இயற்கை நிகழ்வுகள் குறித்துப் படமெடுத்தால் ஆவணப்படம் போலிருக்கும். இந்த வாதத்தைச் சுக்குநூறாக்குவது போல, உலகம் முழுக்கப் பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியாவில் அப்படிப்பட்ட படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதையும் மீறி வெளியானவற்றில் கணிசமானவை மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவை என்று சொன்னால் மிகையாகாது. வைரஸ், உயரே என்று தொடரும் அப்பட வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது 2018.
கடந்த ஆகஸ்ட் 16, 2018 அன்று கேரளாவின் இடுக்கி அணையில் இருந்து அதிகளவில் திறந்துவிடப்பட்ட நீரால் அம்மாவட்டம் முழுக்க வெள்ளப் பேரழிவுக்கு உள்ளானதை மீண்டும் உயிர்ப்பித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம்.
வெள்ளத்திற்கு நடுவே..!
எந்தவொரு பேரழிவுக்கு முன்பும் மக்கள் இயல்பான ஒரு வாழ்வை மேற்கொண்டிருப்பார்கள். அந்த பேரழிவு அதனைத் தடம் புரட்டிப் போட்டிருக்கும். இப்படத்திலும் அப்படிப் பல மாந்தர்கள் உலா வருகின்றனர்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றப் பயந்து சொந்த ஊருக்கு ஓடி வந்தவர் அனூப் (டொவினோ தாமஸ்). அவருக்குள் இருக்கும் மரண பயத்தை ஊரார் கேலி செய்கின்றனர். அந்த பயத்தைக் கடந்து செல்லும் தருணத்திற்காக அவர் காத்திருக்கிறார். அதேநேரத்தில் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையையும் தேடுகிறார்.
அதற்கேற்ப, அருகிலுள்ள பள்ளியொன்றில் ஆசிரியையாக வந்து சேர்கிறார் மஞ்சு (தன்வி ராம்). தன்னைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு உதவுவதே மஞ்சுவுக்குப் பிடித்தமான விஷயம்; மற்றவர்களுக்கு தானே முன்வந்து உதவுவது அனூப்பின் இயல்பு என்பதால் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்படுகிறது.
இவர்களைப் போன்று பல மனிதர்கள் தங்களுக்கான வாழ்க்கையை அம்மண்ணில் வாழ்ந்து வருகின்றனர்.
வானிலை மையத்தில் வேலை பார்க்கும் ஷாஜி (குஞ்சாக்கோ போபன்) புதிதாக வீடு கட்டியிருக்கிறார். அவரது மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறார்.
மாத்தச்சன் (லால்) எனும் மீனவரின் மகனான டிக்சனுக்கு (ஆசிஃப் அலி) ஒரு மாடல் ஆவதே லட்சியம். ஆனால், தான் ஒரு மீனவக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள அவர் வெட்கப்படுகிறார். அதையே காரணம் காட்டி, அவரது காதலியின் வீட்டாரும் திருமணப் பேச்சுக்குத் தடை போடுகின்றனர்.
புதிதாகத் திருமணமான தன் மனைவியை விட்டுவிட்டு, துபாயில் பணியாற்றி வருகிறார் ரமேசன் (வினீத் சீனிவாசன்). விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வரத் தயங்குகிறார்.
ஊரில் இருக்கும் அவரது தாய் திடீரென்று கீழே விழுந்து காயப்பட, அவசர அவசரமாக இந்தியாவுக்கு வருகிறார். ஆனால், கோயம்புத்தூருக்கே அவருக்கு விமான டிக்கெட் கிடைக்கிறது.
போலந்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு தம்பதி சுற்றுலா வருகின்றனர். அவர்களுக்குச் சுற்றுலாத் தலங்களைக் காட்டும் பணி கார் ஓட்டுநர் கோஷிக்கு (அஜு வர்கீஸ்) கிடைக்கிறது. அவர்கள் செல்லும் இடங்களெல்லாம் வெள்ளத்தின் காரணமாக மூடப்படுகின்றன.
மதுரையைச் சேர்ந்த சேதுபதி (கலையரசன்), ஒரு லாரி ஓட்டுநர். தனது மகள் மற்றும் தாயை விட்டுப் பிரிந்து, கேரளாவுக்கு சரக்கு எடுத்துச் செல்லும் பணியைச் செய்து வருகிறார்.
ஒருநாள் கேரளாவில் இருக்கும் ஒரு ஆலையைத் தகர்க்க வெடிமருந்தை எடுத்துச் செல்லுமாறு கூறுகிறார் முதலாளி. விருப்பமில்லாமல், அதனை ஏற்கும் சேதுபதி கேரளாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். போலீசாரிடம் இருந்து தப்பிக்க, வெள்ள நிவாரணப் பொருட்களையும் லாரியில் ஏற்றிக் கொள்கிறார்.
இவ்வாறு வெவ்வேறு திசைகளில் செல்லும் பல மனிதர்களின் வாழ்க்கை, ஒருநாள் இரவில் தலைகீழாகிறது. தங்களது இயல்பான குணாதிசயங்களைத் துறந்து, ஒரு பேரழிவின்போது சக மனிதர்களோடு ஒன்றுபட வேண்டிய கட்டாயத்தை உண்டுபண்ணுகிறது.
அது, அவர்கள் அதுநாள் வரை எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கான தீர்வையும் காட்டுகிறது. எவ்வாறு அது நிகழ்கிறது என்பதைச் சொல்கிறது 2018.
இந்த படத்தின் டைட்டில் அருகே, ‘எல்லோரும் நாயகர் தான்’ என்ற வரி இணைக்கப்பட்டுள்ளது. கதையின் மையக்கருவும் கூட அதுவே.

அபாரமான உழைப்பு!
இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி, வினீத் சீனிவாசன், டொவினோ தாமஸ், கலையரசன், லால், நரேன், அஜு வர்கீஸ், ஜாபர் இடுக்கி, சுதீஷ், சித்திக், தன்வி ராம், ஷிவதா, அபர்ணா பாலமுரளி, உட்படப் பல நட்சத்திரக் கலைஞர்கள் நடித்துள்ளனர். முதல் அரை மணி நேரத்தில் பல பாத்திரங்களின் அறிமுகம் அடுத்தடுத்து நிகழ்கிறது.
அவர்களது வாழ்வு முழுமையாக ரசிகர்களுக்குப் புரியவரும்போது, இடைவேளை வருகிறது. அதனால், பின்பாதியிலேயே வெள்ளத்தின் கோரமுகம் நமக்குத் தெரிய வருகிறது.
அதேநேரத்தில், இத்தனை நடிகர் நடிகைகளையும் சரியான முறையில் திரையில் காட்ட முடியுமா என்ற சந்தேகத்தை மிகத்தெளிவாகத் தீர்த்து வைத்திருக்கிறார் இயக்குனர் ஜூடு ஆண்டனி ஜோசப். ரசிகர்கள் மனம் கோணாத வண்ணம், அவர்களது இருப்பை அமைத்திருக்கிறார்.
படத்தில் டொவினோ தாமஸுக்கு கொஞ்சம் அதிக இடம் உண்டு. மலையாளத்தில் அவர் முன்னணி நட்சத்திரம் என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், அவர் ஏற்ற பாத்திரம் தமிழ், தெலுங்கு நட்சத்திரங்கள் உற்றுக் கவனிக்க வேண்டிய ஒன்று.
இதில் குஞ்சாக்கோ போபனுக்குப் பெரிய பாத்திரம் இல்லை என்றபோதும், தன் இமேஜ் துறந்து நடித்திருக்கிறார். அதேநேரத்தில், குணசித்திர பாத்திரங்களில் நடித்துவரும் லால், சுதீஷ் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இதெல்லாமே, கதைக்களத்திற்கேற்ப படைக்கப்பட்ட பாத்திரங்களையே நமக்குக் காட்டுகிறது.
அனைத்து கலைஞர்களும் ஒன்றிணைந்து தங்கள் உழைப்பையும் திறமையையும் திரையில் காட்டியிருப்பதே, இப்படத்தின் கமர்ஷியல் வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கிறது.
வெள்ளம் சூழ்ந்த நிலப்பகுதியைக் காட்டும்போது, ‘ஆஹா’ என்று சொல்ல வைக்கிறது மோகன்தாஸின் தயாரிப்பு வடிவமைப்பு. பல இடங்களில் விஎஃப்எக்ஸின் பங்கு கணிசமாக உள்ளது.
இடுக்கி மாவட்டத்தின் அழகைக் காட்டுவதிலும், வெள்ளத்தின் கோரத்தைக் காட்டுவதிலும் அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு முக்கியப் பங்கு வகிக்கிறது.
சமான் சாக்கோவின் படத்தொகுப்பு முன்பாதியை மெதுவாக நகர்த்தவும், பின்பாதியை பரபரப்பாக மாற்றவும் உதவியிருக்கிறது. எந்த இடத்திலும் கதாபாத்திரங்களின், சம்பவங்களின் தொடர்ச்சியைக் கைவிடாமல் ஒரு முழுமையான காட்சியனுபவத்தைத் தந்திருக்கிறது.
நோபின் பால் பின்னணி இசை, ஒட்டுமொத்தமாக நமது திரை அனுபவத்தையே வேறுமாதிரியானதாக ஆக்குகிறது.
பெரும் நட்சத்திரப் பட்டாளம், வெள்ளப் பாதிப்பைச் சொல்லும் கதைக்களம், கிடைத்த பட்ஜெட்டில் ரசிகர்களைப் பிரமிக்க வைக்க வேண்டிய கட்டாயம், இவையனைத்தையும் ‘ஜஸ்ட் லைக் தட்’ விதமாகக் கையாண்டிருக்கிறார் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஜூடு ஆண்டனி ஜோசப்.
ஆசீர்வதிக்கும் கைகள்!
திரைக்கதையின் தொடக்கத்தில், அந்த கிராமத்தில் இருக்கும் மேரி மாதா சிலை காட்டப்படுகிறது. அது எவ்வளவு உயரமானது என்பதை அந்த ஷாட்டில் கிரேன் உயர்வு சொல்லிவிடும்.
இடைவேளைக்குப் பிறகு, வெள்ள மட்டம் எந்தளவுக்கு உள்ளது என்பதைச் சொல்ல அந்தச் சிலையே அளவுகோலாக உள்ளது. இறுதிக்காட்சியில் மின்சார வயரைப் பிடித்தவாறே டொவினோ தாமஸ் செல்லும் காட்சியில், அவருக்கு இணையாக அந்த சிலை காட்டப்படும்போது எவ்வளவு உயரம் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது எனும் சிந்தனை நம் மூளையைப் பிடித்தாட்டுகிறது.

ஒருகாட்சியில், வெள்ளத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க யாரிடம் உதவி கேட்பது என்று அரசுத் தரப்பில் ஆலோசனை நடத்தப்படும். ராணுவமோ, கப்பற்படையோ உடனடியாக வர முடியாத பட்சத்தில், உள்ளூர் மீனவர்கள் படகுகளோடு வெள்ளம் சூழ்ந்த இடத்திற்குச் செல்லத் தயாராவார்கள்.
அந்தக் காட்சியின்போது, அவர்கள் வணங்கும் தேவாலயம் முன்பு, அதற்கான விவாதம் நிகழும். அப்போது, யாரெல்லாம் வெள்ளம் பாதித்த பகுதிக்குச் செல்லத் தயாராக இருக்கிறீர்கள் என்று பங்குத்தந்தை கேட்கும்போது, ஒவ்வொரு மீனவராகக் கையை உயர்த்துவார்கள். அனைவரும் கையை உயர்த்தியிருக்கும்போது, கையை உயர்த்தி ஆசீர்வதிக்கும் இயேசுநாதர் சிலையின் பின்பக்கத்தில் இருந்து அந்த ஷாட் காட்டப்படும். கடவுள்தன்மை என்றால் என்னவென்பது அந்த கணத்தில் பிடிபடும்.
2018 வெள்ளத்தின்போது இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் நிகழ்ந்த மீட்புப் பணிகளில் சாதாரண மக்களின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது என்பதைச் சொல்ல, அந்த ஒரு ஷாட் போதும். இந்தப் படம் முன்வைக்கும் கருத்தும் அதுவே.
மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்திக் காண்பிக்கும் வழக்கம் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அதிகம். இப்போது அப்படியில்லை. அந்த வகையில், இந்த படத்திலும் தமிழ் பேசும் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
திரைக்கதை நகர்வு சினிமாத்தனமாக இருந்தாலும், கிளைமேக்ஸ் காட்சி ‘க்ளிஷே’வாக இருந்தாலும், வாழ்க்கையின் நசிவுக்காலத்தில் நம்பிக்கை தரும் விதமாக ஏதேனும் ஒரு கைகள் நம்மை நோக்கி நீளாதா என்ற மனித மனங்களின் பிரார்த்தனையே இக்கதையில் நிரம்பியுள்ளது.
எந்தப் பேரழிவின்போதும் மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் கடந்து ஒன்றாகக் கைகோர்ப்பார்கள். அப்படி இணைந்த பல்லாயிரம் கைகளின் வழியே நம்பிக்கைக்கீற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது ‘2018’. நிச்சயம் இதுவொரு ‘பீல்குட்’ அனுபவத்தைத் தரும்!
உதய் பாடகலிங்கம்
வெளிநாட்டில் வேலையிழந்து திரும்புவோர் கடனுதவி பெறுவது எப்படி?: ஆட்சியர் விளக்கம்!