மனைவியையும் குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு தனியே செல்பவன் நல்ல மனிதராக இருக்க முடியுமா ? என்று நடிகை குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவகாரத்து செய்வதாக அறிவித்துள்ளார். ஜெயம் ரவி விவாகரத்து குறித்து அறிவித்த பிறகு, அவரின் மனைவி ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், தன்னிடம் கேட்காமல் ஜெயம் ரவி விவாகரத்து முடிவு எடுத்துள்ளதாக கூறியிருந்தார்.
ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையை சமூகவலைத் தள பக்கத்தில் நடிகை குஷ்பூ லைக் செய்திருந்தார். நடிகை குஷ்பூ ஆர்த்தியின் குடும்ப நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், குஷ்பூ சமூகவலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் சில விஷயங்களை கூறியுள்ளார்.
“வாழ்க்கை எனும் பயணத்தில் எல்லா திருமணங்களிலும் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். அதற்காக , ஆண்டுக்கணக்கில் உருவாக்கி வைத்த குடும்ப கட்டமைப்பை தவிக்கவிட்டுவிட்டு செல்ல வேண்டிய அவசியம் தேவையா? உறவு முறைகளில் அன்பு சில சமயங்களில் குறையலாம். ஆனால் அந்த நபர் மீதான மரியாதை எப்போதும் அப்படியேதான் இருக்கும்.
உங்களை நேசித்து ஆதரித்த ஒருவரை அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது. இது இதயத்தை உடைக்கும் இரக்கமற்ற நிலையாகவே கருத முடிகிறது.
நமக்காக இருப்பவர்களை மதிப்பது, நம் உலகமாக இருக்கும் குடும்பத்தை கொண்டாடுவதுதான் உண்மையான அன்பு ஆகும். உங்களுடன் நிற்பவர்களை மதிப்பதும் உங்கள் உலகமான குடும்பத்தை போற்றுவதும்தான் உண்மையான பலம். இதுதான் காலத்தால் உடைக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்தும். இந்த உண்மையை ஏற்காத நபர்கள் அன்பின் பாதையிலிருந்தும் நிறைவான வாழ்க்கையிலிருந்தும் விலகிச் சென்றுவிடுவர்” இவ்வாறு குஷ்பூ அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பூ ஜெயம் ரவியின் பெயரை குறிப்பிடவில்லை. எனினும், அவர் மறைமுகமாகவே ஜெயம் ரவியின் செயல்பாடுகளை விமர்சிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மோசடி புகார்… அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது விஜிலென்ஸ் வழக்குப்பதிவு!