மாணவர்களுக்கான தன்னம்பிக்கை டானிக்!
பள்ளி ஆண்டுயிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் போவதென்பது இன்றைய சூழலில் மாபெரும் பிரச்சனையாகப் பார்க்கப்படுவதில்லை.
ஒரு ஆண்டுக்குள்ளேயே மீண்டும் தேர்ச்சியை அடைவதற்கான சாத்தியங்கள் தற்போது அதிகமிருக்கின்றன. ஆனால், 2000வது ஆண்டுக்கு முன்பு வரை அது ஒருவரது வாழ்வில் மிகப்பெரிய கறையாகக் கருதப்பட்டது.
குறிப்பாக, பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் வாழ்நாள் முழுக்கப் பெரும் அவமானங்களைச் சுமப்பது கட்டாயமாக இருந்தது.
அதை மீறி வெற்றிகளைப் பெறுவதென்பது முயற்கொம்பாகத் தெரிந்ததுண்டு. அப்படிப் பெறப்படும் வெற்றிகள் காலத்தால் அழியாத சாதனைகளாக மாறும்.
அப்படியொரு நபர் தான் மும்பையில் தற்போது உதவி கமிஷனராக இருந்துவரும் ஐபிஎஸ் அதிகாரி மனோஜ்குமார் சர்மாவின் வாழ்க்கை.
பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியடைந்த அவர், எத்தனை கஷ்டங்களை எதிர்கொண்டு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானார் என்பதைச் சொல்கிறது விது வினோத் சோப்ராவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘12த் பெயில்’ திரைப்படம்.
இதே பெயரில் அனுராக் பதக் எழுதிய நூலை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
2கே கிட்ஸ்களுக்கு கொஞ்சமும் கேள்விப்பட்டிராத வாழ்வனுபங்கள் இதில் உண்டு.
தன்னை அறியும் மனிதன்!
மத்தியப்பிரதேசத்திலுள்ள சம்பல் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (விக்ரம் மாசே). உள்ளூர் ஒப்பந்ததாரர் ஒருவரின் சதி காரணமாக, இவரது தந்தை அரசுப் பணியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுகிறார்.
அதைச் சட்டப்பூர்வமாக எதிர்க்கும் நோக்கில் நீதிமன்றமே கதி என்று கிடக்கிறார் தந்தை. தாய், சகோதரர், சகோதரி, பாட்டியுடன் கிராமத்தில் வசிக்கிறார் மனோஜ்.
பத்தாம் வகுப்புத் தேர்வில் காப்பியடித்து முதல் வகுப்பில் தேர்ச்சியடையும் மனோஜ், படிப்பில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். ஒருநாள் அவரது சகோதரரைக் கைது செய்கின்றனர் போலீசார்.
அவரை விடுவிப்பதற்காக, மனோஜ் அப்பகுதியிலுள்ள டிஎஸ்பி அதிகாரியைச் சந்திக்க நேர்கிறது. ‘இனிமேலாவது காப்பி அடிக்காமல் தேர்வு எழுது’ என்று அவர் தரும் அறிவுரை மனோஜின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது.
தனக்குத் தெரிந்ததை மட்டும் தேர்வில் எழுதுகிறார்; பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியடைகிறார். சில ஆண்டுகள் கழித்து, இந்தியில் இளங்கலை படிப்பை முடிக்கிறார்.
மாநில அரசு நடத்தும் காவல் துறை தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே தன் குடும்பத்தைக் கடைத்தேற்றும் என்று நம்புகிறார்.
அந்த லட்சியத்தை எட்டுவதற்காக, கையில் இருக்கும் காசை எடுத்துக்கொண்டு குவாலியரில் இருக்கும் ஒரு பயிற்சி மையத்தில் சேரச் செல்கிறார். செல்லும் வழியில் அவரது பேக் திருடு போகிறது.
அதேநேரத்தில், அப்போதைய ம.பி. அரசு காவல் துறை தேர்வுகளை நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிடுகிறது.
வாழ்வே இருண்டுபோனதாகக் கருதும் மனோஜ், சாப்பிடக் கூட காசில்லாமல் பிளாட்பாரத்தில் இருக்கிறார். இரண்டொரு நாட்கள் கழித்து, ஒரு ஹோட்டலுக்குள் நுழைகிறார். அங்கு ப்ரீதம் எனும் நபரைச் சந்திக்கிறார்;
ஐபிஎஸ் தேர்வுப் பயிற்சிக்காக டெல்லி செல்லும் ப்ரீதம் உடன் மனோஜும் பயணிக்கிறார். யுபிஎஸ்சி தேர்வுக்காகப் பயிற்சி பெறுபவர்கள் நிறைந்திருக்கும் முகர்ஜி நகரில், மேலும் ஒரு நபராக நுழைகிறார் மனோஜ்.
அங்கே, ஐபிஎஸ் ஆக வேண்டுமென்ற முனைப்புடன் இருக்கும் கௌரி எனும் இளைஞரைச் சந்திக்கிறார். அவர் மூலமாக, தனக்கென்று ஒரு வேலையையும் தங்குமிடத்தையும் சம்பாதிக்கிறார் மனோஜ். அதில் கிடைக்கும் பணத்தைத் தன் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கிறார்.
நான்காவது முறையாகத் தேர்வெழுதும் கௌரியால் தேர்ச்சி பெற இயலாமல் போகிறது. ஆனால், அவர் தன்னைப் போன்று தேர்வெழுத வருபவர்களுக்காகவே ஒரு டீக்கடையை நடத்தத் தொடங்குகிறார். அங்கு தான், தன் வாழ்வின் முக்கியக் கட்டங்களில் திருப்புமுனையாகத் திகழ்ந்த மனிதர்களைச் சந்திக்கிறார் மனோஜ்.
தற்செயலாக அவர் சந்தித்த சாரதா ஜோஷி (மேதா சங்கர்) எனும் பெண், அவரது வாழ்க்கைத் துணையாக மாறுகிறார். ஆங்கிலம் புரியாமல் திணறும் மனோஜ், ஒருகட்டத்தில் தன்னிடமுள்ள அத்தனை பலவீனங்களையும் துறந்து நான்காம் முறையாகத் தேர்வெழுதுகிறார்;
முதற்கட்ட, இரண்டாம் கட்டத் தேர்வுகளைத் தாண்டி நேர்காணலுக்குத் தேர்வாகிறார். அதுவே ‘கடைசி முயற்சி’ எனும் நிலையில், நேர்காணலில் தான் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியடைந்ததைப் பற்றிய உண்மையைச் சொன்னாரா, இல்லையா? எப்படி அவர் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானார் என்று சொல்கிறது இத்திரைப்படம்.
தன்னை அறியும் ஒரு மனிதர் எப்படி வாழ்வில் வெற்றியை எட்டினார் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறது ‘12த் பெயில்’.
அற்புதமான நடிப்பு!
விக்ரந்த் மாசே இப்படத்தில் மனோஜ்குமாராக நடித்துள்ளார். பள்ளி, கல்லூரிப் பருவம் முதல் ஐபிஎஸ் தேர்வுக்கான நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது வரை அந்தந்த காலகட்டத்திற்கேற்ற தோற்றத்தையும் உடல்மொழியையும் வெளிப்படுத்தியிருப்பது அபாரம்.
இதற்காக, அவருக்குத் தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
மேதா சங்கர் இதில் சாரதா ஜோஷி ஆக வருகிறார். அப்பாத்திரத்திற்கு நூறு சதவீதம் பொருந்துகிறார். அவருக்கான காட்சிகள் குறைவு என்றபோதும், நம் மனதில் நிறைகிறார்.
நண்பர்கள் ப்ரீதம், கௌரியாக நடித்தவர்கள், நாயகனின் குடும்பத்தினராக வருபவர்கள் என்று பலரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதிலும் டிஎஸ்பியாக வருபவர் இரண்டொரு காட்சிகளில் தோன்றினாலும், நம் மனதில் நிறைகிறார்.
காட்சி நிகழும் களங்களை யதார்த்தமாகக் காட்டுவதில் உறுதியை வெளிப்படுத்தியுள்ளது ரங்கராஜன் ராமபத்ரனின் ஒளிப்பதிவு.
டெல்லி முகர்ஜி நகரில் நிறைந்திருக்கும் பயிற்சி நிலையங்களையும் புத்தக விற்பனையகங்களையும் காட்டுமிடத்தில் நாமே அந்த இடத்திற்கு நேரில் சென்ற உணர்வை உண்டாக்கியிருக்கிறது.
ஜஸ்குன்வர் கோஹ்லி – விது வினோத் சோப்ராவின் இறுக்கமான படத்தொகுப்பினால், எடுத்துக்கொண்ட கதைக்கு வேண்டாத காட்சிகள், ஷாட்கள் என்று எதுவும் நமக்குக் கிடைப்பதில்லை.
பிரசாந்த் பிட்கரின் தயாரிப்பு வடிவமைப்பை அடியொற்றி அமைந்திருக்கும் ஹேமாந்த் வாஹின் கலை வடிவமைப்பு வேறுபட்ட களங்களை அதனதன் இயல்போடு திரையில் பார்க்க வகை செய்திருக்கிறது.
அங்கிருக்கும் மனிதர்களை வேறுபடுத்திக் காட்ட உதவியிருக்கிறது மாளவிகாவின் ஆடை வடிவமைப்பு.
சாந்தனு மொய்த்ரா இசையில் ‘போலா நா’, ‘ரீஸ்டார்ட்’ பாடல்கள் உத்வேகமூட்டுகின்றன. நாயகன் நேர்முகத் தேர்வில் பங்கேற்பது மற்றும் அதன் பிறகான கிளைமேக்ஸ் காட்சியில் பின்னணி இசை அருமை.
ஒரு உண்மைக்கதையை எடுத்துக்கொண்டு, அதற்குத் திரையுருவம் தருவதற்காக ஆங்காங்கே கற்பனையைக் கலந்த வகையில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது இயக்குனர் விது வினோத் சோப்ராவின் உழைப்பு.
45 ஆண்டுகளாகத் தொடரும் அவரது பயணம் மட்டுமல்ல, இன்றைய தலைமுறையும் ரசிக்கும்விதமாக ஒரு படத்தைத் தந்த பாங்கும் நம்மை ஒருசேர மகிழ்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்துகிறது.
தன்னம்பிக்கை ஊட்டும்!
ஒரு மனிதர் வாழ்வில் பல கஷ்டங்களை எதிர்கொண்டு முன்னேறினார் என்று சொல்லும் கதைகள், எப்போதும் ’தன்னம்பிக்கை டானிக்’ ஆகத் திகழும்.
அதிலும், சமகாலத்தில் வெற்றிகரமான மனிதராகத் திகழ்ந்து வரும் மனோஜ்குமார் எனும் காவல் துறை அதிகாரியின் இளமைக்கால வேதனைகளை, சவால்களை, தோல்விகளை, அதன்பிறகு கிடைத்த வெற்றிகளைப் பேசும் இப்படமும் நம்மைக் கவர்வது நிச்சயம்.
குழந்தைகளுக்கு இப்படம் படிப்பின் மீதான ஆர்வத்தை ஊட்டும்; தோல்விகளைக் கண்டு துவழக்கூடாது என்று சொல்லித் தரும்.
’12த் பெயில்’ படத்தில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள், 4 முறைக்கு மேல் யுபிஎஸ்சி தேர்வை எழுத முடியாது எனும் வரையறையை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகின்றன. பொது வகுப்பினருக்கு மட்டுமேயான வரைமுறை அது.
தற்போது அந்த வரையறை ஆறு முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 9 முறையும், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு வரைமுறையின்றியும் தேர்வெழுதலாம் என்ற நிலை தற்போது இருந்து வருகிறது. மிகக்கவனமாக, அதனைப் பேசாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர். இதன் மூலமாக, பொதுப்பிரிவில் இருக்கும் சாதியினர் மட்டுமே யுபிஎஸ்சி தேர்வை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதைச் சொல்ல விழைந்திருக்கிறார்.
அதேநேரத்தில், நாட்டில் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் பற்றியும், இந்தி போன்ற பிராந்திய மொழிகளில் கல்வி பயில்பவர்கள் ஆங்கில வழியில் படித்தவர்களோடு இணைந்து யுபிஎஸ்சி போன்ற தேர்வுகளை எதிர்கொள்வதில் இருக்கும் சவால்கள் குறித்தும், இதில் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இயக்குனரின் இந்த இரட்டை நிலைப்பாடு மட்டுமே இப்படத்தில் தென்படும் மிகப்பெரிய குறை. அதுவொரு பொருட்டல்ல என்பவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம்; பாராட்டலாம்.
’12த் பெயில்’ பார்த்தபிறகு, அதனைப் பாராட்டாமல் இருப்பது கடினம். அதனைச் சாதிக்கும் திரைமொழியைத் தனதாகக் கொண்ட விதுவினோத் சோப்ராவை கொண்டாடத்தான் வேண்டும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
லியோ vs 2.0 : வசூலில் எது டாப்?
கார்த்தி 25: இயக்குநர் அமீர் பங்கேற்காதது ஏன்? ரசிகர்கள் கேள்வி!