நிச்சயம் தியேட்டருக்குப் படையெடுக்கலாம்!
சில திரைப்படங்கள் நாம் இதுவரை பார்த்தவற்றில் இருந்து முற்றிலுமாக வித்தியாசப்படும். சில படங்கள் அப்படி எந்த உணர்வையும் ஏற்படுத்தாது. ஆனால், முழுமையாகப் பார்த்து முடித்ததும் ‘இது வழக்கமான படம் மாதிரி இல்லையே’ என்று எண்ண வைக்கும்.
டி.அருள்செழியன் இயக்கத்தில் யோகிபாபு, விதார்த், ஸ்ரீபிரியங்கா, இளவரசு, துர்கா, முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்த ‘குய்கோ’ அப்படியொரு எண்ணத்தையே ஏற்படுத்தியது.
சரி, இப்படியொரு எண்ணத்தை விதைக்கும் அளவுக்கு இப்படத்தில் அப்படியென்ன கதை குடி கொண்டிருக்கிறது?
சாதாரண மனிதர்களின் கதை!
திருவண்ணாமலையைச் சேர்ந்த பண்பழகன் (முத்துக்குமார்)_வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலைச் செய்து வருகிறார். கடன் வாங்கியவர்கள் பணம் தராதபோது, அவர்களிடம் இருக்கும் பொருளை எடுத்து வருவது அவரது வழக்கம். அதற்காக, அவரை ‘அடாவடித்தனமானவர்’ என்று கருதிவிட முடியாது. பாக்கி தராமல் இழுத்தடிப்பவர்களைத் தன்வசப்படுத்த, அவர் பயன்படுத்தும் ‘நுட்பம்’ அது.
ஒருமுறை ஒரு நபரிடம் பணம் வசூலிக்கச் செல்கிறார் பண்பழகன். அப்போது, தனது உறவினரான தங்கராஜையும் (விதார்த்) உடன் அழைத்துப் போகிறார். சென்னையில் ஐபிஎல் போட்டியைக் காண 1,500 ரூபாய் வாங்க வேண்டும் என்பதே அவர் பண்பழகனைத் தேடி வந்த காரணம்.
சென்ற இடத்தில், கடன் வாங்கிய நபர் மரத்தில் ஏறி ஒளிய முற்படுகிறார்; தவறிக் கீழே விழுகிறார். அந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, தனது வேலையாளிடம் மேற்கொண்டு பணத்தையும் கொடுத்தனுப்புகிறார் பண்பழகன். ஆனால், விவரம் அறிந்து மருத்துவமனைக்கு வரும் போலீசாரோ பண்பழகன் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர். அவருடன் தங்கராஜ் வந்தது அறிந்து, அவர் பெயரும் புகாரில் சேர்க்கப்படுகிறது.
அருகிலுள்ள மலைக்கிராமமொன்றில் மலையப்பன் என்பவரது தாய் வீரலட்சுமி இறந்து போகிறார். அதற்காகத் தன்னிடம் உள்ள ’ப்ரீசர்பாக்ஸை’ கொடுத்தனுப்புகிறார் பண்பழகன். கைவசம் வேலையாள் இல்லாத காரணத்தால், பெட்டியுடன் தங்கராஜையும் அனுப்பி வைக்கிறார்.
மலையப்பன் வீட்டில் அதனை ‘ஆன்’ செய்யும்போது மின்சாரம் தடைபடுகிறது. அதையடுத்து, ‘ஏதாவது ஒண்ணுன்னா நீ பக்கத்துல இருக்கணும்’ என்று தங்கராஜை அங்கேயே தங்குமாறு சொல்கின்றனர் கிராம மக்கள். அதேநேரத்தில், ‘இங்கு வந்தால் போலீசாரிடம் சிக்கிவிடுவாய்’ என்று எச்சரிக்கிறார் பண்பழகன்.
இந்தச் சூழலில், அரபு நாட்டில் ஒட்டகம் மேய்க்கும் வேலையைச் செய்துவரும் மலையப்பன் (யோகிபாபு) ஊர் திரும்புகிறார். வயதான காலத்தில் தாயை உடனிருந்து கவனிக்கவில்லையே என்று வருத்தப்படும் அவர், தாயின் ஈமச்சடங்குகளை ஒரு திருமணக் கொண்டாட்டம் போல நடத்த முற்படுகிறார். அதற்காக, மேலும் சில நாட்கள் அந்த ஊரில் தங்கராஜ் தங்க நேரிடுகிறது.
ஐபிஎல் போட்டியைக் காணும் வேட்கையுடன் வீட்டில் இருந்து புறப்பட்ட அந்த மனிதரின் வாழ்க்கையை, அந்த மலைக்கிராமத்து அனுபவங்கள் புரட்டிப் போடுகின்றன. அவை எப்படிப்பட்டவை? மலையப்பன் அவரது வாழ்வில் நிகழ்த்திய மாற்றம் என்ன? என்று சொல்கிறது ‘குய்கோ’வின் மீதி.
கூடவே, தாயைத் தெய்வமாக மதிக்கும் ஒரு மனிதன், இந்தச் சமூகத்தில் எந்த நிலையில் இருந்து எப்படிப்பட்ட நிலையை அடைகிறான்? அவனை இந்தச் சமூகம் எவ்வாறு நோக்குகிறது என்று சொல்கிறது இப்படம். அதனாலேயே, குடியிருந்த கோயில் என்பதன் சுருக்கமாக ‘குய்கோ’ எனும் டைட்டிலை சூட்டியிருக்கிறார் இயக்குனர் அருள்செழியன்.
வித்தியாசமான பாத்திரங்கள்!
கொடுத்த கடனை வசூலிப்பதில் நியாயம் காட்டும் கந்துவட்டிக்காரர் பண்பழகன், எதிலும் கமிஷன் அடிக்கத் துடிக்கும் கால்குலேட்டர் சண்முகம், தெனாவெட்டான அல்லக்கையாகத் திரியும் வெட்டுக்கிளி, பொய்யும் புரட்டுமே தன் பேச்சென வாழும் புஷ்பா, காதலனுக்காகப் பல ஆண்டுகள் காத்திருக்கும் முத்துமாரி, கணிதம் வராமல் பல ஆண்டுகளாக பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மலையரசி, யூடியூப்பில் இலக்கியா வீடியோ பார்க்கும் மாணவர்கள் என்று பல வித்தியாசமான பாத்திரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இவர்களோடு ஒரு இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் மற்றும் சில போலீசாரும் இணைகின்றனர். அப்பாத்திரங்களின் இருப்பு சமகால சமூகம், அரசியல் குறித்த இயக்குனரின் விமர்சனமாக இப்படத்தை மாற்றுகிறது.
இதில், ஒரு சாதாரண இளைஞரைக் கண் முன்னே நிறுத்துகிறது விதார்த்தின் நடிப்பு. எந்த இடத்திலும் அவர் தனது பாத்திரம் மேலோங்கித் தெரிய வேண்டுமென்று மெனக்கெடவில்லை.
யோகிபாபுவும் கூட அப்படித்தான் வந்து போயிருக்கிறார். வழக்கமாக, அவர் பயன்படுத்தும் ‘கலாய்த்தல்’ பாணி டயலாக் மாடுலேஷன் கூட இதில் அதிகம் இல்லை. தன் காதலியைப் பல ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பதாக வரும் காட்சியில், அவரது முகத்தில் வழியும் காதல் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.
முதிர்ச்சியான பள்ளி மாணவி என்ற பாத்திரத்தில் எளிதாகப் பொருந்துகிறார் ஸ்ரீபிரியங்கா. நல்ல அழகும் நடிப்புத் திறமையும் உள்ள இவருக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாதது ஏன் என்று தெரியவில்லை.
இன்னொரு நாயகியாக வரும் துர்கா, மிகச்சில காட்சிகளில் வந்தாலும் அப்பாத்திரமாக மட்டுமே நமக்குத் தெரிவது சிறப்பு.
இளவரசுவும் முத்துக்குமாரும் இக்கதையில் முக்கியத் தூண்களாக விளங்குகின்றனர். வினோதினி, முத்துராமன் என்று பல தெரிந்த முகங்கள் கூட இதில் பத்தோடு பதினொன்றாக வந்து போகின்றனர். அதுவே, அவர்களைப் பெருங்கூட்டத்தில் இருக்கும் சில மனிதர்களாகக் காட்டுகிறது.
ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு, திரையில் கொஞ்சம் ‘ஜிகினாத்தனம்’ தென்படாமல் நாமே கதை நிகழும் களங்களுக்குப் பயணிக்கும் உணர்வைத் தருகிறது.
டி.பாலசுப்பிரமணியமின் கலை வடிவமைப்பு, ஒவ்வொரு பிரேமிலும் யதார்த்தத்தை நிறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக வட்டிக்கடை, சாதாரண மக்களின் வீடுகளைக் காட்டிய விதம் அருமை.
படத்தொகுப்பாளர் ராம் பாண்டியன் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து ரசித்து சிரித்து ‘கட்’ செய்திருக்கிறார் போலும்! அதனால், அடுத்த காட்சி தொடங்குவதற்கு சிறிது ‘இடைவெளி’யைக் கொடுத்திருக்கிறார்.
சில வசனங்கள் அல்லது கதாபாத்திரங்களின் செய்கைகளை வைத்து பாடல் அமைப்பது ரொம்பவே அரிதான விஷயம். ‘மாலைமுரசு காலை வரும்’, ‘வீர வணக்கம் வீர வணக்கம்’ பாடல்கள் இதில் அந்த வகையில் அமைந்துள்ளன. ‘அடி பெண்ணே உன்னைக் கண்டால் இன்பம் கூடுதடி’ பாடல் ஒரு ‘இசைக்கதம்பம்’ ஆக நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.
’படத்துல ஒரு குத்துப்பாட்டு இருந்திருக்கலாம்’ என்று முனுமுனுப்பவர்களுக்காகவே, இதில் ‘ஏ செகப்பழகி’ பாடலைத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் அந்தோணி தாசன். அதற்குப் பொருந்துகிற வகையில், அப்பாடலுக்கு முன் ஒரு காட்சியையும் அமைத்திருக்கிறார் இயக்குனர்.
’குச் குச் ஹோதா ஹை’ பாணியில் யோகிபாபுவும் துர்காவும் ஆடும் ‘நீ முத்து மாரி..’ பாடல் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இதில் ‘மாலைமுரசு’ பாடலுக்கு மட்டும் கெவின் மிராண்டா இசையமைத்திருக்கிறார்.
அந்தோணி தாசனின் பின்னணி இசை மிகச்சில இடங்களில் வலுவாகவும், சில இடங்களில் மென்மையாகவும் உள்ளது. பல இடங்களில் மௌனம் மட்டுமே நிறைந்திருப்பது திரைக்கதையின் நகர்வை யதார்த்தமானதாக மாற்றுகிறது.
விமர்சனக் கிண்டல்கள்!
விதார்த் பாத்திரம் முன்பாதியில் ஆதிக்கம் செலுத்துகிறது என்றால், பின்பாதியை யோகிபாபு எடுத்துக் கொள்கிறார். அந்த ஒரு விஷயம் மட்டுமே, இந்த திரைக்கதையை வழக்கமான சினிமா பாணியில் இருந்து விலக்கி வைக்கிறது. மற்றபடி, படம் முழுக்கவே பல சுவாரஸ்யமான தருணங்கள் நிறைந்து வழிகின்றன.
நகரம் என்றால் படு ‘ஸ்டைலிஷாக’ தெரிய வேண்டும்; கிராமம் என்றால் பச்சைப் பசேல் என்றிருக்க வேண்டும் என்பது திரைப்பட உலகின் விதி. அது போன்ற வரையறைகளை உடைத்து, நாம் நேரில் பார்க்கும் சில ஊர்களை நினைவுபடுத்துகிறது ‘குய்கோ’வில் வரும் களங்கள்.
இந்த படத்தின் சிறப்பே, வெகு யதார்த்தமான காட்சியாக்கத்தைக் கொண்டிருப்பதுதான். வழக்கமாக, அது ‘சீரியசான’ விஷயங்களைப் பேச மட்டுமே கையாளப்படும். இதில், தேனில் குழைத்த கசப்பு மருந்தாகப் பல விஷயங்கள் ‘காமெடியாக’ சொல்லப்பட்டிருக்கின்றன.
இறந்த பாட்டிக்கு ‘வீர வணக்கம்’ என்ற பெயரில் போஸ்டர் ஒட்டுவது, ஓரிடத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக போலீஸ் பந்தோபஸ்துக்கு ஏற்பாடு செய்யப்படுவது, தமிழ்நாட்டைச் சேர்ந்த கந்துவட்டிக்காரர்களுக்கும் வடநாட்டு அடகுக்கடை உரிமையாளர்களுக்குமான வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டுவது, இன்றைய இளையோர் யூடியூப் போன்ற நுட்பங்களை பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்துவது போன்றவற்றைத் திரையில் காட்டி நம் தலையில் குட்டுகிறார்; கூடவே, நம்மைச் சிரிக்கவும் வைக்கிறார் இயக்குனர் அருள்செழியன். அதுவே, இந்த சிறிய படத்தைப் பெரிய படமாக மாற்றுகிறது.
இன்னும் சில நாட்கள் கழித்து தொலைக்காட்சியிலோ, ஓடிடியிலோ பார்க்கும்போது, ‘இந்த படத்தை ஏன் தியேட்டரில் பார்க்காமல் தவறவிட்டோம்’ என்று எண்ணும் அளவுக்கு நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது ‘குய்கோ’. அதனைத் தவிர்க்க விரும்புபவர்கள், இப்போதே தியேட்டருக்குப் படையெடுக்கலாம்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்!
திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது!
17வது ஆண்டிலும் கேப்டன் தோனி! – சிஎஸ்கே வெளியிட்ட வீரர்களின் முழுப்பட்டியல்!