ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?

Published On:

| By Kumaresan M

தெலுங்கில் புஷ்பா 2 படம் மட்டுமே 1,500 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் தமிழ் திரையுலகம் இந்த ஆண்டு மட்டும் 1000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் திரையுலகத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

நடிகர், நடிகைகளின் சம்பளம் குறைவாகவுள்ள மலையாள திரையுலகத்தில் இந்த ஆண்டு 600 முதல் 700 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழ் சினிமாவின் நிலை அதை விட மோசமாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு 241 தமிழ்ப்படங்கள் வெளியான நிலையில் 223 படங்கள் தோல்வியை தழுவியிருக்கின்றன. 3 ஆயிரம் கோடி மதிப்பில் 241 படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஈதில், 2 ஆயிரம் கோடி தான் வசூலாக கிடைத்துள்ளது. 18 படங்கள் மட்டுமே திருப்திகரமான வசூலை கொடுத்துள்ளன.

வேட்டையன், தி கோட், அமரன், மகராஜா, அரண்மனை4 ,மெய்யழகன் போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றன. நடுத்தர பட்ஜெட் படங்களான வாழை, டிமாண்டி காலனி, கருடன், ரோமியோ, அந்தகன் போன்ற படங்களும் வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம். 400 கோடி மதிப்புள்ள சிறிய பட்ஜெட் படங்கள் 186 வெளி வந்துள்ளன. இவற்றில் லப்பர் பந்து, பேச்சி போன்ற படங்களும் நல்ல வசூலை பெற்றன. இந்த படங்கள் மக்கள் மத்தியில் தரமான படமாகவும் பார்க்கப்பட்டது.

இது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் கே. ராஜன் கூறியிருப்பதாவது, ‘இந்த ஆண்டு திரைக்கு வந்த 241 படங்களில் 18 படங்கள்தான் வெற்றி பெற்றுள்ளன. இது வெறும் 7 சதவிகிதம்தான் என்பது வருந்தத்தக்கது. 223 படங்கள் தோல்வியடைந்திருப்பதால் 1000 கோடிக்கு தமிழ் சினிமா இழப்பை சந்தித்துள்ளது. தரமான முறையில் கதையம்சம் கொண்ட படங்கள் வெளி வந்தால்தான் தமிழ் சினிமாவுக்கு நல்ல திருப்பம் ஏற்படும்“ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

தடையை மீறி போராட்டம் : சீமான் கைது!

ஆர்ப்பாட்டம் வெற்றி: ஸ்டாலினுக்கு நன்றி சொல்லும் அதிமுகவினர்… ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share