மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பகுதிகளாகத் திரைக்கு வரத் தயாராகி வருகிறது. முதல் பாகம் செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
தமிழில் வெளியான பிரமாண்ட வரலாற்றுப் புதினங்களில் ஒன்று பொன்னியின் செல்வன். பத்தாம் நூற்றாண்டில் நடந்த ஒரு சாகசப் பயணம், சோழப் பேரரசுக்குள் நடக்கும் பிரிவு, அதிகாரப் போராட்டங்கள் ஆகியவற்றைத் தாண்டி, எதிரிகள் சூழ்ச்சியுடன் செயல்படுவதை எதிர்கொண்டு பொன்னியின் செல்வன் (காவேரி நதியின் மகன்) ஒரு பொற்காலத்தைக் கொண்டு வருவதற்காகப் போராடுவது தான் இந்த கதை.
ராஜராஜ சோழன் வரலாற்றில் மிகப்பெரிய பேரரசர்களில் ஒருவராக ஆவதற்கு முன்பு இருந்த கொந்தளிப்பான காலகட்டத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வனைப் புத்தகத்தில் மட்டுமே படித்தவர்கள், இந்தத் திரைப்படத்தைக் காண மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
வெள்ளித்திரையில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கச் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவர உள்ளது. மிகப்பெரிய நாவலை சில மணி நேர படமாக்குவது இயலாத செயல். அதனால் பொன்னியின் செல்வன் கதையைக் குரல் மூலம் எடுத்துச் சொல்லித்தான் திரைக்கதையை நகர்த்திச் செல்லவேண்டும்.
இதற்காக, நடிகர் கமல்ஹாசனை அணுகியிருக்கிறார் மணிரத்னம். அவரும் ஒப்புக்கொண்டு படம் நெடுக கதையைச் சொல்லியிருக்கிறாராம். இதற்கான குரல்பதிவை முடித்துக் கொடுத்துவிட்டாராம் கமல்ஹாசன்.
ஏற்கெனவே ஏராளமான நடிகர்களைக் கொண்டிருக்கும் இந்தப்படத்துக்குக் குரல் கொடுத்ததன் மூலம் கமலும் பொன்னியின் செல்வனில் இணைந்திருக்கிறார்.
-இராமானுஜம்