கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. தற்போது நடிகர் சிலம்பரசனின் 48-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.
STR 48 படத்திற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது ஒரு “Period Film” என்று படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கூறியிருந்தார்.
தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்ததின் மூலம் ஒரு நடிகராகவும் தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவர் ரக்சன். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் STR 48 குறித்து ரக்சன் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அவர் பேசியதாவது, “இன்னும் சில வருடங்களில் இந்தியாவின் டாப் இயக்குனர்களின் பட்டியலில் தேசிங்கு பெரியசாமி பெயர் இடம் பிடித்துவிடும்.
பாகுபலி படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலிக்கு கிடைத்த அங்கீகாரம், புகழ், அவரது தொலைநோக்கு பார்வை மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கை போல, STR 48 படத்திற்கு பின் தேசிங்கு பெரியசாமி மீதும் அனைவரும் நம்பிக்கை வைப்பார்கள். அவருக்கான அங்கீகாரமும் புகழும் கிடைக்கும்.
STR 48 படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும், உதவி இயக்குனராக அந்த செட்டுக்குள் இருப்பேன். அடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 2 உருவாக இருக்கிறது. எப்படியாவது மீண்டும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து விடுவேன்” என்று கூறினார்.
மேலும், ரஜினியின் வேட்டையன் படத்தில் நடிப்பது குறித்து பேசிய ரக்சன், “வேட்டையன் படத்தின் வாய்ப்பு கிடைத்தவுடன் நான் ஹீரோவாக நடிக்க அட்வான்ஸ் வாங்கி இருந்த இரண்டு படங்களின் அட்வான்ஸ் தொகைகளையும் மீண்டும் அந்த நிறுவனங்களிடமே கொடுத்துவிட்டு, ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்பதற்காக வேட்டையன் படத்தை ஒப்புக் கொண்டேன்” என்று கூறினார்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சரவெடி வெடித்து கொண்டாடிய விஷ்ணு… உண்மையான காரணம் இதுதான்!
இளைஞரணி மாநாடு இந்தியாவின் மாநாடு: ஸ்டாலின்