நீங்காத நினைவுகளைத் தந்த விக்ரமின் ‘கந்தசாமி’!

Published On:

| By christopher

விக்ரமின் திரையுலக வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால், ஒவ்வொரு படத்திலும் அவர் காட்டிய மெனக்கெடல் அபாரமாக இருப்பதைக் காணலாம். பிளாக்பஸ்டர் வெற்றி முதல் சுமார் ஹிட், தோல்விப்படம் வரை அனைத்திலும் அவரது ஈடுபாட்டில் நாம் வேறுபாடு காண முடியாது. மற்ற கலைஞர்களும் கூட அப்படிப்பட்ட உழைப்பைத்தான் அந்த படங்களில் தந்திருப்பார்கள் என்றாலும், அவரது பங்களிப்பு கொஞ்சம் கூடுதலாகத் தெரியும்.

‘சேது’வுக்கு முன் தொடங்கி ‘தங்கலான்’னுக்குப் பின்னும் அது நிச்சயம் தொடரும். அதுவே ஒரு படத்தில் விக்ரமின் இருப்பு எப்படிப்பட்டது என்பதை ரசிகனுக்கு உணர்த்திவிடும்.

சில நேரங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும் விதமாக அல்லது அதனை ஈடு செய்யும் வகையில் விக்ரமின் படங்கள் அமையாமல் போனதுண்டு. அந்தப் படம் உருவான காலகட்டத்தில் ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தப்பட்ட பிம்பத்திற்கும் திரையில் ஓடியதுற்குமான வித்தியாசமே அதற்கான காரணங்களில் முக்கியமானது.

அவற்றில் ஒன்று, சுசி கணேசன் இயக்கிய ‘கந்தசாமி’. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் ஆகின்றன.

’கந்தசாமி’ கதை!

ஊழல், மோசடிப் பேர்வழிகளிடம் இருக்கும் பொருளை எடுத்து இயலாதவர்களுக்குத் தரும் ‘ராபின்ஹூட்’ கதைதான் இதிலும் இருந்தது. மக்கள் விரோதச் செயல்களுக்கு எதிராகப் போராடுபவராக, ஏற்கனவே ‘சாமுராய்’, ‘அந்நியன்’ படங்களில் நடித்திருந்த விக்ரம், இக்கதையைத் தேர்வு செய்ததில் ஆச்சர்யமில்லை.

இந்தப் படத்தில் விக்ரம் ஒரு சிபிஐ அதிகாரியாக வருவார். அவரது குழுவில் இருக்கும் இதர இளைஞர்களும் சேர்ந்து, சட்டவிரோதமான முறையில் பணம் சேர்த்திருக்கும் செல்வந்தர் வீடுகளில் சோதனை மேற்கொள்வார்கள். அங்கு கைப்பற்றப்படும் பணத்தை ஏழை எளியவர்களுக்குக் கொடுப்பார் விக்ரம்.

கஷ்டப்படுகிற மக்கள் யார் என்பது அவருக்கு எப்படித் தெரியும்? அருகிலிருக்கும் ஒரு மலைக்கோயிலில் முருக பக்தர்கள் ஒரு மரத்தில் வேண்டுதல்களை எழுதி வைக்கின்றனர். அதனை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்பது அவர்களது நம்பிக்கை.

அந்த வேண்டுதல்களைப் படித்து, அந்த நபர்களின் குறைகளைத் தீர்ப்பதை வாடிக்கையாகக் கொள்கிறார் விக்ரம். அதற்குத் தடையாக எவரேனும் வந்தால், சேவல் போன்ற முகமூடியை அணிந்துகொண்டு பறந்து பறந்து அவர்களைப் பந்தாடுவார். அது போகச் சில காட்சிகளில் தனது தோற்றம் தெரிந்துவிடக் கூடாது என்று வெவ்வேறு ‘கெட்டப்’களில் வருவார். இது போக இளமைத் தோற்றத்தில் நாயகி ஸ்ரேயாவுடன் காதல் ‘டூயட்’ பாடுகிறார்.

இது போன்ற கதைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வில்லன்கள் காட்டப்படுவது கட்டாயம். அவ்வாறே இதில் ஆசிஷ் வித்யார்த்தி உடன் முகேஷ் திவாரி காட்டப்பட்டிருந்தார். ‘போக்கிரி’யில் அவர் ஏற்கனவே நடித்திருந்தாலும், ஏனோ அவரது பாத்திரம் இதில் ஒட்டவில்லை. படம் தயாரிக்கப்பட்ட காலத்தில், அப்பாத்திரத்தில் மலையாள நடிகர் இந்திரஜித் நடிப்பதாகத் தகவல்கள் வந்தன.

அது மட்டுமல்லாமல் ஹீரோயின் ஹீரோவை காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றுவது, மெக்சிகோ வரைக்கும் அலைபாயும் கதை மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்வது போன்றவை ‘கந்தசாமி’ திரைக்கதையில் நோகடிக்கும் பகுதிகளாக இருந்தன.

மிக முக்கியமாக, ‘கந்தசாமி’ என்று பெயர் வைத்துவிட்டு, அத்திரைக்கதையில் முருகன் கோயிலை மையப்படுத்தியதற்கான காரணம் ஏதும் சொல்லப்பட்டிருக்காது. அதனால், சேவல் முகமூடி அணிந்து வருவது மட்டுமல்லாமல் வெவ்வேறு கெட்டப்களில் விக்ரம் தோன்றுவதும் விழலுக்கு இறைத்த நீராகிப் போனது.

Watch Kanthaswamy Full movie Online In HD | Find where to watch it online on Justdial

கெட்டப்கள் அவசியமா?

தீவிர கமல் ரசிகரான விக்ரம், அவரைப் போலவே பல்வேறு கெட்டப்களில் தோன்ற வேண்டுமென்று ஆசைப்பட்டதில் தவறில்லை. ஆனால், அதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதைகள் தான் அவரது ரசிகர்களை இன்று வரை கிறுகிறுக்க வைக்கின்றன.

ஒரு படம் கமர்ஷியலாக வெற்றி பெற, புதுமையான கதை இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் ஒரு ‘சூப்பர் ஹீரோ’ அந்தஸ்தை ஒரு நாயகனுக்குத் தர, எக்காலத்திலும் ரசிக்கப்பட, ஒரு ‘மைல்கல் சாதனையாக’ கருதப்பட, அதில் புதிதாக ஏதேனும் இருந்தாக வேண்டும் அல்லது புத்துணர்வை ஊட்டும் திரையனுபவத்தை அது தர வேண்டும்.

தில், ஜெமினி, தூள், சாமி போன்றவை அப்படிப்பட்ட படங்களாகத்தான் விக்ரமுக்கு அமைந்தன. இந்தப் படங்களில் அவர் தனது தோற்றத்தில் சின்னச்சின்னதாக மாற்றம் செய்திருப்பாரே தவிர, பெரிதாக கெட்டப் மாற்றங்கள் கிடையாது. ஆனால், அவற்றுக்காகவே அவர் ஒப்புக்கொண்ட படங்கள் பெரிய ஏமாற்றங்களை ரசிகர்களுக்குத் தந்திருக்கின்றன.

அதிலும் ’ஜாக்கால்’ ஆங்கிலப்படத்தில் வருவது போன்று ஒரே படத்தில் பல வேடங்களில் வருவது போன்று அமைந்த ‘ராஜபாட்டை’, ‘கோப்ரா’ படங்கள் அதிகமாக ஏமாற்றின. ‘மேக்கப் போட்டு முடியறதுக்கே பல மணி நேரமாகுறப்போ, வில்லன் ஆட்களை ஏமாத்தறதுக்காக சட்டுன்னு இப்படியெல்லாம் பண்ண முடியுமா’ என்ற கேள்வியை ரசிகர்களிடத்தில் உருவாக்கியது. ’கந்தசாமி’யிலும் அப்படிப்பட்ட ‘கெட்டப்’ மாற்றங்களைக் கைக்கொண்டிருப்பார் விக்ரம்.

‘சார், இந்தக் கதையில் நீங்க ஆறேழு கெட்டப்புல வர்றீங்க’ என்று சொன்னால் விக்ரம் ஒரு படத்தை ஒப்புக்கொள்வார் என ‘மீம்ஸ்கள்’ வெளியிடும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டிருக்கின்றன அவரது தேர்வுகள்.

அதனால், இனிமேலாவது அவர் வழக்கமான தோற்றத்தில் திரையில் வெளிப்பட்டு ‘அசாதாரணமான நடிப்பு இது’ என்று ரசிகர்களை உணர வைக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.

நினைவில் இருத்தும் விஷயங்கள்!

‘கந்தசாமி’ படத்தின் படப்பிடிப்புக்கு முன்னதாக, அதன் தொடக்கவிழாவை ஒட்டி ஒரு ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று அந்த விழா நடந்தது.

அந்த ட்ரெய்லரில் விக்ரம் அணிந்த முகமூடி, சேவல் இறகு, பஸ் டிக்கெட்டின் பின்னால் கையெழுத்தில் எழுதப்பட்ட கந்தசாமி பெயர் என்று பல விஷயங்கள் டைட்டிலை சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. ரகுவரன், விக்ரம், சந்தானம் பெயர்கள் இதில் இடம்பெற்றிருந்தன.

முதலில் ஸ்ரேயாவின் தந்தையாக ரகுவரனே நடித்தார். படப்பிடிப்பு நடைபெற்ற காலகட்டத்தில் அவரது மரணம் நிகழ்ந்ததால், அவர் நடித்த காட்சிகள் ஆசிஷ் வித்யார்த்தியைக் கொண்டு மீண்டும் படமாக்கப்பட்டன.

விவேக் நடிக்க வேண்டிய பாத்திரத்தில் வடிவேலு நடித்தார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் அதனை பிரமானந்தம் ஏற்றிருந்தார்.

இது தவிர அந்த டைட்டில் கார்டில் ‘ஷிவ்’ என்ற பெயரும் இருந்தது. ’கந்தசாமி’ தயாரான காலகட்டத்தில் தான், ‘ஏர்டெல்’ விளம்பரம் மூலம் பிரபலமான ஷிவ் பண்டிட் ‘லீலை’ படத்தில் நாயகனாக நடித்தார். அதனால், இதிலும் அவர் நடிப்பதாக இருந்ததா என்ற சந்தேகம் எழுகிறது.

அந்த ட்ரெய்லரே பல லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருப்பது நன்கு தெரியும். இப்போதும் அது யூடியூப்பில் காணக் கிடைக்கிறது. 8 நிமிடம் வரை ஓடக்கூடிய இந்த ட்ரெய்லரை தாங்கிய சிறிய லேப்டாப்பை ‘கந்தசாமி’ படத் தொடக்கவிழா அழைப்பிதழாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வழங்கியது அப்போது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

Kanthaswamy (2009) - Photos - IMDb

படத்தைப் பொறுத்தவரை, தேவிஸ்ரீ பிரசாத்தின் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக இருந்தன.

‘எம் பேரு மீனாகுமாரி’, ‘அலீக்ரா’ பாடல்கள் வெகுகாலமாகப் பலரை ஆட்டம் போட வைத்தன. மீதமிருந்த ‘எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி’, ‘மியாவ் மியாவ் பூனை’, ‘மாம்போ மாமியா’, ‘இதெல்லாம் டூப்பு’ ஆகிய பாடல்களை விக்ரமே பாடியிருந்தார்.

’சிவாஜி’யில் ‘ஏஐ’ உதவியோடு வரைந்த ரவிவர்மாவின் பெண்ணோவியமாகத் தோன்றிய ஸ்ரேயா, இதில் நவநாகரிக மங்கையாக வந்து போயிருந்தார். அவரது கவர்ச்சிகரமான தோற்றமும் இப்படத்தை நோக்கி ரசிகர்களைச் சுண்டியிழுத்தது.

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா நடித்த ஒரே தமிழ்படம் (?!) இதுவே. அவர் மட்டுமல்லாமல், நடிகர் பிரபுவும் இக்கதையில் வீணடிக்கப்பட்டிருந்தார்.

வடிவேலுவை போலீசார் விசாரிப்பது போன்ற நகைச்சுவைக் காட்சியில் பிரபுவையும் ஈடுபடுத்தியிருந்தது, ‘லாஜிக் சேர்க்கிறேன் பேர்வழி’ என்று படத்தின் பலமான அம்சங்களையே பலவீனப்படுத்துவதாக அமைந்தது.

அனைத்தையும் தாண்டி, சுசி.கணேசனின் ‘பைவ் ஸ்டார்’, ‘விரும்புகிறேன்’, ’திருட்டுப்பயலே’ பார்த்துவிட்டு, அவர் மீது உருவான அபிமானத்தைக் கலைத்துப் போட்டது இப்படம்.

‘எப்படி வந்திருக்க வேண்டிய கந்தசாமி இப்படி ஆயிடுச்சே’ என்ற எண்ணம், சென்னை சிட்டி சென்டரில் உள்ள ஐநாக்ஸில் ’முதல் நாள் முதல் காட்சி’ பார்த்தபோது மனதில் எழுந்தது. அந்த எண்ணம் இன்றும் நினைவில் நிற்கிறது.

ஆனால், எதிர்பார்ப்பில்லாமல் படம் பார்த்த ரசிகர்கள் பலரை இப்படம் திருப்திப்படுத்தியிருப்பதைப் பின்னர் அறிய நேர்ந்தது. இப்படத்தின் ஹிந்தி டப் பதிப்பான ‘டெம்பர் 2’ திரைப்படத்தை யூடியூப்பில் ’கோல்டுமைன்’ சேனலில் ஏழரை கோடி பேர் பார்த்திருக்கின்றனர். அதன் இன்னொரு சேனலில் 14 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். சமீபத்தில் அதனை அறிந்தபோது ஆச்சர்யம் பன்மடங்கானது.

பெரிய பட்ஜெட்டில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதென்பது பிரமாண்டமான தேரை ஊரே கூடி இழுப்பதற்கு ஒப்பானது. சில நூறு முதல் ஆயிரக்கணக்கானவர்களின் உழைப்பு அதன் பின்னிருக்கும். அப்பணி சில ஆண்டு காலம் தொடரும்போது, அதிலிருந்து விலகியவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கும்.

அப்படிப் பலரது உழைப்பினால் உருவான படங்கள் திரையில் முதன்முறையாக வெளியான காலத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்போடு பொருந்தி நிற்காமல் போவது பெருஞ்சாபம்.

என்னதான் வசூலை அள்ளி படக்குழுவினரைத் திருப்திப்படுத்தினாலும், தீவிர ரசிகனின் மனதில் அந்தப் படம் ஆறாத வடுவாகவே இருக்கும். அப்படி விக்ரம் ரசிகர்களிடத்தில் நீங்காத நினைவுகளைத் தந்த படங்களில் ஒன்று ‘கந்தசாமி’.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசங்கரன் பாடகலிங்கம்

காங்கிரஸ் கட்சியில் சேருகிறாரா வினேஷ் போகத்… வெளியாகும் ரகசியம்!

பூண்டு இருந்தால் போருக்கே போகலாம்… சந்தைக்கு வந்த போலி பூண்டு… ஜாக்கிரதை மக்களே!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share