ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ஒரு திரைப்பட இயக்குனர், தன் படைப்புகளில் மிகச்சிறந்த பாடல்கள் இருக்க வேண்டுமென்று விரும்புபவராகத் திகழ்வார். ‘பாடல்கள் தான் ஒரு திரைப்படத்தின் வாயில்’ என்றிருந்த காலத்தைக் கடந்து வந்த காரணத்தால், இன்றளவும் அதனை ஒரு அளவீடாகக் கருதும் இயக்குனர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு ரசிகர்களை இசை மழையில் நனைய வைக்கும் விருப்பமுண்டு. அதற்காகவே, சில ‘மியூசிகல் பிலிம்’களை தந்தவர்களும் உண்டு. 10 years of sjSuryah isai
தமிழில் புகழ் பெற்ற இயக்குனர்களை எடுத்துக்கொண்டால், அந்த வரிசையில் ஓரிரு படங்களையாவது ஆக்கியிருப்பார்கள். அதிலொருவர் தான் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா.
வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே என்று அவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் பாடல்கள் சூப்பர்ஹிட். மேற்சொன்ன படங்களின் தெலுங்கு, இந்தி பதிப்புகளிலும் அதனைச் செய்து காண்பித்திருப்பார்.
அப்படிப்பட்டவர் தான் இயக்கி நடிக்கும் படத்திற்குத் தானே இசையமைத்தார். அந்த படத்தின் பெயர் தான் ‘இசை’. முழுக்க இசைமயமான அப்படத்திற்கு இசையமைக்க அவர் எத்தனை இசையமைப்பாளர்களை அவர் நாடினார் என்று நமக்குத் தெரியாது. ஆனால், இறுதியாக அவரது கற்பனையிலேயே அப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அமைந்தன.
வெறுமனே முரட்டு தைரியமாக மட்டுமே அம்முடிவு அமைந்துவிடவில்லை. மாறாக, தெளிவும் தீர்க்கமும் மிக்கவராகத் தனது இசைப்புலமையை அதில் வெளிக்காட்டியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.
‘இசை’ திரைப்படம் வெளியாகி இன்றோடு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளன.

நடிப்பில் இருந்து இசைக்கு..! 10 years of sjSuryah isai
தியாகராஜ பாகவதருக்கு முன்னே தமிழில் நடித்த நாயகர்கள் முதல் இன்றிருக்கும் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் வரை பலருக்கும் திரையிசையில் ஆர்வமும் விருப்பமும் உண்டு. அதுவே, அவர்களது படங்களின் பாடல்கள் உருவாக்கத்தில் அவர்களைப் பங்களிக்கச் செய்கிறது. எம்ஜிஆர், கமல்ஹாசன் போன்றவர்கள் அதனை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றனர்.
எண்பதுகளில் அறிமுகமான டி.ராஜேந்தர் தொடங்கி கே.பாக்யராஜ், பாண்டியராஜன் என்று இயக்குனர் கம் நடிகராக இருந்த சிலர் இசையமைப்பாளராக உருமாறியிருக்கின்றனர். ஸ்ரீதர் ராஜன், அழகப்பன் உட்படச் சில இயக்குனர்களின் படங்களில் டி.ராஜேந்தர் இசையமைத்திருக்கிறார்.
சிம்பு, கருணாஸ் போன்றவர்கள் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கின்றனர். ரகுவரன் தனது இசையார்வத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆல்பம் ஒன்றை உருவாக்கினார். அவரது மறைவுக்குப் பிறகு அது வெளியானது.
இந்தி இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷமய்யா பாணியில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் போன்ற இசையமைப்பாளர்கள் தமிழில் நாயகர்களாக வலம் வருகின்றனர். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைப்பது போலவே படங்களிலும் நடித்திருக்கின்றனர். இன்று அனிருத், தமன் என்று பலரும் அதனைப் பின்பற்றி வருகின்றனர். 10 years of sjSuryah isai
ஆனால், இந்த வரிசையில் எஸ்.ஜே.சூர்யாவை நிறுத்த முடியாது. ஏனென்றால், ஒரு நாயக நடிகராகத் தன்னை முன்னிறுத்தும் வகையில் ‘இசை’ படத்தின் பாடல்களை அவர் உருவாக்கவில்லை. தியேட்டரில் ரசிகர்கள் குதூகலிக்கிற வகையில் ‘கொண்டாட்டத்தையும் துள்ளலையும்’ நிறைத்த பாடல்களை மட்டும் அவர் தன்னிசையில் தரவில்லை. மாறாக, மொத்தப் படமும் இசைமயமாக இருக்க வேண்டுமென்று விரும்பினார்; துளியும் அதில் சமரசமற்று இருந்து, தான் நினைத்ததைச் சாதித்தார். அந்த வகையில் நடிப்பைத் தாண்டி இசையிலும் தனது பங்களிப்பின் எல்லை விரிவுபடுத்தியது வியக்கத்தக்கதொரு முயற்சி.

படத்திற்கான வரவேற்பு! 10 years of sjSuryah isai
‘இசை’ படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை எஸ்.ஜே.சூர்யா நாடியதாகத் தகவல்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஒரு பேட்டியொன்றில் அதனை சூசகமாகக் குறிப்பிட்ட எஸ்.ஜே.சூர்யா, ‘நீங்களே இசையமைச்சிடுங்க’ என்று அவர் தன்னைத் தூண்டியதாகக் கூறியிருந்தார். ரஹ்மான் தவிர வேறு இசையமைப்பாளர்கள் இப்படத்தில் பங்கேற்க மறுப்பு தெரிவித்தனரா என்று தெரியவில்லை.
இரண்டு இசையமைப்பாளர்கள் இடையே நிலவுகிற பிளவைப் பேசும் விதமாக இப்படத்தின் கதை அமைந்ததும் கூட, பலர் இதில் பங்கேற்கத் தயங்கியதற்குக் காரணமாக இருக்கலாம்.
தனக்குப் போட்டியாக விளங்கும் ஒரு இசையமைப்பாளருக்கு இன்னொரு இசையமைப்பாளர் தரும் பிரச்சனைகளும், அதனால் விளையும் பூகம்பங்களுமே இப்படத்தில் காட்சிகளாக இருந்தன.
ஆனால், ‘எல்லாமே கனவு’ என்பதாக இதன் கிளைமேக்ஸ் காட்சியை அமைத்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அதனால் ‘என்னடா இது போங்கு’ என்ற எண்ணமே பல ரசிகர்களைத் தொற்றியது. இப்படத்தில் அப்படியொரு முடிவை எஸ்.ஜே.சூர்யா தந்ததற்கு கார்த்திக் சுப்புராஜின் ‘பீட்சா’ படம் காரணமாக இருக்கலாம். ஆனால், அப்படத்தில் இருந்த தெளிவும் தீர்க்கமான சித்தரிப்பும் பின்னதில் குறைந்திருந்தது.
அதையும் தாண்டி, இப்படத்தின் ஒளிப்பதிவு, கலை வடிவமைப்பு, இசையைப் பற்றி வியக்காத ரசிகர்களே இல்லை எனலாம். என்ன, படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை குறைவென்பதால் வியந்தவர்களும் அதற்குள்ளேயே அடங்கிவிட்டனர்.
இந்த படத்தில் இசை வீசி, அதோ வானிலே நிலா வந்ததே, நீ பொய்யா பாடல்கள் மென்மையாக மயிலிறகுகள் கொண்டு வருடுவதாக அமைந்திருந்தது என்றால், களியாட்டம் போட வைக்கிற வகையில் ‘புத்தாண்டின் ஒளி’, ‘டர்ட்டி டான்ஸிங்’ பாடல்கள் இருந்தன. இது போக மூன்று இசைகோர்வைகளையும் தனித்தனியாகத் தந்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா.
யூடியூப் தளத்தில் இதன் பாடல்களைச் சில கோடி பேர் கேட்டு ரசித்திருப்பதே இவற்றின் வல்லமைக்குச் சான்று.
‘இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், துணுக்கொலிகளின் கால இடைவெளியை மாற்றியமைத்துச் சுவை கூட்டியிருந்தால் மிகப்பிரமாதமானதாக மாறியிருக்கும்’ என்று சொல்லும் வகையிலேயே இப்பாடல்கள் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தின.
இசை படத்தை, அதன் பாடல்களை எதிர்கொள்ள நேர்பவர்கள், ‘அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யா எப்போது படம் இயக்குவார்’ என்ற கேள்வியைத் தன்னில் கண்டெடுப்பார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று வட்டமிட்டு இயங்கிக் கொண்டிருக்கும் அவர் அதற்கான பதிலையும் விரைவில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அந்த படத்திற்கு அவரே இசையமைப்பது என்பது நிச்சயம் அவரது நடிப்புக்கான, இயக்கத்திற்கான கால அவகாசத்தை மேலும் நீளச் செய்யும். அதையும் மீறி அவர் இசையமைத்தால் மேலும் சில நல்ல பாடல்கள் கிடைக்குமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே ‘இசை’ படத்தின் சிறப்பு. இப்படம் தவிர்த்து ரேணு தேசாயின் ‘இஷ்க் வாலா லவ்’ எனும் மராத்தி படத்தில் இரண்டு பாடல்களுக்கு எஸ்.ஜே.சூர்யா இசையமைத்திருக்கிறார்