சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு ரசிகர்கள் தான் காரணம் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்து சினிமா துறையில் தொடர்ந்து வளர்ந்து வரும் நட்சத்திரமாகவே வலம் வருகிறார் சமந்தா.

இப்படி சினிமா துறையில் அபாரமான உயரத்தை அடைந்துள்ள சமந்தா சினிமாவில் அறிமுகமாகி நேற்றுடன் (பிப்ரவரி 25) 13 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி என்ற தமிழ் படத்தில் முதலில் நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்கில் கௌதம் மேனன் இயக்கிய “ஏ மாய சேசவா” திரைப்படம் 2010 ஆம் ஆண்டு முதலில் வெளியானது.
இதில் ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரத்தில் திரையில் அறிமுகமானார் சமந்தா. இயக்குநர் கௌதம் மேனன் உடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முதன் முதலாக இணைவது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது சமந்தாவிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து ஏ மாய சேசவா தமிழில் “விண்ணைத் தாண்டி வருவாயா” என்ற பெயரில் வெளியானது. தமிழிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் சமந்தா.
இதனையடுத்து அடுத்தடுத்த படங்கள், அதனால் கிடைத்த வெற்றி, விருதுகள் என வளர்ந்து வந்த சமந்தாவிற்கு, திருமணம் விவாகரத்து, மயோசிடிஸ் என்று தனிப்பட்ட பிரச்சனைகளும் ஏற்பட்டது.
அனைத்து தடைக்கற்களையும் தாண்டி தற்போது பான் இந்தியா நாயகியாகவும் அறிமுகமாகவுள்ளார்.
இவர் நடிப்பில் தயாராகியுள்ள சாகுந்தலம் 3டி தொழில் நுட்பத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

சமந்தா சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் “13phenomenalyrsofsamantha” என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரண்டானது.
இதனை சமந்தா ஃபேன்ஸ் என்ற டிவிட்டர் பக்கத்தில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு ”அனைத்து சமந்தா ரசிகர்களாலும் பெருமையாக உள்ளது.
நீங்கள் அனைவரும் சிறந்தவர்கள். இந்த டிரண்டை இதே வேகத்தில் தொடருவோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த பதிவிற்கு சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ”இந்த அன்பை நான் உணர்கிறேன். அது தான் என்னைத் தொடரச் செய்கிறது. இப்போதும் எப்போதும் நான் உங்களால் தான். 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் நாம் இப்போது தான் தொடர்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா