உதயசங்கரன் பாடகலிங்கம்
தினசரிகளைத் திறந்தால் வன்முறைக் குற்றங்களுக்கு இணையாகப் பொருளாதார ரீதியிலான குற்றங்கள் குறித்த செய்திகளும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அவற்றை உற்றுக் கவனித்தால், மோசடி செய்தவர்களின் வாக்குறுதிகள் அனைத்துமே பொய்கள் என்று அப்பட்டமாகத் தெரிந்துவிடும்.
ஒருவர் செலுத்தும் தொகையில் கிட்டத்தட்ட முப்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பணத்தை மாதாந்திரத் தவணையாகத் தருகிறோம் என்கிற ரீதியில் அவை இருக்கும். மிகச்சில மாதங்களில் அசல் தொகை கைக்கு வந்துவிடும் நிலையில் எப்படி அடுத்தடுத்து வட்டியை வழங்க முடியும் என்று சம்பந்தப்பட்ட நபர்களை, நிறுவனங்களை எவரும் கேள்வி கேட்பதில்லை.
ஏனென்றால், அணிவகுத்து நிற்கும் அனைவரிடமும் பேராசையைத் தவிர வேறேதும் இல்லை. அந்தப் பேராசையைப் பயன்படுத்திச் செயல்படுத்தப்படும் பலவிதமான ஏமாற்று வித்தைகளை அம்பலப்படுத்தியது இயக்குனர் வினோத்தின் அறிமுகப்படமான ‘சதுரங்க வேட்டை’. அப்படம் வெளியாகிப் பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
காந்தி பாபுவின் கதை!
‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு பேர்களில் ஒரு நபர் மோசடி செய்வதாகக் காட்டப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் அப்பாத்திரம் வில்லத்தனம் மிக்கதாக, ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போயிருக்கும்.
’ஜானி’, ‘ஜென்டில்மேன்’ போன்ற சில படங்களில் அதன் நாயகர்கள் திருட்டு, முறைகேட்டில் ஈடுபடுவதாகக் காட்டப்பட்டதுண்டு. ஆனால், அது விலாவாரியாக விவரிக்கப்படவில்லை. குறிப்பாக, எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாகும் விஷயங்களை எந்தவொரு படமும் பேசவில்லை.
ஆனால், அவற்றைச் செய்துவரும் ஒரு மனிதரை மையப்பாத்திரமாக யோசித்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று யாரும் யோசித்தார்களா? தெரியாது. அதனைச் செய்து காட்டியது ‘சதுரங்க வேட்டை’.
காந்தி பாபு என்ற நபர், சிறு வயதில் சில நபர்களால் ஏமாற்றங்களுக்கு ஆளாகிறார். தனது பெற்றோர், சகோதரியை இழக்கிறார். வறுமையினால் வயிற்றுப்பசியைத் தீர்க்க இயலாமல் அல்லாடுகிறார்.
கடுமையாக உழைத்த பணத்தைச் சூதாட்டத்தில் தொலைக்கிறார். அப்போது, அதன் பின்னே இருக்கும் மோசடி நபர்களைக் கண்டறிகிறார். அவர்களிடம் நியாயம் கேட்பதற்குப் பதிலாக, அவர்களைப் போலவே பிறரை ஏமாற்ற முடிவெடுக்கிறார்.
பிறகு, தமிழ்நாடு முழுவதும் பல நபர்களை விதவிதமாக ஏமாற்றுகிறார். மண்ணுளிப் பாம்பு மோசடி, ஈமு வளர்ப்பு முறைகேடு, போலி கோயில் கலசம் விற்பனை, எம் எல் எம் முறையில் போலி அழகுசாதனப் பொருள் விற்பனை என்று பல நபர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கிறார்.
அவ்வாறு ஏமாந்துபோன ஒரு நபரால் கடத்தப்படுகிறார் காந்தி பாபு. அவரது ஆட்களால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் சேர்த்த பணம் எங்கெல்லாம் இருக்கிறது என்ற தகவலைச் சொல்கிறார். ஆனால், காந்தி பாபுவிடம் வேலை செய்த இரண்டு பேர் அந்தப் பணத்துடன் ‘எஸ்கேப்’ ஆகின்றனர்.
அதன்பின்னர், தன்னைக் கடத்திய கும்பல் பணம் சம்பாதிக்கச் சில மோசடி வேலைகளைக் கற்றுத் தருகிறார். அவர்கள் அந்த மோசடிகளில் மதி மயங்குகின்றனர். ஒருநாள் அவர்களை போலீசின் பிடியில் சிக்க வைக்கிறார் காந்தி பாபு. ஆனாலும், அவரால் சுதந்திரமாக நடமாட முடிவதில்லை. அவரிடம் ஏமாந்த நபர்களால் விரட்டப்படுகிறார்.
அந்த காலகட்டத்தில், தன்னிடம் வேலை பார்த்த ஒரு கிராமத்துப் பெண்ணைச் சந்திக்கிறார். நேர்மையாக வாழ வேண்டும் என்கிற அந்தப் பெண்ணின் நிலைப்பாட்டை ஏற்க முடியாவிட்டாலும், அவரைக் காந்தி பாபுவுக்குப் பிடித்துப் போகிறது. இருவரும் திருமணம் செய்துகொண்டு அமைதியான வாழ்வை மேற்கொள்கின்றனர்.
அந்த நிலையில், காந்தி பாபுவால் சிறைக்குச் சென்ற கும்பல் அவரைத் தேடி வருகிறது. பெரியதாக ஒரு மோசடியைச் செய்து பணம் பெற்றுத் தருமாறு மிரட்டுகிறது. அந்த நேரத்தில், அவரது மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறார்.
அப்பெண்ணுக்குக் காவலாக ஒரு நபரை நிறுத்திவிட்டு, காந்தி பாபுவை இழுத்துச் செல்கிறது அந்த கும்பல். அவர்கள் சொல்வதைச் செய்யும் வகையில், ஒரு பணக்காரரை ஏமாற்றத் தயாராகிறார் காந்தி பாபு.
பணம் கைக்கு வந்ததுமே காந்தி பாபுவையும் அவரது மனைவியையும் கொல்வது அந்த கும்பலின் திட்டம். இறுதியில் என்னவானது என்பதோடு ‘சதுரங்க வேட்டை’ முடிவடையும்.
மொத்தப்படமும் காந்தி பாபு என்ற நபரையே சுற்றி வருகிறது. இந்தக் கதையில் திருப்பங்கள் உண்டு என்றாலும், அது வழக்கமான ‘கமர்ஷியல் பட’ திரைக்கதை நியதிகளுக்குள் அடங்கி நிற்காது. அதேநேரத்தில், திரைக்கதையின் ஒவ்வொரு பகுதியும் சுவாரஸ்யத்துடன் சொல்லப்பட்டிருக்கும்.
எதிர்பாராத வெற்றி!
இயக்குனர் வினோத் இந்தக் கதையை உருவாக்கவும், காட்சிகளை அமைக்கவும் நிறைய உழைத்திருப்பதைப் படம் பார்க்கையில் உணர முடியும். ஆனால், இப்படியொரு கதையை நாயக நடிகர்கள் ஏற்றிருப்பார்களா என்பது கேள்விக்குறியே. காரணம், இது வழக்கமான ‘பார்முலா’வில் அடங்காதது தான்.
ஒரு வெற்றிகரமான ஒளிப்பதிவாளராகவும், தன்னைத் தேடி வரும் படங்களில் நாயக நடிகராகவும் திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன். அவரை நாயகன் ஆக்கியதில் இருந்தே, இப்படம் எத்தனை நாயகர்களால் ‘ரிஜெக்ட்’ செய்யப்பட்டது என்பதை உணர முடியும்.
எழுபதுகளின் இறுதியில் தான் வில்லனாக நடித்த படங்களில் ரஜினிகாந்த் என்னவிதமான உடல்மொழியை வெளிப்படுத்தியிருந்தாரோ, கிட்டத்தட்ட அதே தொனியில் இப்படத்தில் நடித்திருந்தார் நட்டி. அது, அப்பாத்திரத்தை ஒரே நேரத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் உணர வைத்தது. மொத்தக் கதையையும் அவர் தாங்கியிருந்த விதம், அவரைத் தவிர வேறெவரும் இப்பாத்திரத்தில் நடிக்க முடியாது என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.
நாயகியாக வரும் இஷாரா கூட, வெள்ளந்தியான கிராமத்துப் பெண் என்ற பாத்திர வார்ப்புக்கு ஏற்றவராகத் திரையில் வெளிப்பட்டிருந்தார்.
இளவரசு, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், பொன்வண்ணன், வளவன் மற்றும் அவருடன் வருபவர்கள், குறிப்பாக ராமச்சந்திரன் துரைராஜ் என்று பலர் இதில் நம் மனம் கவரும் நடிப்பைத் தந்திருந்தனர்.
கே.ஜி.வெங்கடேஷின் ‘கேண்டிட்’ ஒளிப்பதிவில், நீதிமன்றத்தில் இருந்து நட்டி வெளிவரும் ஷாட் இப்போதும் நம்மை ரசிக்க வைக்கும்.
போலவே, முன்பின்னாக நகரும் காட்சிகளை எவ்விதக் குழப்பமும் இன்றி ரசிக்கச் செய்ததில் எஸ்.பி.ராஜா சேதுபதியின் படத்தொகுப்பு நிறையவே பங்களித்திருக்கும்.
ஷான் ரோல்டனின் இசையில் ’முன்னே என் முன்னே’ உட்பட அனைத்து பாடல்களும் சட்டென்று ஈர்க்கும் வகையில் இருந்தன. பின்பாதி பரபரவென்று நகர்வதில் பின்னணி இசை பெரும் பங்கு வகித்தது.
இப்படியொரு படத்தை ரசிகர்கள் கொண்டாடாமல் போனால்தான் ஆச்சர்யம் எனும் அளவுக்கு ‘சதுரங்க வேட்டை’ அமைந்தது. தியேட்டரில் இப்படம் வெளியானபோது எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் சென்ற ரசிகர்கள் படுபயங்கரமான திருப்தியுடன் வெளியே வந்தனர். அவர்களது வரவேற்பே இதனை வெற்றி பெற வைத்தது.
’சதுரங்க வேட்டை’ வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை எழுதினார் இயக்குனர் ஹெச்.வினோத். அரவிந்த் சாமி, த்ரிஷா நடித்த அப்படத்தை ‘சலீம்’ நிர்மல் குமார் இயக்கினார். சில காரணங்களால், முழுமையாகத் தயாரான அப்படம் இப்போது வரை வெளிவரவில்லை.
சதுரங்க வேட்டை படம் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ‘ரீமேக்’ செய்யப்பட்டது. ‘ஹெய்ஸ்ட்’ வகைமையில் உலகம் முழுக்கப் படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் எளியவர்களை ஏமாற்றுகிற வகையில் அமைந்த கதைகள் மிகக்குறைவு. அவற்றிலொன்றாக அமைந்த ‘சதுரங்க வேட்டை’, இன்றும் மோசடிகள், முறைகேடுகள் குறித்த செய்திகள் வெளியாகும்போது ‘ட்ரோல்’ செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் படம் பார்த்தபிறகு விழிப்புணர்வு பெற்றதாகச் சொல்வோரும் உண்டு. அதனாலேயே, இன்றும் ஒரு கமர்ஷியல் பட இயக்குனர் என்ற அந்தஸ்தை மீறி இயக்குனர் ஹெச்.வினோத் கொண்டாடப்படுகிறார்.
‘சதுரங்க வேட்டை’யில் படம் முழுக்க நாயகன் பேசும் வசனங்கள், ஏமாற்றுத்தனம் செய்பவர்கள் சப்பைக்கட்டு கட்ட நிறையவே உதவும். அதேபோல, நியாயமான முறையில் வாழ்வை மேற்கொள்பவர்கள் மெச்சிக்கொள்கிற இடங்களும் இதிலுண்டு. இரண்டில் எதனை ஒரு ரசிகர் தனக்கானதாக எடுத்துக்கொள்கிறார் என்பது அவரவரைப் பொறுத்தது.
எது எப்படியானாலும், ’ஏமாற்று வித்தைகளை அறிந்துகொள்ளுங்கள்’ என்று காட்சிப்படுத்திய வகையில், இன்றும் பலருக்கு ஒரு பாடமாக உள்ளது இப்படம்.
‘சதுரங்க வேட்டை’ படம் மறுவெளியீட்டைக் காணப் போவதாகச் சில நாட்களுக்கு முன் செய்திகள் வந்தன; விரைவில் அது நிகழ்ந்தால், மீண்டும் இப்படத்தைப் பெரிய திரையில் கண்டு ரசிக்கலாம்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘கல்கி’ ரூ.1,000 கோடி வசூல்: பிரபாஸ் பற்றி அமிதாப் சொன்ன அந்த விஷயம்!
அமரன் ரிலீஸ்: சிவகார்த்திகேயனின் தீபாவளி ட்ரீட்!
வேலைவாய்ப்பு: TNLDA- வில் பணி!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோவிட் தொற்று!
படித்த பள்ளிக்கு பங்களிப்பு செய்ய ஓர் அறிய வாய்ப்பு!
ஹெல்த் டிப்ஸ்: ஹெல்மெட்டுக்குள் மொபைல் வைத்துப் பேசுபவரா நீங்கள்?