theeya vela seyyanum kumaru

கொஞ்சம் காதல்… நிறைய நகைச்சுவை: ’தீயா வேலை செய்யணும் குமாரு’

சினிமா

தீயா வேலை செய்யணும் சித்தார்த்

‘தீயா வேலை செய்யணும் குமாரு’ திரைப்படம் சுந்தர்.சி இயக்கிய நகைச்சுவைத் திரைப்படங்களில் ஒன்று. அவரது வழக்கமான பாணியில் இருந்து சற்றே விலகி, முழுக்க இளைய தலைமுறையை விழுந்து விழுந்து சிரிக்க வைக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு உருவான ஒன்று.

இன்றோடு அப்படம் வெளிவந்து பத்தாண்டுகள் ஆகிறது. தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் அளவுக்கு அதன் காட்சிகள் இராது; அதேநேரத்தில், தொடர்ச்சியாக அப்படத்தைப் பார்க்க நேர்ந்தால் வெடிச்சிரிப்பு நிச்சயம்.

கிண்டலடிக்கப்பட்ட டயலாக்

‘எதையாவது சீரியசா பேசினா உடனே சிரிப்பா மாத்திடுறாங்க’ என்பதே இளைய தலைமுறை குறித்து பெரியவர்களின் அங்கலாய்ப்பு. அது காலம்காலமாகத் தொடர்வதுதான் என்றாலும், அப்படிக் கிண்டலடிக்கப்படும் விஷயங்கள் ஒரு தலைமுறையின் அன்றாட வாழ்க்கையிலும் கூட இடம்பெறும்.

சில நேரங்களில் திரைப்படங்களே அந்த வேலையைச் செய்துவிடும். ‘சந்திரமுகி’ படத்தில் இடம்பெற்ற ‘என்ன கொடுமை சரவணன்’ என்ற வரிகள் அப்படித்தான் ‘சென்னை 28’ படத்தில் பிரேம்ஜியால் கிண்டலடிக்கப்பட்டு பிரபலமானது. அதே பாணியில் மீம்களில் உலா வந்த இன்னொரு டயலாக் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’.

புதுப்பேட்டை படத்தில் மிக சீரியசாக சொல்லப்பட்ட அந்த வசனம், அதற்கடுத்த சில ஆண்டுகளிலேயே சகாக்களைக் கிண்டலடிப்பதாக உருமாறியது. ஒரு படத்தின் டைட்டிலாக வைக்கும் அளவுக்கு அது பிரபலமானது. அதற்கு ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் சந்தானமும் ஆர்யாவும் அதனை எடுத்தாண்டதும் ஒரு காரணம்.

‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் விஜயன் பேசும் ‘இந்த பையனுக்குள்ள ஏதோ இருந்திருக்கு பாரேன்’ என்பதும் அந்த ரகம் தான். அப்படிப்பட்ட ஒன்லைனர்கள் திரையில் அரிதாகத்தான் பூக்கும் என்பது நாமறிந்தது.

சுந்தர்.சியின் சிறப்பு

காமெடியைப் பொறுத்தவரை டைமிங் என்பது மிக முக்கியம். அதனை நன்கு உணர்ந்தவர் இயக்குனர் சுந்தர்.சி. அவரது முதல் படமான முறைமாமன் தொடங்கி உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளை போகுதே, ரெண்டு, கலகலப்பு என்று பல படங்கள் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.

எந்தவொரு காமெடி நடிகர், நடிகையோடும் இணைந்து பணியாற்றும் திறன் சுந்தர்.சி-க்கு உண்டு. புதிதாக ஒரு ட்ரெண்ட் உருவாகும்போது, அதனை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்ற புரிதல் அவரிடம் நிறைய இருக்கு. அதற்கு ஒரு உதாரணமே ‘தீயா வேலை செய்யணும் குமாரு’.

2010க்கு பிறகு இளம் தலைமுறையைச் சேர்ந்த பல இயக்குனர்கள் குறும்படங்கள் இயக்கி, அதன் வழியே நேரடியாகத் திரையுலகுக்குள் வருவது அதிகரித்தது. அவர்கள் உருவாக்கும் கதைகளும், அதற்குக் காட்சி அமைக்கும் விதமும் கொஞ்சம் புதிதாகத் தெரிந்தது. இன்றிருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்ப காமெடி படம் எடுப்பது என்றால், அவர்களது சிந்தனைத் திறனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற பார்வை சுந்தர்.சியிடம் இருந்தது.

அதனாலேயே, தனது பழைய சகாக்களை அடுத்த படத்திற்குப் பயன்படுத்தலாம் என்ற முடிவோடு இயக்குனர் நலன் குமரசாமி, கருணாகரன், ஸ்ரீனிவாஸ் கவிநயம், பிரபுதாஸ் போன்றவர்களோடு இணைந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் திரைக்கதையை எழுதினார். அதுவே சந்தானம், சித்தார்த் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்ததும் நாம் சிரிக்கக் காரணமாக இருந்தது.

ஏற்கனவே சுந்தர்.சி படங்களில் இடம்பெற்ற நடிகர் நடிகைகள் பலர் இதில் இடம்பெற்றிருக்க மாட்டார்கள். புதிதாக அறிமுகமாகும் கலைஞர்களிடம் இருந்து நகைச்சுவை நடிப்பைப் பெறுவதென்பது கொஞ்சம் கடினமான விஷயம். அது தெரிந்தும், இந்த படத்தில் சுந்தர்.சி அந்த ரிஸ்கை மேற்கொண்டிருந்தார். அதற்கான பலன் தியேட்டர் வசூலில் தெரிந்தது.

ஒருமுறை பார்க்கலாம்

கொஞ்சம் காதல், கொஞ்சம் கவர்ச்சி, கூடவே நிறைய நகைச்சுவை, அவற்றோடு லேசாக சில திரைக்கதை திருப்பங்கள் இருந்தால் போதும் என்பதற்கு ‘சபாஷ் மீனா’வுக்கு முன்பே தமிழ் திரையில் பல உதாரணங்கள் உண்டு. ‘தில்லு முல்லு’, ‘தென்றலே என்னைத் தொடு’, ’மைக்கேல் மதன காமராஜன்’, ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்று இடைக்காலத்தில் அந்த வரிசையில் இடம்பெற்ற படங்கள் மிக அதிகம்.

2000களில் ஆக்‌ஷன் படங்களின் வரவு அதிகமான பிறகு, அப்படிப்பட்ட நகைச்சுவைக் காதல் கதைகளை யோசிப்பது கடினம் என்றானது. அந்தச் சூழலில் வரமாய் வாய்த்தவர்தான் சுந்தர்.சி. அவர் என்னதான் காரசாரமான கமர்ஷியல் படம் எடுத்தாலும், அதில் வயிறு வலிக்கச் சிரிக்கும் அளவுக்கு நான்கைந்து காமெடி காட்சிகளாவது இருக்கும்.

தன் வழக்கத்தை மாற்றி, நீண்டகாலத்திற்குப் பிறகு ‘உள்ளத்தை அள்ளித்தா’ பாணியில் சுந்தர்.சி தந்த படம் தான் ‘கலகலப்பு’. அதன் தொடர்ச்சியாக, ‘தென்றலே என்னைத் தொடு’ பாணியில் இன்றைய தலைமுறைக்காக இளமை பொங்கும் ஒரு ரொமாண்டிக் காமெடி தர நினைத்தார். இது போன்ற மெலிதான கதையின் மீது வலுவாகக் கட்டப்பட்ட திரைக்கதையைக் கொண்ட படங்கள் சிறந்த பொழுதுபோக்கு படங்களாகக் கருதப்படும். ஒருமுறை பார்க்கலாம் என்ற ரசிகர்களின் மதிப்பீட்டில் அவை சேரும். சுந்தர்.சி தந்தவற்றில் முக்கால்வாசி அந்த வகையறாதான்.

காதலித்து திருமணம் செய்வதே நம் வழக்கம் என்றிருக்கும் குடும்பத்தில் பிறந்த ஒரு ஆணுக்குக் காதல் என்றாலே ஆகாது. காசு வாங்கிக் கொண்டு காதலிக்கக் கற்றுத் தரும் ஒரு நபர் சொல்வதைக் கேட்டு, அந்த ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்குகிறார். ஒருகட்டத்தில், காதலுக்கு ஐடியா தருபவரே அந்தக் காதலைப் பிரிக்க முனைகிறார். அது ஏன் என்பதுதான் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் கதை.

இந்த படத்தில் சித்தார்த், ஹன்சிகா ஜோடியின் நடிப்பு அவ்வளவு பிரமாதமாக இருக்கும். குறிப்பாக சந்தானம் உடனான சித்தார்த்தின் காட்சிகள் நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும். அதன்பிறகு அந்த காம்பினேஷன் தொடராத அளவுக்கு, தனி நாயகனாக தனிப்பாதையில் இறங்கிவிட்டார் சந்தானம். லாஜிக் பற்றியெல்லாம் யோசிக்காமல் தியேட்டரில் ரசிகர்களைச் சிரிக்க வைக்கும் மேஜிக்கை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

சித்தார்த் கவனத்திற்கு

வெவ்வேறுபட்ட பாத்திரங்கள், கதைகள், காட்சிக் களங்கள் என்று பார்த்துப் பார்த்து தனக்கான படங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார் சித்தார்த். அவரது பட வரிசையைத் திரும்பிப் பார்த்தால், அந்த ‘வெரைட்டி’ தெரிய வரும். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த அனுபவம் அதற்கு உதவி செய்வதை உணர முடிகிறது. ஆனால், ஒரு நடிகராகப் பலதரப்பட்ட மக்களைக் கவர்வதற்கு அது மட்டுமே போதுமானதல்ல.

ரசிகர்கள் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு விதவிதமான மனிதர்களைத் திரையில் அவர் பிரதிபலித்தாக வேண்டும். ஆனால், அவரோ பால்கனி ஆடியன்ஸுக்காக மட்டுமே படம் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு, இந்தி, தமிழ் என்று மாறி மாறி ஆண்டுக்கு ஓரிரு படங்களில் நடிப்பதும் கூட சித்தார்த்தை திரையில் பார்ப்பதில் பெரிய இடைவெளியை உருவாக்குகிறது.

இதையெல்லாம் தாண்டி அவர் மீது மிக முக்கியமான குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்படுகிறது. ஏழ்மையான, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவராக அவர் நடிப்பது திரையில் ரொம்பவே செயற்கையாகத் தெரிகிறது என்பதுவே அது. அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவர் சரி செய்ய வேண்டும். உதயம் என்ஹெச்4, சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற வெற்றிப் படங்களில் கூட அதனை உணர முடியும்.

’தீயா வேலை செய்யணும் குமாரு’ தந்த புகழாரங்களை நினைவில் இருத்திக்கொண்டு, அது போன்ற படங்களை மீண்டும் சித்தார்த் தர வேண்டும். வயதுக்கேற்ற சமூகப் பொறுப்போடு நல்ல நகைச்சுவை படங்களைத் தருவது ஒன்றும் பெரிய காரியமல்ல. அதனால் ’தீயா வேலை செய்யனும்’ என்ற வார்த்தைகள் சித்தார்த்துக்கும் பொருந்தும்.

போலவே, ‘காபி வித் காதல்’ என்ற படத்தின் வழியே விழுந்து புரண்டு சிரிக்க வைக்கும் வாய்ப்பிருந்தும் ‘பீல்குட் படம் தருகிறேன் பேர்வழி’ என்று நம்மை வெறுப்பேற்றி தியேட்டரில் இருந்து வழியனுப்பினார் சுந்தர்.சி. தனது பலத்தைத் துறந்துவிட்டு எதிராளியோடு மோதுவதென்பது நிச்சயம் புத்திசாலித்தனமான விஷயமல்ல.

உதய் பாடகலிங்கம்

செந்தில் பாலாஜி கேஸ் டைரி : புட்டு புட்டு வைத்த அண்ணாமலை

சபரீசன் செந்தில் பாலாஜியை பார்த்தது ஏன்? சி.வி.சண்முகம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *