் வெளியானது. அன்றைய காலகட்டத்தில் வளரும் நாயகர்களாக இருந்துவந்த அஜித்குமார், விக்ரமை ஒன்றாக இணைத்த பெருமை இப்படத்திற்கு உண்டு. அந்த காலகட்டத்தில் வெளியான இந்திப் படங்களைப் போன்று இப்படத்தின் உள்ளடக்கமும் அமைந்திருந்தது.

எதிரெதிர் ஆளுமைகள்!

பேருந்து ஓட்டுநராக வேலை பார்க்கும் தங்கையாவின் (எஸ்.பி.பாலசுப்பிரமணியன்) மகன் குருமூர்த்தி. பேருந்து கோயிலைத் தாண்டுகையில் கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்பவர் தங்கையா. அதனை வேண்டா வெறுப்பாக மேற்கொள்வது சிறுவன் குருவின் வழக்கம்.

குருவுக்குத் தனது வீட்டின் அருகே வசிக்கும் ரவுடி ஜே.கே. (ரகுவரன்) என்றால் மிகவும் பிடிக்கும். அவர் கொலை செய்வதைப் பார்த்த பிறகும், குருவுக்கு அவரைக் கண்டால் பயமே இல்லை. அந்த இயல்பு ஜே.கே.வுக்கு பிடித்துப் போகிறது.

ஊரில் இருந்து ஜே.கே.வின் மகன் தனது பாட்டியோடு வருகிறார். அவரது பெயர் தேவன். அவருக்குத் தந்தைக்கு நேரெதிரான குணம்.
குரு எந்நேரமும் ஜே.கே.வின் வீட்டில் அவரது அடியாட்களோடு பொழுதைப் போக்க, தேவனோ தங்கையாவின் வீட்டில் வளர்கிறார். குருவின் பெற்றோரைத் (எஸ்.பி.பி – ஸ்ரீவித்யா) தன்னைப் பெற்றவர்களாக நினைக்கிறார்.

குருவுக்கும் தேவனுக்கும் இடையே விரோதமும் இல்லை; நட்பும் இல்லை. ஆனால், இருவரும் சிறுவயதில் இருந்து ஒன்றாகவே வளர்கின்றனர். வளர்ந்து ஒரே கல்லூரியில் சேர்ந்தபிறகும் கூட, அந்த நிலையே தொடர்கிறது.

கல்லூரிக் காலத்தில் மேகா (மகேஸ்வரி) எனும் பெண் அவர்கள் இருவருக்கும் அறிமுகமாகிறார். சில நாட்களிலேயே மேகாவும் குருவும் காதலிக்கத் தொடங்குகின்றனர். ஆனால், தேவன் மேகாவை ஒருதலையாகக் காதலிக்கிறார்.

எந்நேரமும் வம்பு வழக்கு என்றிருக்கும் தனது மகனும் தேவனும் ஒரு பெண்ணைக் காதலிப்பதை அறிகிறார் தங்கையா. குருவிடம் சென்று, ‘தேவனும் அந்தப் பெண்ணும் வாழ்க்கையில் சேர்வதுதான் சரி’ என்கிறார். அதனைக் கேட்டபிறகு செய்வதறியாது திகைக்கும் குரு, மெல்ல மேகாவை விட்டு விலகுகிறார்.

இந்தச் சூழலில், ஜே.கே.வின் எதிரிகள் இந்த குழப்பத்தைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். ஜே.கேவையும் குருவையும் கொல்ல முயல்கின்றனர். அதனை அறியும் தேவன் என்ன செய்கிறார்? இறுதியில் ஜே.கே காப்பாற்றப்பட்டாரா? குரு – மேகா காதல் என்னவானது என்று சொல்கிறது ‘உல்லாசம்’ படத்தின் மீதி.

இரண்டு எதிரெதிர் ஆளுமைகள். அவர்களது பிள்ளைகள் தந்தையைப் போன்று இருக்காமல், எதிரே இருக்கும் ஆளுமையைப் பார்த்து ஈர்ப்பு கொள்வதுதான் இக்கதையின் சிறப்பம்சம்.

சிறப்பான உழைப்பு!

எண்பதுகளின் தொடக்கத்தில் நாயகர்களின் குழந்தைப் பருவத்தைக் காட்டும் காட்சிகளும் சரி; தொண்ணூறுகளின் இறுதியில் இருக்கும் கல்லூரி மாணவ மாணவியரைக் காட்டும் காட்சிகளிலும் சரி; ஒளிப்பதிவாளர் ஜீவா தனது கற்பனைத் திறனைப் பயன்படுத்தி பிரேம்களை ‘கலர்ஃபுல்’ ஆக்கியிருப்பார்.

கார்த்திக் ராஜாவின் இசையில் ‘உல்லாசம்’ படத்தின் அனைத்து பாடல்களுமே ஹிட் ரகத்தில் இணைந்தன.

’யாரோ’ யார் யாரோ’ பாடலை இளையராஜா, பவதாரிணி பாடியிருந்தனர். அப்பாடலை அறிவுமதி எழுதியிருந்தார். ’வீசும் காற்றுக்கு’, ‘கொஞ்சும் மஞ்சள் பூக்கள்’ பாடல்களை பழனிபாரதி எழுதினார். கங்கை அமரன் இப்படத்தில் ‘இளவேனில் தாலாட்டும்’ பாடலை எழுதினார். மீதமுள்ள ‘சோலாரே’, ’முத்தே முத்தம்மா’, ‘வாலிபம் வாழச் சொல்லும்’, ‘சோலாரே’ பாடல்களில் பார்த்தி பாஸ்கர் இளமைக் கொண்டாட்டத்தை நிகழ்த்தியிருப்பார்.

கார்த்திக் ராஜா தந்த ஹிட் ஆல்பங்களில் ஒன்று இப்படம்.

’ஜெயிக்கணும்னா வலியைத் தாண்டி வரத்தான் வேணும்’ என்பது போன்ற பாலகுமாரனின் வசனங்கள் இன்றளவும் நம்மைக் கவரும்.
பி.லெனின் – வி.டி.விஜயனின் படத்தொகுப்பு, தோட்டா தரணியின் கலை வடிவமைப்பு, விக்ரம் தர்மாவின் ஆக்‌ஷன் கொரியோகிராஃபி, ரேகா சின்னிபிரகாஷ், பிருந்தா மற்றும் ராஜு சுந்தரத்தின் நடன வடிவமைப்பு உட்பட இப்படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு கொட்டப்பட்டிருந்தது.

விளம்பரப் பட இயக்குனர்களாக அறியப்படும் ஜே.டி – ஜெர்ரி இணை இப்படத்தை இயக்கியது. அழகியல் நிறைந்த காட்சியாக்கத்தோடு ஒரு கமர்ஷியல் மசாலா படத்தை அவர்கள் உருவாக்கியதாக எழுந்த எதிர்பார்ப்பே ‘உல்லாசம்’ படத்தின் யுஎஸ்பி.
அது மட்டுமல்லாமல், அமிதாப் பச்சன் கார்பரேஷன் தமிழில் தயாரித்த ஒரே படம் இதுவே. அந்த காலகட்டத்தில் அந்த நிறுவனம்  இந்தியிலும் தெலுங்கிலும் பிரமாண்டமான படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டது. அதுவும் இப்படத்தின் எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியது.

டபுள் ஹீரோ சப்ஜெக்ட்!

தமிழ் படங்களில் இரண்டு நாயகர்கள் இணைந்து நடிப்பதென்பது, அன்று மட்டுமல்லாமல் இன்றும் குதிரைக்கொம்பாகவே உள்ளது. அதனை மீறும் படைப்புகள் மீது ரசிகர்கள் தானாகவே ஈர்ப்பு கொள்வார்கள். அந்தவகையில் அன்றிருந்த அஜித்குமார், விக்ரமின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இருந்தது ‘உல்லாசம்’. 27 ஆண்டுகள் கழித்து பார்க்கையில், அவற்றில் பல அம்சங்கள் ‘க்ரிஞ்ச்’ ஆக தெரியலாம்.
விக்ரமுக்கு காட்சிகள் அதிகம் என்றபோதும், அவர் இதில் ஒரு பாடலில் மட்டுமே தோன்றியிருப்பார்.

அதேநேரத்தில், அஜித்துக்கு இதில் பாடல் காட்சிகள் மட்டுமல்லாமல் சண்டைக்காட்சிகளும் அதிகமுண்டு. ‘முத்தே முத்தம்மா’, ‘சோலாரே’ பாடல்களில் அஜித்குமார் இளமைத் துடிப்புடன் நடனமாடுவதைக் காண முடியும்.

இருவரது பாத்திர வார்ப்பு அந்த வேறுபாட்டினை ஏற்க வைத்தது. ஆனாலும், இக்கதை ரசிகர்கள் மனதோடு உறவாடவில்லை என்பதே நிஜம். நாயகர்கள் – நாயகி மட்டுமல்லாமல் இதர பாத்திரங்களை இன்னும் நேர்த்தியாகக் காட்டாமல் விட்டதே அதற்குக் காரணம் என்று தோன்றுகிறது.

‘உல்லாசம்’ படத்தின் கதையை மேம்போக்காக நோக்கினால், ஒரு முக்கோணக் காதல் கதை போன்று தெரியும். உண்மையில், அது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளையும், அவற்றுக்குப் புறம்பாகச் செயல்படுகையில் அவர்களிடத்தில் எழும் கோபதாபங்களையும் குறிப்பிட்ட அளவில் பிரதிபலிக்கிற ஒரு கதையாகவே தோன்றுகிறது. அந்த அம்சத்தை முன்னிறுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டு, காதலுக்கு இரண்டாமிடம் தந்திருந்தால் இப்படம் வேறுமாதிரியான கவனிப்பைப் பெற்றிருக்கலாம்.

அது போன்று இப்படம் குறித்து பலரிடமும் பெருமூச்சுகள் வெளிப்படலாம். அனைத்தையும் தாண்டி டபுள் ஹீரோ சப்ஜெக்ட், கார்த்திக் ராஜாவின் ஹிட் பாடல்கள், இளமை துள்ளும் அஜித்துக்காக நினைவுகூரப்படுகிறது ‘உல்லாசம்’.

-உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மீண்டும் சிரஞ்சீவி – மோகன் ராஜா கூட்டணி.. தனி ஒருவன் 2 என்ன ஆச்சு..?

share market: 375% லாபம் கொடுத்து முதலீட்டாளர்களை திக்குமுக்காட வைத்த பங்கு எது தெரியுமா?

வேலைவாய்ப்பு : ESIC -ல் பணி!

விமர்சனம்: டர்போ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *