24 years of suyamvaram

24 மணி நேரம் டூ 24 ஆண்டுகள்… சுயம்வரம்: தமிழ் சினிமாவின் சாதனை படம்!

சினிமா

திரைப்படம் என்பது கூட்டுழைப்பின் மகத்துவம். ஒரேயொரு மனிதனின் கற்பனையில் உதிக்கும் ஒரு உலகம், பலரால் உருப்பெறும் மாயாஜாலம் அது. நிகழ்த்துகலையின் பலங்களையும் பலவீனங்களையும் புரிந்தவர்களால் மட்டுமே சாதிக்கக்கூடிய களம் அது. கால அவகாசம் என்பது அதில் மிக முக்கியம். பெரும்பாலும் வியாபார நெருக்கடிகள், செலவுக் குறைப்பு, மனித உழைப்பு ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் மிக மிக அவசரமாகத் திரைப்படங்கள் உருவாக்கப்படும். அவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, 24 மணி நேரத்தில் படம்பிடிக்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனைக்காகவே உருவானதுதான் 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ‘சுயம்வரம்’. இன்றோடு அந்தப் படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆகின்றன.

டைட்டிலுக்கு ஏற்ற கதை!

சுயம்வரம் படத்தின் சிறப்பே, ஒரே நாளில் பல முன்னணி நடிகர், நடிகைகளை ஓரிடத்தில் ஒன்று சேர்த்ததுதான். அதற்கேற்ப, அப்படத்தின் கதையும் அமைக்கப்பட்டிருந்தது.

24 years of suyamvaram: recollecting from past

ஒரு செல்வந்தர் தனது 60ஆம் திருமண வைபவத்தின்போது உடல்நலக்குறைவுக்கு ஆளாகிறார். அவருக்கு 3 மகன்கள்; 6 மகள்கள். அத்தனை பேருக்கும் ஒரே முகூர்த்தத்தில் திருமணம் நடத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். அவரது பிள்ளைகளில் சிலர் காதலில் மூழ்கியிருக்கின்றனர். சிலருக்குக் கல்யாணம் செய்யும் யோசனையே இல்லை. பெற்றோர் பார்த்து முடிவு செய்பவரையே திருமணம் செய்வதென்று மீதமுள்ளவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஜோடி தேட தினசரியில் விளம்பரம் வெளியிடப்படுகிறது. ஒரேநாளில் அதற்கான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. அரச காலத்தில் நடந்த சுயம்வரத்திற்கு நிகரான நிகழ்வு அது.

அந்த செல்வந்தரின் பிள்ளைகளைக் காதலிப்பவர்கள் முதல் அந்தக் குடும்பத்தில் சம்பந்தம் செய்துகொள்ள வேண்டுமென்று முடிவு செய்தவர்கள் வரை பலரும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முனைகின்றனர். சிலரோ சொத்துக்களை அபகரிக்கும் நோக்குடன் அந்த இடத்திற்குள் நுழைகின்றனர். அப்போது சில களேபரங்கள் நிகழ்கின்றன. அனைத்தையும் மீறி, அந்த செல்வந்தரின் அனைத்து பிள்ளைகளுக்கும் ஒரேநேரத்தில் திருமணம் நடந்ததா என்பதுடன் அப்படம் முடிவடையும்.

இப்படிச் சொல்லும்போதே முடிவு என்னவாக இருக்கும் என்பதையும் நம்மால் யூகிக்க முடியும். மேற்சொன்ன கதையில் இருந்தே, டைட்டிலுக்கான அர்த்தம் விளங்கும்.

24 years of suyamvaram

ரசிகனின் பார்வையில்..!

’24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கின்னஸ் திரைப்படம்’ என்பதே ‘சுயம்வரம்’ மீது ரசிகர்களின் பார்வை விழக் காரணமாக இருந்தது. அதுவே, ‘இதுல என்ன இருக்கப்போகுது’ என்ற பலத்த அவநம்பிக்கையையும் விதைத்தது. அனைத்தையும் மீறி தியேட்டருக்கு வந்தவர்கள் கொஞ்சம் திகைத்துத்தான் போனார்கள். ஏனென்றால், ஒரே நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது இப்படித்தான் இருக்கும் என்ற அவர்களது எதிர்பார்ப்பு பொய்த்துப் போயிருந்தது; அந்த அளவுக்கு, வழக்கமான கமர்ஷியல் திரைப்படமாக ‘சுயம்வரம்’ இருந்தது. ஒரே நாளில் படம்பிடிக்கப்பட்டது என்ற ஒரு விஷயமே அதன் மீதான மதிப்பைப் பன்மடங்காக்கியது. அதேநேரத்தில், திரையில் இருந்த நேர்த்திக் குறைவும் அதிருப்தியை உண்டாக்கியது.

’சுயம்வரம்’ ஸ்கிரிப்டின் பெரிய பலம், அனைத்து நடிகர் நடிகைகளையும் ஒரு புள்ளியில் இணைப்பதற்கான ஒரு காரணத்தைக் கொண்டிருந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் தவிர்த்து அப்போது திரைத்துறையால் கொண்டாடப்பட்ட நடிகர்களும், போலவே சிம்ரன், தேவயானி, மீனா உள்ளிட்ட நாயகிகள் தவிர்த்து அன்றைய காலகட்டத்தில் முன்னணியில் இருந்த நாயகிகளும் அதில் நடித்திருந்தனர். இவர்கள் அனைவரையும் ஒரே படத்தில் பார்ப்பதென்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. நாயகன் நாயகி ஜோடிகளைத்  தவிர நெப்போலியன், அர்ஜுன், பாக்யராஜ், ஊர்வசி, மன்சூர் அலிகான் போன்றவர்களுக்கும் முக்கியத்துவம் தரும் விதமாகக் காட்சிகள் இருந்தது இப்படத்தின் பலம்.

அதே நேரத்தில், இப்படத்தின் கதைப்போக்கும் சில காட்சிகளும் ஒரு தரப்பினரைக் கவரவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். காரணம், ’சுயம்வரம்’ மூலமாக ஜோடி தேடும் படலம் என்பது அபத்தமாக்கப் பட்டதுதான். ஆனால், இப்போதும் ‘மேட்ரிமோனியல்’ பார்த்து வரன் பார்க்கும் பழக்கம் இருப்பதும், அவற்றில் பல முறைகேடுகள் நிகழ்வதும் நிஜத்திற்கும் நிழலுக்குமான இடைவெளியைச் சொல்லிவிடும்.

இந்தப் படத்தில் கார்த்திக், ஐஸ்வர்யா, பிரபு, பிரபுதேவா, பாண்டியராஜன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிரிப்பை வரவழைக்கும் விதமாக இருக்கும். ஒரே நாளில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கும்பலாக ஆடும் வகையிலான பாடல்களும் உண்டு. அர்ஜுன் இயக்கத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சி, அன்றைய திரைப்பட வியாபாரத் தேவையை நிறைவு செய்தது.

2000ஆவது ஆண்டையொட்டி வெளியானாலும், எண்பதுகளில் வெளியான ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவமே ரசிகர்களுக்குக் கிடைத்தது இதன் பலவீனம். அவசரகதியில் படம்பிடிக்கப்பட்டதால் உருவான பலன் என்று அதையும் கூட, விமர்சகர்கள் புறந்தள்ளிவிட்டார்கள். இப்படித்தான் ‘சுயம்வரம்’ தமிழ்நாட்டு மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இன்றும் கூட பொழுதுபோக்காக சுயம்வரம் படத்தை ரசிக்க முடியும். அப்படிப்பட்ட எண்ணத்தையே அது தந்திருக்கிறது.

24 years of suyamvaram

ஒரு முன்னுதாரணம்!

இந்த படத்தில் 14 இயக்குனர்கள், 19 ஒளிப்பதிவாளர்கள், 30க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர் நடிகைகள் தங்கள் பங்களிப்பைத் தந்தனர். இந்தப் படத்தின் மூலமாக கின்னஸ் சாதனையில் இடம்பெற விரும்பிய தயாரிப்பாளர் கிரிதாரிலால் நாக்பால், இதன் கதையை எழுதினார். ‘என்னப் பெத்த ராசா’, ‘தங்கத்தின் தங்கம்’ உள்ளிட்ட படங்களின் இயக்குனர் சிராஜ், இதற்குத் திரைக்கதை வசனம் எழுதி ஒரு பகுதியையும் இயக்கினார்.

தேவா, சிற்பி, வித்யாசாகர் ஆகியோர் மூன்று பாடல்களுக்கு இசையமைக்க, இரண்டு பாடல்களோடு பின்னணி இசையும் தந்தார் எஸ்.ஏ.ராஜ்குமார். இன்னும் நடன வடிமைப்பாளர்கள், சண்டைப்பயிற்சியாளர்கள், கலை இயக்குனர், ஒப்பனை மற்றும் உடைகள் பணிகளை மேற்கொண்டவர்கள், தயாரிப்பு மேலாளர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள், அவர்களது உதவியாளர்கள், துணை நடிகர் நடிகைகள் என்று கிட்டத்தட்ட 3,000க்கும் மேற்பட்டோர் கொட்டிய உழைப்பைத் தாங்கியிருந்தது ‘சுயம்வரம்’.

கின்னஸ் நிறுவனத்தைச் சார்ந்தவர்களின் மேற்பார்வையில், ஏப்ரல் 5ஆம் தேதி காலை 6 மணிக்குத் தொடங்கி அடுத்த நாள் காலை 6.50 மணியளவில் நிறைவு பெற்றது இதன் படப்பிடிப்பு.

ஒரு திரைப்படத்தை இழை இழையாகச் செதுக்கி, ரசித்து உருவாக்கப் பல நாட்கள் ஆகும் என்பது உண்மையே. அதே நேரத்தில், அந்த உழைப்பின் பின்னிருக்கும் பெருமளவிலான பணப்புழக்கமே அதில் நிறைந்திருக்கும் காலக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் சொல்லும். அப்படிப் பார்த்தால், அன்றும் இன்றும் குறைந்த நாட்களில், சிக்கனமான பொருட்செலவில் உருவாகி லாபத்தை ஈட்டிய படங்களே வெற்றிகளாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் ‘சுயம்வரம்’ ஒரு சாதனையாகக் கருதப்பட்டது.

அது மட்டுமல்லாமல், அனைத்து நடிகர் நடிகைகளையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒன்றிணைத்தால் இப்படியொரு படைப்பை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை அண்டை மாநில திரைத்துறையினரிடம் உருவாக்கியது ‘சுயம்வரம்’. அதன் விளைவாக ஒரு முன்னுதாரணம் ஆகவும் மாறியது. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உட்பட அமைப்புகளின் சார்பாகப் படம் தயாரிக்கும் கலாசாரத்தை வேரூன்றச் செய்தது.

‘சுயம்வரம்’ படத்தில் சம்பந்தப்பட்ட கலைஞர்களின் அனுபவங்கள், மிகக்குறைந்த அளவிலேயே ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நிச்சயமாக ஒரு புத்தகமாகப் பதிப்பிக்கத்தக்க வகையில், அன்று நடந்த சம்பவங்கள் இன்றும் பலரது மனதில் நினைவுகளாகத் தங்கியிருக்கும்.  அவற்றைப் பகிர்வது எதிர்காலத்தில் திரைத்துரையினருக்குப் பலனளிப்பதாக அமையும்.

உதய் பாடகலிங்கம்

யுவன் இசை நிகழ்ச்சி: தெறிக்கவிட்ட சிம்பு… VIBE செய்த ரசிகர்கள்!

விம்பிள்டன் பட்டத்துடன் ரூ.25 கோடி பரிசு: வோன்ட்ரோசோவா சாதனை!

 

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *