இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 61வது படத்தின் பூஜை இன்று (ஜூலை 16) நடைபெறுகிறது.
‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ படங்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் தற்போது இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணையும் தனது 61வது படத்திற்கு தயாராகி விட்டார். சில நாட்களுக்கு முன்பு ‘கோப்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு உடல்நிலை தேறி வந்தவர், ‘எல்லாமே இனிமே நல்லாவே நடக்கும்’ என தன்னுடைய ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.
அடுத்த மாதம் ‘கோப்ரா’ வெளியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், ஏற்கனவே இயக்குநர் இரஞ்சித்துடன் ஸ்டுடியோ க்ரீன்ஸ் தயாரிப்பில் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட விக்ரமின் 61வது படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. கிபி 17ம் நூற்றாண்டை அடிப்படையாக கொண்ட கதைகளம் இது. இதற்கான படப்பிடிப்பு தளங்களை தேடும் பணியில் இயக்குநர் இரஞ்சித்தின் அணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பெங்களூர், திருநெல்வேலி, கேரளா, திருவண்ணாமலை என கதைக்கான தளத்தை தேடி வருகிறார்கள்.
மேலும், படத்தின் தலைப்பு ‘மைதானம்’ எனவும் கே.ஜி.எஃப் பகுதியில் படப்பிடிப்பு நடத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு பட வெளியீட்டுக்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து படக்குழு உறுதிப்படுத்தும்.
இன்று சென்னையில் நடந்து வரும் பூஜையில் நடிகர் விக்ரம் பங்கேற்றுள்ளார். நடிகர் சிவக்குமார், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடன இயக்குநர் சாண்டி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். படத்தின் கதாநாயகியாக நடுத்தர வயதுள்ள பெண் தேவை என்பதால் கதாநாயகி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் மற்ற நடிகர்கள் தேர்வும் படத்தின் பூஜைக்கு பிறகே தெரிய வரும். இப்போது படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவடைந்துள்ளதால் பூஜை முடித்த கையோடு அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது. மேலும், இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கிறது. இரஞ்சித்துடன் விக்ரம் இணையும் முதல் படம் இது என்பதால் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆதிரா