இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘2கே லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் டீசர் நாளை(நவ.7) காலை 10:30 மணிக்கு வெளியாகும் என அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை இயக்குநர் பாண்டிராஜ் வெளியிடவுள்ளார்.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக நடிகர்கள் ஜகவீர் – மீனாக்ஷி நடிக்கும் திரைப்படம் ‘2கே லவ் ஸ்டோரி. இந்தப் படத்தில் பாலசரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், சிங்கமுத்து, வினோதினி, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சென்னை மற்றும் கோயம்புத்தூரில் 38 நாட்கள் நடைபெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவானது.
தற்கால 2கே கிட்ஸ்களின் காதலைப் பற்றிய கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படத்தின் நாயகன் பாண்டிச்சேரி அணிக்காக விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரர். கதாநாயகி, கல்யாண நிகழ்ச்சிகளை படமெடுக்கும் ஒரு வெட்டிங் போட்டோகிராபர். இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல், அவர்களை சுற்றிய நட்பு போன்றவற்றை கூறும் சமகால ராம்காம் திரைப்படமாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.
சுசீந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இது சுசீந்திரன் – இமான் இணையும் 10ஆவது திரைப்படமாகும். ஒளிப்பதிவாளர் வி.எஸ்.ஆனந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, தியாகு படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். சிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் விக்னேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், வருகிற டிச.13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் சுசீந்திரன் கடைசியாக 2022இல் நடிகர் ஜெய் நடித்து வெளியான ‘குற்றம் குற்றமே ‘ படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….