திரைப்படங்களில் வரும் காதலுக்கும், யதார்த்தத்துக்கும் துளி கூடத் தொடர்பு கிடையாது. திரைப்படம் மட்டுமல்ல, கலைப்படைப்புகளில் இருப்பது போன்று காதலிக்கத் துடிப்பவர்களைப் பார்த்துக் காலம்காலமாகச் சொல்லப்படும் வார்த்தைகள் இவை.
அப்படியானால், திரைப்படங்களில் சாதாரண மனிதர்களின் காதல் சொல்லப்படவே இல்லையா? என்ற கேள்வி எழலாம். எல்லாவற்றிலும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் அது நிச்சயம் தலைகாட்டும்.
அப்படிப்பட்ட காதலொன்றைச் சினிமாத்தனத்தின் ‘ஜிகினா’ தெரியாமல் சாமர்த்தியமாகச் சொன்ன படம் ‘தினம்தோறும்’.
சமீபத்தில் ’டூரிங் டாக்கீஸ்’ யூடியூப் தளத்தில் சித்ரா லட்சுமணனுக்கு இயக்குனர் நாகராஜ் அளித்த பேட்டிக்குப் பிறகு, அப்படத்தைக் காண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ’
தினம்தோறும்’ வெளியாகி இன்றோடு 26 ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்றன. சரி, அந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?
வழமையான காதல்!
தொண்ணூறுகளில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ‘வேலை கிடைக்கவில்லை’ என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றும் ஒரு மனிதனின் காதலைச் சொல்கிறது இப்படம்.
ஆதி (முரளி) தன் ஊரைச் சேர்ந்த பூமா (சுவலட்சுமி) எனும் பெண்ணை 8 ஆண்டுகளாகக் காதலிக்கிறார். அதனை ஒருமுறை கூட அவரிடம் வெளிப்படுத்தியதில்லை.
ஆனால், அவரது நண்பர்களுக்கும் சந்திரா எனும் பெண்மணிக்கும் அது நன்றாகத் தெரியும். சந்திரா, பூமாவின் உறவினர். பூமா குறித்த தகவல்களை அவரிடம் தான் ஆதி கேட்டுத் தெரிந்துகொள்வார்.
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பும் பூமாவோடு மெல்லப் பழகத் தொடங்குகிறார் ஆதி. ஒருகட்டத்தில் தனது காதலையும் தெரிவிக்கிறார். பூமாவுக்கும் அவரைப் பிடித்திருக்கிறது. இருவரும் நெருங்கிப் பழகுகின்றனர்.
இந்த விஷயம் பூமாவின் தந்தைக்குத் தெரியவர, ஆதியின் வீட்டுக்குச் சென்று சண்டையிடுகிறார். அவரது குடும்பத்தைத் தரக்குறைவாகப் பேசுகிறார்.
ஊரில் மரியாதைக்குரியவராகப் போற்றப்படும் ஆதியின் தந்தைக்கு அது பெருத்த அவமானமாகப் படுகிறது. வீடு திரும்பும் மகனை ‘உன்னை வெட்டாமல் விடமாட்டேன்’ என்று ஆவேசப்படுகிறார்.
அதேநேரத்தில், தனது தந்தையிடம் ‘ஆதியோடு நான் பழகவே இல்லை’ என்று சத்தியம் செய்யாத குறையாக விளக்கம் தருகிறார் பூமா. அந்தக் காட்சியைக் காணும் சந்திராவுக்குத் தலையில் இடி விழாத குறை.
இத்தனையும் நடந்தபிறகும், ஆதியைத் தேடி பூமா வருகிறார். ‘நான் இப்பவே உன்னோட கிளம்பி வந்தா, எனக்கு உன்னால சோறு போட முடியுமா?’ என்று கேட்கிறார்.
அதுநாள் வரை ‘வேலை கிடைக்கவில்லை’ என்று சொல்லி வந்தவரை, இந்தக் கேள்வி திசை மாற்றுகிறது. அதன்பிறகு, நல்லதொரு வேலையைப் பெற்று பூமாவை ஆதி திருமணம் செய்வதோடு படம் முடிவடைகிறது.
மேலோட்டமாகப் பார்த்தால், ‘இந்த கதை ரொம்ப தட்டையா இருக்கே’ என்று தோன்றலாம். ஆனால், காதல் திருமணம் செய்துகொண்டு வெற்றிகரமாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பலர் மேற்சொன்ன அனுபவங்களையே சிற்சில மாற்றங்களோடு எதிர்கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில், ஒரு தலைமுறையின் காதலைத் திரையில் சுவாரஸ்யமாகச் சொன்ன படம் இது.
அற்புதமான பாத்திரங்கள்!
‘பெரிதாக எந்த வித்தியாசங்களையும் காட்டாமல், மிகசாதாரணமான கதையுடன் ஒரு கமர்ஷியல் படத்தைத் தருவது மிகவும் கடினம்’ என்று இயக்குனர் வெற்றிமாறன் முன்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
பல இயக்குனர்கள் இதனை ஒப்புக்கொள்வார்கள். அதனை ‘தினம்தோறும்’ படத்தில் அனாயாசமாக எதிர்கொண்டார் இயக்குனர் நாகராஜ்.
மிகச்சாதாரண மனிதர்களின் வாழ்வைச் சொல்லும் எந்தவொரு திரைப்படத்திலும் கதாபாத்திரங்கள் வலுவாக அமைவது கட்டாயம். அப்படிப் பார்த்தால் ‘தினம்தோறும்’ படத்தில் ஒரு டஜன் பாத்திரங்களாவது தேறும்.
‘இதயம்’ படத்தின் இன்னொரு பதிப்பாக, இந்த படத்திலும் காதலின் வெம்மையைச் சுமப்பவராக முரளியின் ஆதி பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.
கே.பாலச்சந்தரின் தொலைக்காட்சி சீரியல்கள் வழியே புகழ் பெற்ற ரேணுகாவுக்கு இதில் வித்தியாசமான பாத்திரம். காதல் திருமணம் செய்த அவருக்கு ஒரு குழந்தை உண்டு. கணவரோ துபாயில் வேலை பார்ப்பவர்.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களோடு வம்பு பேசிக்கொண்டு, சின்னஞ்சிறுசுகளின் காதல் குறும்புகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வது அவரது குணாதிசயம்.
’இப்ப மட்டும் பூமா நேர்ல வந்தா என்ன பண்ணிருவ, இப்படி இப்படி தலையை கோதுவ’ என்று பின்தலை முடியைக் கோதி, அவர் முரளியைக் கிண்டலடிக்கும் காட்சியில் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது.
‘கோகுலத்தில் சீதை’ போன்று இதிலும் சுவலட்சுமிக்கு ரொம்பவே ‘போல்டான’ பாத்திரம். பல்வேறு அடுக்குகள் கொண்டதாக அது வடிவமைக்கப்பட்டிருக்கும்.
தந்தையைப் பார்த்து ‘நான் அவனைக் காதலிக்கலை’ என்று கண்களை உற்றுநோக்கிப் பேசும் அந்த பாத்திரம், சில காட்சிகளுக்குப் பிறகு ‘அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்’ என்று ஆணித்தரமாகச் சொல்வது போன்று காட்டியிருப்பார் இயக்குனர் நாகராஜ்.
அப்பாத்திரத்தின் அழுகை, ஆத்திரம், காதல், சிரிப்பு, இரக்கம், அன்பு என்று எல்லா உணர்வுகளிலும் ‘கம்பீரத்தை’ நிறைத்திருப்பார்.
முரளியின் தாயாக வடிவுக்கரசி, தந்தையாக வரும் கிட்டி, தங்கையாக வரும் தீபா வெங்கட், நாயகியின் பெற்றோராக வரும் மலேசியா வாசுதேவன் – சத்யபிரியா ஜோடி, வில்லனாக வரும் மகாநதி சங்கர், எம்.எல்.ஏவாக வரும் மணிவண்ணன் என்று இதில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
நாயகனின் நண்பர்களாக வரும் நாகராஜ் மற்றும் சுரேஷிடம், மணிவண்ணன் அரசியல் பேசும் காட்சி, இன்றைக்கும் ரசிக்கும்படியாக இருக்கும்.
அதே மணிவண்ணனிடம் முரளி மல்லுக்கட்டும் காட்சியில், வில்லத்தனமாகக் காட்டாமல் சமூக அக்கறையோடு அவர் பேசுவதாகக் காட்டியிருப்பார் இயக்குனர்.
‘லைஃப் இஸ் எ ட்ராமா, ஐ வாண்ட் பூமா’ என்று முரளிக்குக் காதல் கடிதம் எழுதித் தரும் சௌந்தர் பாத்திரம் கூட, கவனிக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் முரளியும், சுவலட்சுமியும் இளமைக் கொந்தளிப்பில் எல்லை மீறுவதாக ஒரு காட்சி இதில் உண்டு.
அப்போது, முரளியை அழைத்து ‘இதெல்லாம் நியாயமா’ என்று ஒழுக்கம் பற்றி ஒருவர் ‘கிளாஸ்’ எடுப்பார். குரலை உயர்த்தும் அந்த நபர் ‘நீங்க புருஷன் பொண்டாட்டின்னா தாலி எங்கம்மா’ என்பார்.
அதற்கு, ‘சேட்டு கடையில அடகு வச்சிருக்கேன்’ என்று பதிலளிப்பார் சுவலட்சுமி. இது போன்ற கலாசாரக் காவலர்களின் உரையாடல்களை இன்றும் நாம் பல இடங்களில் கேட்க முடியும்.
’ஓசிச்சோறு’ என்று திட்டும் பெற்றோர்கள், ‘உதவாக்கரை’ என்று சொல்லும் ஊர்க்காரர்கள், ‘மாமா’ என்று பாசம் காட்டும் நண்பர்கள்.
‘உன் ஆளு வந்துட்டா’ என்று தகவல் சொல்லும் அக்கா / மதினி / தோழி ‘காதலிக்கிறாங்களா?’ என்று வரிந்து கட்டும் உறவினர்கள் மற்றும் இதர பல தடைகளைத் தாண்டி காதலிலும், வாழ்க்கையிலும் வெற்றியை அடையும் மிகச்சாதாரண மனிதனை மையப்படுத்தும் இப்படம்.
மறைந்த இசையமைப்பாளர் ஓவியன் இப்படத்தில் ‘நெஞ்சத்தில் வெகுநாட்களாய்’, ‘ஓ கண்ணுக்குள் முகம் பார்ப்பதென்ன’, ‘என் வானம் நீதானா’ என்று அருமையான மெலடிகளை தந்திருப்பார். இதர பாடல்களும் கூட ‘ஓகே’ ரகமாய் இருக்கும்.
திரைக்கதையில் காதலின் வலியையும், வேதனையையும் அது உண்டாக்கும் நல்மாற்றங்களையும் சொல்லும் இடங்களில் ஓவியனின் பின்னணி இசை எளிமையானதாகவும் மற்ற இசையமைப்பாளர்களிடம் இருந்து வேறுபட்டதாகவும் இருக்கும்.
இருந்தும் அவருக்குத் தொடர்ச்சியான வாய்ப்புகள் அமையாமல் போனது காலம் செய்த கொடுமைதான். ஒளிப்பதிவாளர் அப்துல் ரகுமான், கவித்துவமான காட்சிகளில் பிரேம்களில் அழகை நிறைத்திருப்பார்.
இதர காட்சிகளில் யதார்த்தத்தைக் காட்டியிருப்பார். கனகச்சிதமாகக் கதையோட்டத்தின் வேகம் குறையாதவாறு, காட்சிகளைக் கோர்த்திருப்பார் படத்தொகுப்பாளர் பழனிவேல்.
இப்படிப் பல விஷயங்கள் மிகச்சரியாக அமைந்தும் இப்படம் சுமாரான வெற்றியாகவே அமைந்தது. ஆனால், அதில் இடம்பெற்றிருந்தவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியது.
நாகராஜின் தனித்துவம்!
இளம் வயதில் இயக்குனர்கள் சசி, களஞ்சியம் போன்றவர்களோடு ஒரே அறையில் தங்கியிருந்தவர் நாகராஜ். ’காதல்கோட்டை’ படத்தின் கதை விவாதத்தில் உதவி இயக்குனராகப் பங்கேற்றவர்.
அந்த படத்தின் இடையிலேயே, படப்பிடிப்பில் இருந்து விலகுவதாகக் கூறியவர். ‘இனிமே இயக்குனராகத்தான் நான் வேலை பார்ப்பேன்’ என்று இயக்குனர் அகத்தியனிடம் நேரடியாகச் சொன்னவர்.
அதற்கடுத்த ஓராண்டுக்குள் முரளியை நேரில் சந்தித்து, ஒரு நள்ளிரவில் அவரிடம் முழுக்கதையையும் சொல்லி, அதற்கடுத்த சில நாட்களிலேயே ‘தினம்தோறும்’ படத்தை இயக்கியது, ஒரு சினிமா திரைக்கதையை மிஞ்சும்.
‘தினம்தோறும்’ படத்திற்குப் பிறகு முரளியை நாயகனாகக் கொண்டு ஒரு படத்தைத் தொடங்கியிருக்கிறார். விஜய்யிடம் கதை சொல்லி, அவரும் ‘ஓகே’ என்று நாகராஜ் இயக்கத்தில் நடிக்கச் சம்மதித்திருக்கிறார்.
இப்படிப் பல வாய்ப்புகள். அத்தனையையும் ‘மது போதை’ எனும் ஒரு அரக்கனுக்குப் பறி கொடுத்திருக்கிறார். கௌதம் மேனனின் ‘மின்னலே’, ‘காக்க.. காக்க..’ உட்படப் பல படங்களின் திரைக்கதை வசனத்தில் இவர் பங்களித்திருக்கிறார்.
இது போக, ‘டைட்டில் கிரெடிட்’ இல்லாமல் வெறுமனே பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு இவர் எழுதிய திரைப்படங்கள் 30-க்கும் மேலிருக்கும்.
அந்த காலகட்டத்தில், ஒரு நாளில் 18 மணி நேரத்திற்கும் மேலாக ’மதுவே கதி’ என்று இருந்திருக்கிறார் இயக்குனர் நாகராஜ். இத்தகவலைப் பல பேட்டிகளில் அவரே பகிர்ந்திருக்கிறார்.
’அந்த போதையில் இனி திளைக்கக் கூடாது’ என்று முடிவு செய்த கணத்தில் இருந்து நாகராஜின் வாழ்க்கை வேறு பக்கமாகத் திரும்பியிருக்கிறது.
மிகவும் கடினப்பட்டு ‘போதையின் பிடியில்’ இருந்து விடுபட்டு, இன்று மீண்டும் ஒரு படைப்பாளியாகச் செயல்பட்டு வருகிறார் நாகராஜ்.
அந்த அனுபவத்தைச் சொல்லும் அவரது வார்த்தைகள் நிச்சயம் பல ‘போதை விரும்பி’களின் வாழ்வை வேறு திசைக்கு அழைத்துச் செல்லும்.
’தினம்தோறும்’ படமும் சரி; அதன் இயக்குனர் நாகராஜின் பேட்டிகளும் சரி; இரண்டுமே இரு வேறு தலைமுறை மனிதர்களின் அடையாளங்களைச் சுமந்து நிற்கின்றன.
மிகச்சாதாரண மனிதர்கள் இந்த மண்ணில் எப்படி வாழ்ந்தனர், வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதற்கான ஒரு சோறு பதமாக அவை விளங்குகின்றன. அதனை உணர்ந்தவர்கள், இன்றும் ‘தினம்தோறும்’ படத்தைக் கொண்டாடுவார்கள்.
என்னதான் ஒருகாலகட்டத்தின் காதல் ஜோடிகளை ‘ரியாலிஸ்டிக்’காக காட்டுவதாகக் கூறினாலும், இந்த படத்திலும் சினிமாத்தனமான காட்சிகள் நிறையவே உண்டு.
அதையும் மீறி, ‘வாழ்வில் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையைக் காதல் தரும்’ என்று சொன்ன வகையில் பீடத்தின் மேலேறி நிற்கிறது இந்த ‘தினம்தோறும்’!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Video : ஹாலிவுட் விருதுக்கு ’ஜவான்’ பரிந்துரை : அட்லீ பெருமிதம்!
அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
சட்டமன்றத்தில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்!
அதிக சம்பளம் கேட்ட தனுஷ் : பதறிய தயாரிப்பு நிறுவனம்!