ஒவ்வொரு ஆண்டின் கடைசி நாளில் திரையுலகினர் புதிய வருடம் வெற்றிக்கான ஆண்டாக இருக்க வேண்டும் என ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும், சபதங்களையும் மேற்கொள்வது வழக்கம்.
ஆனால் அதுபோன்ற வெற்றிகளும், சபதங்களை நிறைவேற்றியதாகவோ கடந்தகால வரலாறுகள் இல்லை என்பதுதான் உண்மை.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தமிழ்திரைப்படங்களின் வியாபார எல்லை விரிவடைந்திருக்கிறது. அதனால் படங்களின் மூலம் வருவாய் அதிகரித்திருக்கிறது. அப்படி கிடைக்கும் அதிகப்படியான வருமானம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு இவர்களுக்கு கிடைப்பதற்கு பதிலாக கதாநாயகன், கதாநாயகிகள், இயக்குநர்களுக்கு அதிகரிக்கப்பட்டு வரும் நிலையே தொடர்ந்து வருகிறது.
இந்திய பொருளாதாரத்தில், தொழிலதிபர்கள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு காரணமான தொழிலாளர்கள் வாழ்நிலையில் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்பதே தகவலாக உள்ளது.
அதே நிலைதான் சினிமாவில் உள்ளது என்பதை மறந்து திரைப்படங்களின் வெற்றி, வசூல் ஆகியவை தனிப்பட்ட கதாநாயகர்களின் சாதனைகளாக இங்கு பதிவாவது போன்று, அந்த வருமானம் முழுவதும் குறிப்பிட்ட சில நடிகர்களின் சம்பளமாகவும், பெருமுதலாளிகள் வருமானமாகவும் முடங்கிபோகிறது.
இதன் காரணமாக சினிமா சமச்சீரான வளர்ச்சி இன்றி தடுமாறுகிறது. ஒரு வருடத்தில் தயாராகும் படங்களில் 20% திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதும், அதில் 10% படங்கள் மூலம் கிடைக்கும் வசூல் ஒரு ஆண்டின் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபீஸ் கணக்கில் 70% இருப்பதையும் சமச்சீரான வளர்ச்சி என்று எப்படி கூற முடியும் என்கின்றனர் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள்.
20% திரைப்படங்களின் வெற்றி என்பது சமபலத்தில் இருக்கும் நடிகர்கள் நடித்த திரைப்படங்களுடன் நேரடி போட்டியில் பெற்றது இல்லை என்பதே நீண்ட கால நிகழ்வாக தமிழ் சினிமாவில் இருக்கிறது. பிற மொழி சினிமாக்களில் இதுபோன்று இல்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
எதிர்த்து விளையாட வீரர்கள் இல்லாத மைதானத்தில் தனியாக விளையாடியதை ரசித்து கை தட்டவேண்டிய நிர்பந்தத்திற்கு உட்பட்ட பார்வையாளனை போன்று மாற்று வாய்ப்புகள் இல்லாத நிலையில், குறிப்பிட்ட படங்களை மட்டுமே பார்க்க வேண்டிய நிர்பந்தம் இந்தியாவில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கான சாபமாக இருந்து வருகிறது.
ஆம் ரஜினிகாந்த் நடித்தபடம் வெளியாகும் வாரத்தில் விஜய் நடித்த படம் வராது விஜய் நடித்த படம் வெளியாகும் நாளில் வேறொரு முக்கிய நடிகர் நடித்த படம் வராது.
ஆனால் அந்த படங்கள் வசூல் சாதனை நிகழ்த்தியதாக இங்கு கொண்டாடப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
2022ல் அப்படி சாதனை நிகழ்த்திய முதல் பத்து படங்கள் பற்றிய தகவல்கள்
1. பொன்னியின் செல்வன்

வசூல் அடிப்படையில் இந்த வருடம் முதல் இடம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்திருக்கிறது.
சர்வதேச அளவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படம் என்கிற பெருமையை தமிழ் சினிமாவிற்கு பெற்றுத் தந்துள்ள பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டில் 234 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தது.
தமிழகத்தில் உள்ள 70% திரையரங்குகளில் முதல் இரண்டு வாரங்கள் கட்டாயம் திரையிடப்பட வேண்டும் என்கிற நிர்பந்தத்துடன் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அரசு விதிப்படி டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படாமல் அதிக கட்டணம் வசூலிக்கவேண்டும் என திரையரங்குகளுக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
பொன்னியின் செல்வன் படத்தை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்கிற விருப்பம் பெரும்பான்மையான தமிழக மக்களிடம் இருந்ததால் அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தை பார்வையாளர்கள் பொருட்படுத்தவில்லை.
இந்த படத்திற்கு போட்டியாக களமிறக்கப்பட்ட தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படத்திற்கு குறைவான திரையரங்குகள் கிடைத்தாலும் தமிழகத்தில் சுமார் 16 கோடி ரூபாயை மொத்த வசூல் செய்தது.
தயாரிப்பு: லைக்கா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்குநர்: மணிரத்னம்
இசையமைப்பாளர்: ஏஆர் ரகுமான்
நடிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி பிரகாஷ்ராஜ், ரகுமான், ஜெயராம், விக்ரம்பிரபு
வெளியான தேதி: 2022, செப்டம்பர்30
2.விக்ரம்

மாற்றங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து மாறுவதில் நடிகர் கமல்ஹாசனுக்கு இணையாக இந்திய சினிமாவில் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்தவொரு திரைக்கலைஞர்களும் இல்லை என்பது தமிழ் சினிமாவிற்கு பெருமை.
அரசியல்வாதியாகிப் போன கமல்ஹாசன் நடித்தால் யார் பார்ப்பது, அவரது திரையுலக வாழ்க்கையில் நடிகராக இனி வெற்றிபெற இயலாது என சினிமா ஜோசியர்கள் சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் இணைகிறார் என்ற தகவல் வெளியானபோது ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சிக்குள்ளானது.
படம் வெளிவந்த பின், அதன் வசூல் கணக்கை பார்த்தபோது தமிழ் சினிமா ஆச்சர்யத்திற்கு உள்ளானது என்றே கூறலாம். தனது 60 வருட கால திரையுலகப் பயணத்தில் கமல்ஹாசன் இப்படி ஒரு வெற்றியை, வசூல் சாதனையை எதிர்கொண்டது இல்லை. முதல் முறையாகப் பார்த்து மகிழ்ந்தார் கமல். இந்திய சினிமாவிற்கு அவரது பங்களிப்புக்கான கௌரவமாகவே இதனை சினிமா விமர்சகர்களும், ஆர்வலர்களும் பார்த்தனர்.
உலக அளவில் சுமார் 438 கோடி ரூபாய் வசூலைக் கடந்த, இப்படத்தின் தமிழக மொத்த வசூல் 182 கோடியாகும். இந்தப் படத்தை விலைக்கு வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஒரு கட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் விக்ரம் படத்தின் விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு வழங்கினார் கமல்ஹாசன்.
தமிழ்நாட்டில் உள்ள 80% திரைகளில் விக்ரம் திரையிடப்பட்டதுடன், டிக்கெட் தேவை அதிகரித்ததால் அதிகபட்ச விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதால் குறுகிய நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படமாக சாதனை நிகழ்த்தியது விக்ரம்.
தயாரிப்பு: ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்குநர் : லோகேஷ் கனகராஜ்
இசைமைப்பாளர் :அனிருத்
நடிகர்கள் : கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில்
வெளியான தேதி: 3 ஜுன் 2022
3. பீஸ்ட்

நெல்சன் திலீப்குமார் இயக்கம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானபோது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இப்படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பாகவே ஹிட்டடித்தது.
ஆனால், குறிப்பிட்ட மால் ஒன்றிற்குள்ளேயே பீஸ்ட் திரைப்படம் நடப்பதான காட்சி விஜய் ரசிகர்களுக்கே எரிச்சலை ஏற்படுத்தியது.
படத்தின் பட்ஜெட்டில் 70% தொகை விஜய், மற்றும் திரைக்கலைஞர்களுக்கான சம்பளமாக கொடுக்கப்பட்டதால் திரைப்படம் குறிப்பிட்ட அரங்கை விட்டு நகரவில்லை.
இதனால் வழக்கமான விஜய் படங்களுக்கான பார்வையாளர்கள் திரையரங்கை நோக்கி வரவில்லை இருப்பினும் விஜய் படங்களுக்கென இருக்கும் அவரது ரசிகர்கள் படத்தைப் பார்த்ததால், உலக அளவில் 220 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது.
இப்படத்தின் தமிழக வசூல் 128 கோடி என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம் போட்டிக்கு எந்த நேரடி தமிழ் படமும் வெளிவராத சூழலில் கன்னட படமான கேஜிஎப் பீஸ்ட் படத்திற்கு போட்டியாக தமிழ்நாட்டில் 300 க்கும் குறைவான திரைகளில் வெளியானது.
விஜய், சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ், சன் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட விளம்பரங்கள், அதிகபட்ச டிக்கெட் கட்டணம் என அனைத்து வசதிகளும் இருந்தும் தமிழ்நாட்டில் 128 கோடி ரூபாய் மொத்த வசூலை பெற்ற பீஸ்ட் படத்திற்கு போட்டியாக கன்னட கேஜி எப் சாதாரண டிக்கெட் கட்டணத்தில் சுமார் 60 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பு:சன் பிக்சர்ஸ்இயக்குநர் : நெல்சன்
இசையமைப்பாளர்:அனிருத்
நடிகர்கள்:விஜய், பூஜா ஹெக்டே
வெளியான தேதி: 2022 ஏப்ரல்13
4. வலிமை

ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை படத்தில் முதல் முறையாக இணைந்த அஜித்குமார், இயக்குனர் வினோத் கூட்டணியில் வெளிவந்த இரண்டாவது படம் ‘வலிமை‘.
போதைப் பொருள் கடத்தல், போலீஸ் கதை என அஜித்குமார் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்கி பொறுமையை சோதித்த படம் வலிமை.
உலக அளவில் 232 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
இப்படத்தின் தமிழக வசூல் 104 கோடி ரூபாய் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப்படம் வெளியான அன்று போட்டிக்கு படங்கள் இல்லை என்பதுடன் தமிழ்நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரைகளில் வலிமை ரிலீஸ் செய்தது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்.
தயாரிப்பு :பேவியூ புராஜக்ட்ஸ், ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர்
இயக்குநர் :வினோத்
இசையமைப்பாளர் : யுவன்ஷங்கர் ராஜா
நடிகர்கள்:அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா
வெளியான தேதி : 2022பிப்ரவரி 24
5. டான்

நடிகர் சிவகார்த்திகேயன் திரையுலகப் பயணத்தில்100 கோடி ரூபாய் மொத்த வசூலைக் கடந்த திரைப்படம் டான்.
படைப்புரீதியாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட படம் தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் 600க்கும் மேற்பட்ட திரைகளில் டான் வெளியிடப்பட்டது. விஜய், அஜித்குமார் படங்களுக்கு இணையாக இந்த ஆண்டில் தமிழகத்தில் 78 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த படமாக இடம்பெற்றுள்ளது.
தயாரிப்பு:லைக்கா புரொடக்ஷன்ஸ், எஸ்.கே புரொடக்ஷன்ஸ்
இயக்குநர் :சிபி சக்கரவர்த்தி
இசையமைப்பாளர்:அனிருத்
நடிகர்கள்:சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, பிரியங்கா அருள்மோகன்
வெளியான தேதி: 2022, மே13
6 .திருச்சிற்றம்பலம்

வழக்கமாக ஒரு திரைப்படத்திற்கு சன் பிக்சர்ஸ் செய்யக்கூடிய விளம்பரம் எதுவும் இன்றி வெளியான படம் திருச்சிற்றம்பலம்
படம் வெளியான பின் ஊடக விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் திருச்சிற்றம்பலம் படத்தை வானளாவ புகழ்ந்து வந்த பதிவுகள் படத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியதுடன் பாக்ஸ் ஆபீஸ் வசூலையும் அதிகரித்தது.
2022ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பெறும் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றி இயல்பாக நடந்தேறிய ஒன்று.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன்’ படங்களுக்குப் பிறகு இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம்100 கோடி வசூலைக் கடந்திருக்கிறது. தமிழகத்தில் 75 கோடி மொத்த வசூல் செய்திருக்கிறது.
தயாரிப்பு:சன் பிக்சர்ஸ்
இயக்குநர்: ஆர் ஜவஹர்
இசையமைப்பாளர்:அனிருத்
நடிகர்கள்:தனுஷ், நித்யா மேனன், ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர்
வெளியான நாள் : 2022ஆகஸ்ட் 18
7. சர்தார்

கார்த்தி இரட்டை வேடங்களில் இரு வெவ்வேறு காலகட்டத்தில் நிகழும் கதையில் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திய படம். மித்ரன் இயக்கத்தில் நடித்த முதல் படம். படத்தின் முன்னோட்டம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதற்கேற்றபடி படமும் மாறுபட்ட ஆக்க்ஷன் படமாக இருந்தது அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரையரங்குக்கு வர வைத்தது
இந்த வருடத்தில் கார்த்தி நடித்து கடைசியாக வெளிவந்த மூன்றாவது படம் இது. இதற்கு முன்பாக வெளியான ‘விருமன், பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களும் கார்த்திக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
உலக அளவில் ‘சர்தார்‘ படம் 100 கோடி வசூலைக் கடந்ததாக சொல்லப்பட்டது. தமிழக அளவில் 52 கோடி மொத்த வசூல் செய்தது. சர்தார் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டது
தயாரிப்பு:பிரின்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம்:பிஎஸ் மித்ரன்
இசையமைப்பாளர்:ஜிவி பிரகாஷ்குமார்
நடிகர்கள்:கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா
வெளியான நாள்: 2022அக்டோபர் 1
8. லவ் டுடே

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த இயல்பான வெற்றிகளில் லவ் டுடே முதல் இடத்தில் உள்ளது.
10 கோடி ரூபாய் செலவில் அறிமுக நடிகர் ஒருவர் நடித்த படம் தமிழ் சினிமாவில் 70 கோடி வசூலைக் கடந்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தின் மூலம் தனது இரண்டாம் படத்திலேயே நாயகனாக அறிமுகமாகி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இளம் ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படம் யாரும் எதிர்பார்க்காத பெரியதொரு வெற்றியைப் பெற்றது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் டப்பிங் ஆகி அங்கும் லாபகரமான படமாக அமைந்தது.
தமிழகத்தில் 7 வாரங்களை கடந்து ஓடிய லவ் டுடே சுமார் 59 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டது.
தயாரிப்பு: ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்குநர் :பிரதீப் ரங்கநாதன்
இசையமைப்பாளர்:யுவன்ஷங்கர் ராஜா
நடிகர்கள்:பிரதீப் ரங்கநாதன், இவானா, யோகி பாபு, சத்யராஜ், ராதிகா, ரவீணா
வெளியான நாள் : 2022நவம்பர் 4
9. விருமன்

கொம்பன்’ படத்திற்குப் பிறகு கார்த்தி, இயக்குனர் முத்தையா கூட்டணி இணைந்த படம் விருமன். மீண்டும் ஒரு கிராமத்துக் கதை. அப்பாவை எதிர்த்து நிற்கும் ஒரு மகனின் கதை. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழ்நாட்டில் மொத்த வசூலாக 50 கோடியைக் கடந்த இந்தப் படத்தை தமிழ்நாடு முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டது
தயாரிப்பு :2 டி என்டர்டெயின்மென்ட்
இயக்குநர் :முத்தையா
இசையமைப்பாளர்:யுவன்ஷங்கர் ராஜா
நடிகர்கள்:கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி
வெளியான நாள்:2022 ஆகஸ்ட்-2
10. காத்துவாக்குல ரெண்டு காதல்

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெற்ற ஒரே படம் சமந்தா, நயன்தாரா இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தமிழகத்தில் 33 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டுள்ளது.
தயாரிப்பு:ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்
இயக்குநர் :விக்னேஷ் சிவன்
இசையமைப்பாளர்:அனிருத்
நடிகர்கள்:விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா
வெளியான நாள் : 2022ஏப்ரல் 8
இராமானுஜம்
பொய்யின்றி அமையாது உலகு: என்ன கதை?
விமர்சனம்: டிரைவர் ஜமுனா – ’ட்ரிப்’ ஓகேயா?
கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கல: செல்வராகவன்