பண்டிகைக் காலம் என்றாலே உணவு, உடை, இதர ஆடம்பரத் தேவைகள் நினைவுக்கு வருவதைப் போலவே பொழுதுபோக்கு அம்சங்களும் அவற்றின் பின்னே தொடர்வது காலம்காலமாக இருந்து வருகிறது.
எந்தக் கொண்டாட்டம் என்றாலும், அதன் அடிப்படை பொழுதுபோக்கு அம்சம் தானே. அந்த வகையில், கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக நம்மவர்களின் விருப்பங்களில் ஒன்றாக இருந்து வருபவை ‘புதிய திரைப்பட வெளியீடுகள்’.
வரவிருக்கும் தைப்பொங்கல் திருநாளை ஒட்டித் தமிழில் சுமார் 5 படங்கள் வரவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது போகச் சில படங்கள் ‘க்யூ’வில் நிற்கின்றன.
அவற்றில் ரசிகர்களின் மனம் கவரப் போவது எந்தப் படம்? பார்க்கலாம்..!

வணங்கான்
நாச்சியார் படத்திற்குப் பிறகு பாலாவின் இயக்கத்தில் திரையைத் தொடுகிற படம் ‘வணங்கான்’. இதில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஜான் விஜய், ராதாரவி, சாயா தேவி, சண்முகராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆர்.பி.குருதேவ் இதற்கு ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷும் பின்னணி இசையை சாம்.சி.எஸ்ஸும் அமைத்துள்ளனர்.
பாலா – அருண் விஜய் காம்பினேஷனில் உருவாகிற படம் என்பதே இதன் யுஎஸ்பி. அதனைத் தக்க வைக்கிற உள்ளடக்கம் இருந்தாலே இப்படத்தின் வெற்றி முக்கால்வாசி உறுதிப்படுத்தப்பட்டுவிடும். இந்த படம் நாளை வெளியாகிறது.
மெட்ராஸ்காரன்
பொங்கல் வெளியீட்டில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகிற படம், வாலி மோகன்தாஸின் ‘மெட்ராஸ்காரன்’. மலையாள நடிகர் ஷேன் நிகம் இதன் வழியே தமிழில் அறிமுகமாகிறார்.
கலையரசன், பாண்டியராஜன், நிகாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கீதா கைலாசம், கருணாஸ், சூப்பர் சுப்பராயன் உட்படப் பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இதற்கு இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் ட்ராமா வகைமையில் கதை அமைந்துள்ளது என்பதைக் காட்டியது இப்பட ட்ரெய்லர். ‘ரங்கோலி’ எனும் கவனிக்கப்படாத, சிறந்த படமொன்றைத் தந்தவர் வாலி மோகன்தாஸ் என்பதால், இப்படம் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. நாளை இப்படம் வெளியாகிறது.
மத கஜ ராஜா
கிட்டத்தட்ட 13 ஆண்டு காலக் காத்திருப்புக்குப் பிறகு வெளியாகிறது ‘மத கஜ ராஜா’. இயக்குனர் சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் ஆம்பள, ஆக்ஷன் படங்களுக்கு முன்னதாக வந்திருக்க வேண்டிய படமிது.
சந்தானத்தின் நகைச்சுவை, சோனு சூட்டின் வில்லத்தனம், அஞ்சலி மற்றும் வரலட்சுமியின் கவர்ச்சிகரமான திரை இருப்பு ஆகியவற்றோடு நல்லதொரு பொழுதுபோக்கு படமாக இது இருக்கும் என்கிறது படக்குழு. இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் விஜய் ஆண்டனி.
மண்ணுக்குள் புதைத்துவைத்த ஒயின் போல இப்படமும் ருசிக்கலாம் என்று காத்திருக்கின்றனர் தீவிர மசாலா பட ரசிகர்கள். வரும் 12ஆம் தேதியன்று வெளியாகிறது ‘மத கஜ ராஜா’.
காதலிக்க நேரமில்லை
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. இப்படத்தின் ட்ரெய்லர், இது ஒரு நகர்ப்புற காதல் கதை என்பதைக் காட்டியது.
நிச்சயமாக இதில் நாயகன் நாயகியின் நடிப்பு பேசப்படும் என்பது புரிகிறது. மொத்தப்படமும் அதற்கேற்ற சுவாரஸ்யத்தைத் தரும் பட்சத்தில், இப்படம் சிறப்பானதொரு காதல் படைப்பாக மாறக்கூடும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே நம்மை ‘இழு.. இழு..’ என்று இழுத்து வருகின்றன. இப்படம் வரும் 14ஆம் தேதி பொங்கல் அன்று வெளியாகிறது.

நேசிப்பாயா
அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம் என்று வித்தியாசமான படங்களைத் தந்த விஷ்ணுவர்தனின் புதிய படைப்பு ‘நேசிப்பாயா’. இதில் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகிறார். அவரது ஜோடியாக நடித்திருக்கிறார் அதிதி ஷங்கர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
சரத்குமார், குஷ்பூ, ராஜா, கல்கி கொச்லின், விக்ரம் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.ன்ரொமான்ஸ் ஆக்ஷன் த்ரில்லர் வகைமையில் இப்படம் அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கண்ணைக் கவரும் காட்சியமைப்புடன் நல்லதொரு கதை சொல்லலும் இருக்கும்பட்சத்தில் இப்படம் வெற்றியைச் சுவைக்கலாம். இதுவும் வரும் 14ஆம் தேதியன்று வெளியாகிறது.
இந்த ஐந்து படங்கள் தவிர்த்து கிஷன் தாஸின் தருணம், சண்முக பாண்டியனின் படைத்தலைவன், சிபிராஜின் டென் ஹவர்ஸ் ஆகியனவும் இந்த ரேஸில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கில் சங்கராந்தியையொட்டி கேம்சேஞ்சர், டாகு மகராஜ், சங்கராந்திக்கு வஸ்துனாம் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன.
ஷங்கர் – ராம்சரண் கூட்டணியின் ‘கேம் சேஞ்சர்’ நாளை வெளியாகிறது. இது தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஊழலை எதிர்த்த தந்தையின் கனவை நிறைவேற்ற, தேர்தல் ஆணையத்தில் பதவி வகிக்கும் ஒரு இளம் ஐஏஎஸ் அதிகாரியின் செயல்பாடுகளை மையப்படுத்தி இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணா – இயக்குனர் பாபி கொல்லி கூட்டணியின் ‘டாகு மகராஜ்’, ஒரு பள்ளத்தாக்கு பகுதியில் கொடிகட்டிப் பறக்கும் கொள்ளைக்காரர் ஒருவரின் அறியப்படாத பக்கமொன்றைக் காட்டுகிறது. இது வரும் 12ஆம் தேதியன்று வெளியாகிறது.
’பகவந்த் கேசரி’ எனும் வெற்றிப்படைப்பைத் தந்த இயக்குனர் அனில் ரவிபுடி, வெங்கடேஷ் உடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’. முன்னாள் காதலி உதவி கேட்டார் என்பதற்காக, ஒரு கடத்தல் வழக்கில் துப்பு துலக்க மனைவியோடு விசாரணை மேற்கொள்ளும் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் திருவிளையாடல்களைச் சொல்கிறது இப்படம். ’தி கோட்’ நாயகி மீனாட்சி சவுத்ரியோடு ஐஸ்வர்யா ராஜேஷ் மல்லுக்கட்டுகிற காட்சிகளே இப்படத்தின் யுஎஸ்பி. அதனால், குடும்பமாக தியேட்டருக்கு வருபவர்களுக்கு இப்படம் கொண்டாட்டம் தரும் என்று நம்பலாம். இப்படம் வரும் 14ஆம் தேதியன்று வெளியாகிறது.
இது போக ரேகாசித்ரம் எனும் மிஸ்டரி த்ரில்லர், என்னு ஸ்வந்தம் புண்யாளன் எனும் காமெடி த்ரில்லர் படங்கள் மலையாளத்தில் இந்த வாரம் வெளியாகின்றன.
இந்தியில் சோனு சூட் இயக்கி நாயகனாகக் களமிறங்கும் ‘பதேஹ்’ இந்த வாரம் வெளியாகிறது. இது வன்முறையைக் கொட்டித் தீர்க்கும் ஒரு ‘ஹார்டுகோர்’ ஆக்ஷன் படம். இது போக ‘மேட்ச் பிக்சிங்’ எனும் படமும் வெளியாகிறது.
இது போக கன்னடம் உட்பட இதர மொழிகளில் வெளியாகும் சில படங்களும் பெருநகர மல்டிப்ளெக்ஸ்களை நிறைக்கவிருக்கின்றன.
இவற்றில் பல படங்கள் ஓடிடி தளங்களை வந்தடையும்போது, நிச்சயமாகத் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படும். ஆக, இந்த வாரம் அவை பெறுகிற வெற்றியே அதனைத் தீர்மானிக்கும்.
தமிழில் மெட்ராஸ்காரன், காதலிக்க நேரமில்லை, மலையாளத்தில் என்னு ஸ்வந்தம் புண்யாளன், தெலுங்கில் டாகு மகராஜ், சங்கராந்திக்கு வஸ்துனாம், கேம் சேஞ்சர், இந்தியில் பதேஹ் படங்கள் முதன்மையான கவனத்தைப் பெறும் என்பது எதிர்பார்ப்பு. கடைசி நேர மாற்றங்களும் கள நிலவரங்களும் இதனைத் தலைகீழாக்கலாம்.
வெற்றி எந்தப் படக்குழுவினருக்கு என்பது அடுத்த வாரம் இந்நேரம் தெரிந்துவிடும்..!
உதயசங்கரன் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒருநாள் போட்டியில் 96 ரன்கள் அடித்தால்… விராட் கோலி படைக்கப் போகும் சாதனை!
“சரிக்கு சமமா வேட்டியா கட்டுற”… திருச்சி முதியவருக்கு நடுரோட்டில் நடந்த கொடூரம்! வைரலாகும் வீடியோ!