பிரபுதேவா : யப்பா. யப்பா.. 25 வருஷமாச்சுப்பா..!

Published On:

| By uthay Padagalingam

25 Years of Eazhaiyin Sirippil Movie

பதின்ம வயதுகளில் ஏதோ ஒரு சினிமா நடிகருக்கு ரசிகராக இருந்தாக வேண்டுமென்பது எழுதப்படாத விதி. விதிவிலக்காகச் சிலர் இருக்கலாம். என்ன செய்வது? ஒரு சாதாரண மனிதனாகப் பிறந்த காரணத்தால், நீரோட்டத்தோடு இணைய வேண்டிய வாய்ப்பு பற்றிக்கொண்டது. ஆனாலும், அந்த ஓட்டம் வித்தியாசமானதாக, பிரத்யேகமானதாக இருந்தது. 25 Years of Eazhaiyin Sirippil Movie

பல ஹிட் படங்களைத் தந்தாலும் பெரிதாக ரசிகர் மன்றங்கள் இல்லாத அர்ஜுன், பிரபுதேவா என் மனதில் ஒளிவீசித் திகழ்ந்த காலமது. இப்போது தனுஷுக்கே முன்மாதிரி என்று கருதப்படுகிற அளவுக்குப் புகழ் பாடப்படுகிற பிரபுதேவாவின் நடிப்பு, அக்காலகட்டத்தில் ‘ஓவர் ஆக்டிங்’ ஆக கருதப்பட்டது. ஆனால், அவரது நடிப்பு பற்றிய புரிதல் அப்போது துளி கூட இருந்ததில்லை.

பிரபுதேவாவின் படங்களில் பாடல்கள் சிறப்பாக இருந்தது, அவரைக் கொண்டாடக் காரணமாக அமைந்தது. 25 Years of Eazhaiyin Sirippil Movie

இந்து, காதலன் என்று இரண்டு அடுத்தடுத்த மியூசிகல் ஹிட் படங்களில் நடித்த பிரபுதேவா, அடுத்ததாக ‘ராசய்யா’வில் நடித்தார். அதில் வரும் ’காதல் வானிலே’, ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல்கள் நீண்ட காலம் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் தாக்கத்தால் ’கருவாட்டுக் குழம்பு’, ’பாட்டெல்லாம் சூப்பர்ஹிட்தான்’, ‘திண்டுக்கல்லு திண்டுக்கல்லு’ பாடல்களைத் தாமதமாகவே ரசிக்க வேண்டியிருந்தது. 25 Years of Eazhaiyin Sirippil]\

25 Years of Eazhaiyin Sirippil Movie

லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு என்று பிரபுதேவா அடுத்தடுத்து தமிழில் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டான பாடல்களைக் கொண்டிருந்தன. விஐபி, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, நினைவிருக்கும் வரை, சுயம்வரம், டைம் படப் பாடல்கள் எனது ஆல்டைம் பேவரைட்.

பெண்ணின் மனதைத் தொட்டு, டபுள்ஸ், உள்ளம் கொள்ளை போகுதே, அள்ளித்தந்த வானம், மனதைத் திருடிவிட்டாய், சார்லி சாப்ளின் என்று போன்ற படங்களில் பாடல்கள் சிறப்பாக இருந்ததன் பின்னால் பிரபுதேவாவின் பங்களிப்பும் இருந்திருக்கலாம் என்பது எனது அனுமானம்.

தொண்ணூறுகளின் பிற்பாதியில், இந்தப் பெயரைத் தட்டிப்பறிக்கும் அளவுக்குத் தன் படங்களின் பாடல்களில் கவனம் செலுத்தினார் விஜய். கேமிராவுக்கு முன்னும் பின்னும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் கூட அவரையே பின்பற்றினார் என்பது என் எண்ணம். தன்னையும் அறியாமல் பிரபுதேவா அந்த இடத்தை விஜய்க்குத் தாரை வார்த்தார்.

அது மட்டுமல்லாமல், படங்கள் வெளியாவதில் ஏற்பட்ட கால தாமதம் அவருக்கான பிரபல்யத்தைக் குலைத்தது என்றும் கூடச் சொல்லலாம். 25 Years of Eazhaiyin Sirippil Movie

பிரபுதேவா, பார்த்திபன் நடித்த ‘ஜேம்ஸ்பாண்டு’ படத்தை ஆவலோடு எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்று முதல் நாளே ஏமாந்த அனுபவமும் உண்டு.

இந்த அனுபவங்களுக்கு நடுவே, ஒரு படத்தை மட்டும் பார்க்காமல் தவிர்த்திருக்கிறேன். அந்த படத்தின் பெயர் ‘ஏழையின் சிரிப்பில்’. ‘சத்ரியன்’ , ‘உத்தமபுருஷன்’, ‘பிரம்மா’ உள்ளிட்ட எத்தனையோ வெற்றிப்படங்களைத் தந்த கே.சுபாஷ் இதனை இயக்கினார்.

‘ஒரு நாடகம் போல இருக்குதே’ என்ற எண்ணம், இப்படத்தைப் பார்க்கும் முன்னரே மனதில் தோன்றியது. அது, இப்படத்தைக் காணாமல் தவிர்க்கச் செய்தது. ஆனால், பின்னாட்களில் அது தவறென்று உணர்ந்தேன்.

வித்தியாசமான கதைக்களம்! 25 Years of Eazhaiyin Sirippil Movie

ஏழையின் சிரிப்பில்’ கதை மிகவும் எளிமையானது.

கடலூர் பேருந்து நிலையத்தில் ஒரு தனியார் பேருந்துக்குப் பயணிகளைச் சேர்க்கும் வேலையைச் செய்வார் நாயகன். ‘உழைப்பே உன்னை உயர்த்தும்’ என்றிருக்கிற அவர் வாழ்வில் சில பெண்கள் கடந்து செல்வார்கள். சிலர் அவரை விரும்புவார்கள். ஒரு பெண்ணை நாயகன் விரும்புவார். இறுதியில், யாரை நாயகன் திருமணம் செய்கிறார் என்பதுடன் படம் முடிவடையும்.

இடையே பஸ் கம்பெனி முதலாளியின் பாசம், அவரது குடும்பச் சூழல், பஸ் ஸ்டாண்டில் கடை வைத்திருப்பவர்களின் அலப்பறைகள், குசும்பு பயணிகளின் லந்துகள் என்று வித்தியாசமானதொரு உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது ‘ஏழையின் சிரிப்பில்’. ’மாசத்துல ஒருநாள் மட்டும் எங்கேயோ போறானே’ என்று நாயகனை இதர பாத்திரங்கள் உற்று நோக்குவதற்கான பதிலாக, சுவலட்சுமியைக் காட்டும் பிளாஷ்பேக் பகுதியும் இதிலுண்டு.

இப்படத்தின் கிளைமேக்ஸ் ரசிகர்கள் பலர் எதிர்பாராத வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

‘நினைவிருக்கும் வரை’ படத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இன்னொரு ‘மினிமம் பட்ஜெட் கியாரண்டி’யை தருவதாக இப்படத்தில் இணைந்தது கே.சுபாஷ் – பிரபுதேவா கூட்டணி. கலைமணியின் கதை வசனம், தேவாவின் இசை என்று பல சிறப்புகளைக் கொண்டிருந்த இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர், இப்போது சிறப்பான குணசித்திர நடிகராக அறியப்படுகிற இளவரசு.

‘கரு கரு கருப்பாயி’ பாடல், இப்படம் வெளியான காலகட்டத்தில் அவ்வப்போது சன் டிவி, ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும். அதனைக் கேட்டவுடன், ‘உள்ளேன் ஐயா’ என்று டிவி முன்னே ஆஜராவது வழக்கம். பிரபுதேவாவுக்கு இணையாக ஆடக்கூடிய நாயகி ரோஜாதான்’ என்று ஒவ்வொருமுறையும் உணர்த்துகிற அப்பாடலில், இளவரசுவின் கேமிரா கோணங்கள், நகர்வுகள் ‘ஆஹாஹா..’ என்றிருக்கும்.

லியோ’ படத்தில் அப்பாடல் பயன்படுத்தப்பட்டதைக் கண்டபிறகு, அந்த நினைவுகள் வந்து போயின.

அது போக ‘யப்பா யப்பா ஐயப்பா’, ’பச்சை கல்லு மூக்குத்திய’ என்ற இரு துள்ளல் பாடல்களோடு ‘சக்கரவள்ளி கணக்கா சிரிச்சாங்க’ மற்றும் ’புறாவே ஏன் கண்ணடிச்ச’ என்று இரண்டு வித்தியாசமான மெலடிகளையும் தந்திருந்தார் தேவா. இதில் ‘புறாவே’ பாடல் படத்தில் இடம்பெற்றதா எனத் தெரியவில்லை.

முழுக்க ஸ்டூடியோவில் ‘செட்’ அமைத்து ஆக்கப்பட்ட படமாகத் தோற்றமளித்த ‘ஏழையின் சிரிப்பில்’, இப்போது நல்லதொரு ‘ரொமான்ஸ் காமெடி ட்ராமா’வாக தெரிகிறது. சமகாலப் படங்கள் தரும் மோசமான அனுபவம் கூட அதற்கொரு காரணமாக இருக்கலாம். அதையும் மீறி, இப்படத்தின் கதைக்களமும் கதாபாத்திரங்களும் வித்தியாசமானவை என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

’ஏழையின் சிரிப்பில்’ திரைப்படம் 2000ஆவது ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதியன்று வெளியானது. அப்போது இப்படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது என்று தெரியவில்லை. ஆனால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பார்ப்பவர்களுக்கு நல்லனுபவத்தை இது தரும் என்பது திண்ணம்.

கேட்டது.. கிடைச்சது..! 25 Years of Eazhaiyin Sirippil Movie

’ஏழையின் சிரிப்பில்’ படம் குறித்து தேடும்போதெல்லாம், ‘களவும் கற்று மற’ படம் குறித்த தகவல் இடையே வந்து போகும். 25 Years of Eazhaiyin Sirippil Movie

’இந்து’, ‘ராசய்யா’, ‘நினைவிருக்கும் வரை’, ’சுயம்வரம்’, ‘ஏழையின் சிரிப்பில்’ படங்களைத் தொடர்ந்து ரோஜாவுடன் பிரபுதேவா சேர்ந்து நடித்த படம் ‘களவும் கற்று மற’. இப்படம் குறித்த தகவல்களைக் கண்ட ஞாபகம் இருக்கிறது. அது குறித்து தேடியபோது, அதன் இயக்குனர் மனோஜ்ஜி அப்படம் குறித்துப் பேசியிருந்தது கண்ணில்பட்டது.

’பிளாக் டிக்கெட் விற்பவராக வரும் நாயகன் பல குற்றங்களை நேர்த்தியாக நடத்தி போலீசிடம் பிடிபடாமல் வாழ்கிறார். நாயகியைப் பார்த்ததும் மனம் திருந்தத் தொடங்குகிறார். அவரைக் காதலிக்கிறார். ஒருநாள், செய்யாத குற்றத்திற்காக நாயகன் தண்டனையை அனுபவிக்க நேர்கிறது. அதனால், நாயகியின் காதலையும் இழக்க நேர்கிறது. அதன்பின் என்னவானது என்பதே இப்படத்தின் முடிவு’ என்று ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் மனோஜ்ஜி தெரிவித்திருக்கிறார்.

2004ஆம் ஆண்டு முழுமையாக நிறைவுற்ற இப்படம் ஏனோ திரையில் வெளியாகவில்லை.

25 Years of Eazhaiyin Sirippil Movie

ஆனால், இதன் பாடல்கள் இன்றும் யூடியூப் மற்றும் சில வலைதளங்களில் கேட்கக் கிடைக்கின்றன. அவற்றில் ‘கொக்கா கொக்காவும்..’ பாடலை நடன நிகழ்ச்சிகள் நடத்தும் குழுக்கள் பயன்படுத்தி வருகின்றன. 25 Years of Eazhaiyin Sirippil Movie

இந்த படத்தில் ‘ஓ நண்பா கவலைப்பட வேணாம்’, ’கிச்சுமுச்சு வச்சுகிச்சு’, ’தெய்வமே அவ நெருங்குறா’ பாடல்களை இன்றும் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெங்கும் ஓடியாடிக் கொண்டிருக்கிற பேருந்துகளில் கேட்க முடியும். 25 Years of Eazhaiyin Sirippil Movie

அப்பாடல்களைக் கேட்டவுடன், ‘நான் கேட்டது.. ஆனா கிடைச்சது..’ என்று இயக்குனர் கௌதம் மேனன் பேசுகிற ‘வீடியோ மீம்’தான் நினைவுக்கு வந்தது. கூடவே, ‘யப்பா.. யப்பா.. ஏழையின் சிரிப்பில் வெளியாகி 25 வருஷமாச்சுப்பா’ என்றும் தோன்றியது. 25 Years of Eazhaiyin Sirippil Movie

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share