உதயசங்கரன் பாடகலிங்கம்
யார் வில்லன் என்பதில் குழப்பம்!?
’வி1 மர்டர் கேஸ்’ மூலம் நடிகராக அறிமுகமானவர் ஈஸ்வர் கார்த்திக். அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான, கீர்த்தி சுரேஷ் நடித்த ’பெண்குயின்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது திரைப்படம் ‘ஜீப்ரா’.
தெலுங்கில் உருவான இப்படத்தில் சத்யதேவ், பிரியா பவானிசங்கர், சத்யராஜ், சத்யா, டாலி தனஞ்ஜெயா, கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இதற்கு இசையமைத்துள்ளார்.
நடிப்புக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று பலரும் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்த முகங்கள் என்பதால், இப்படம் தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் தவிர்த்து, வங்கிக்கொள்ளை பின்னணியில் அமைந்த ஆக்ஷன் த்ரில்லர் ஆக இப்படம் அமைந்திருப்பதும் அதற்கொரு காரணமாக அமைந்துள்ளது.
‘இந்த பில்டப் எல்லாம் ஓகே, படம் எப்படியிருக்கு’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
அதற்குப் படத்தில் என்ன பதில் இருக்கிறது?
பணம் வெர்சஸ் மரியாதை!
ரவுடியாக இருந்து சமூகத்தில் செல்வாக்குமிக்க நபராக மாறியவர் ஆதி (டாலி தனஞ்ஜெயா). ஒருகட்டத்தில் தனது ரவுடித்தனத்தைக் கைவிட்டு, அதிகார பீடத்தை அடையும் ‘கிங் மேக்கர்’ ஆகும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்.
அதன் பொருட்டு, மிகச்சிக்கலான பிரச்சனைகளில் தனது தலையை நீட்டி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள செயல்பாடுகளைத் தீர்த்து வைக்கிறார். அவரைத் தேடி வரும் ஒரு தொழிலதிபர் (சுனில் வர்மா), சீனாவிலுள்ள தனது நிறுவனப் பணத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் விலைக்கு வரும் ஒரு விமானத்தை வாங்க முடியாமல் தவிப்பதாகக் கூறுகிறார். அதற்கு, எளிதாகத் தன்னால் தீர்வு காண முடியும் என்கிறார் ஆதி.
பதிலுக்கு, ‘பினாமியான உங்களுக்குப் பின்னால் இருக்கும் ஒரிஜினல் உரிமையாளரைப் பார்க்க வேண்டும்’ என்கிறார். அரைகுறை மனதுடன் அந்த தொழிலதிபர் அதற்குச் சம்மதிக்கிறார்.
எதிர்பார்த்தவாறு, அந்த தொழிலதிபர் கேட்கும் ‘டீலை’ முடித்து தரும் முயற்சியில் ஈடுபடுகிறார் ஆதி. அதற்கு முன்னதாக, இடைத்தரகர் ஒருவருக்குத் தரப்பட வேண்டிய பணத்தைத் தனது ஆட்களில் ஒருவரான பென்னியின் பெயரில் பரிமாற்றம் செய்யச் சொல்கிறார்.
அவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் பணம் இன்னொருவரது வங்கிக்கணக்குக்கு மாற்றப்பட்டு சில நிமிடங்களில் ‘அபேஸ்’ செய்யப்படுகிறது. அந்த வங்கிக்கணக்கு ‘சூர்யா’ என்பவரது பெயரில் இருக்கிறது.
பேங்க் ஆஃப் ட்ரஸ்ட் எனும் வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக வேலை செய்பவர் சூர்யா (சத்யதேவ்). தாய் உடன் தனியே வசித்து வருகிறார். அவரது காதலி சுவாதி (பிரியா பவானிசங்கர்) இன்னொரு வங்கியில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றுகிறார். சூர்யாவின் வங்கிக்கு அவர் மாற, இன்னும் இரண்டு நாட்களே மீதமிருக்கின்றன.
இந்த நிலையில், நான்கு லட்ச ரூபாய் காசோலையை ஒரு கணக்கு எண்ணில் செலுத்துவதற்குப் பதிலாக இன்னொரு எண்ணுக்கு தவறுதலாக அனுப்பிவிடுகிறார். அந்த கணக்கு பென்னியினுடையது.
அந்தப் பணத்தைத் திருப்பித் தர இயலாது என்று சொல்லும் பென்னி, தனது அக்கவுண்டை ‘ஜீரோ பேலன்ஸ்’ ஆக்கிவிடுகிறார்.
சுவாதிக்கு உதவும் பொருட்டு, ஒரு ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார் சூர்யா. பென்னியிடம் பேசி ஏமாற்றி, அவரது இன்னொரு கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாயை லவட்டுகிறார்.
அதன் தொடர்ச்சியாகத்தான், பென்னியின் கணக்கில் இருந்து சூர்யாவின் பெயரில் உள்ள கணக்குக்கு 5 கோடி ரூபாய் மாற்றப்பட்டு ‘அபேஸ்’ செய்யப்பட்டிருக்கிறது.
அது தொடர்பாக, உடனடியாக சூர்யா பணியாற்றும் வங்கிக்குப் புகார் வருகிறது. அப்போதே, அந்த வங்கிக்கணக்கு தன்னுடையதில்லை என்று விசாரணை அதிகாரியிடம் அவர் நிரூபிக்கிறார்.
உண்மை அறியும் பொருட்டு, பென்னியின் முகவரிக்குச் செல்கிறார். அங்கு பென்னி பிணமாகக் கிடக்கிறார்.
அதேநேரத்தில், ‘தன்னிடம் இருந்து திருடிய 5 கோடி ரூபாய் பணத்தை நான்கு நாட்களில் திருப்பித் தர வேண்டும்’ என்று சூர்யாவை மிரட்டுகிறார் ஆதி. ‘இல்லாவிட்டால், உனது அடையாளத்தையே அழித்துவிடுவேன்’ என்கிறார்.
ஆதியின் அதிகார பலம் என்னவென்பதை உணர்ந்தபிறகு, ஏதாவது செய்து 5 கோடி ரூபாய் பணத்தைத் திரட்டுவது என்று முடிவு செய்கிறார் சூர்யா.
சூர்யாவால் 5 கோடி ருபாய் பணத்தை திரட்ட முடிந்ததா? பென்னியின் கணக்குக்கு அனுப்பப்பட்ட பணத்தை திருடியது யார்? ஆதியை அவமானப்படுத்திய அந்த தொழிலதிபர், தனது உண்மையான உரிமையாளரிடம் இந்த விஷயங்களைச் சொன்னாரா? இறுதியில் வென்றது யார், தோற்றது யார் என்று சொல்கிறது ‘ஜீப்ரா’வின் மீதி.
நோ லாஜிக், ஒன்லி மேஜிக்!

இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக்கின் எழுத்தாக்கத்தில் அமைந்திருக்கும் ‘ஜீப்ரா’, வங்கியில் நிகழும் பணப் பரிமாற்றங்களை, அதன் பின்னிருக்கும் சில ஏமாற்றுத்தனங்களை நமக்குக் காட்டுகிறது. அதனை முழுக்கக் காட்டினால் இன்னொரு சதுரங்க வேட்டை ஆகிவிடும் என்று நினைத்து, பின்பாதியில் ஒரு ‘ஹெய்ஸ்ட் த்ரில்லர்’ ஆகத் தடம் புரண்டிருக்கிறது.
’நோ லாஜிக் ஒன்லி மேஜிக்’ என்று இயக்குனர் இறங்கியிருப்பதால், இக்கதையில் இருக்கும் லாஜிக் மீறல்களைப் புறந்தள்ளுவதே நியாயம். அதனை ஏற்கும்விதமாகத் திரைக்கதையும் பரபரவென்று நகர்கிறது.
திரைக்கதையை அமைப்பதில் இயக்குனருக்கு உதவியிருக்கிறார் யுவா.
இப்படத்தின் இன்னொரு பலம் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை. ஆக்ஷன், த்ரில் மற்றும் காமெடி காட்சிகளின் தன்மையை முழுமையாக ரசிகர்கள் உணரும் வகையில் அமைந்திருக்கிறது. பாடல்கள் கூடச் சில இடங்களில் பின்னணி இசை பாணியிலேயே உள்ளது.
ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மார் திரையில் ‘ரிச்’சாக பிரேம்கள் தெரிய வேண்டுமென்பதில் கவனம் காட்டியிருக்கிறார். விஎஃப்எக்ஸ் மற்றும் கலரிஸ்ட் நிபுணர்கள் அதற்கு உதவிகரமாகச் செயல்பட்டிருக்கின்றனர்.
இன்னொரு புறம் தனியார் வங்கியின் தலைமை அலுவலகம், அதன் ரகசியப் பெட்டக செட்டப் உட்படப் பல களங்களைப் பளிச்சென்று தெரியும் வகையில் வடிவமைத்து தந்து, ஒளிப்பதிவாளருக்கு உதவியிருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் சின்னா.
படத்தொகுப்பாளர் அனில் கிரிஷ், ‘அடுத்தது என்ன’ என்று ரசிகர்கள் கேட்கும் வகையில் திரையில் காட்சிகளைச் செறிவாகத் தந்திருக்கிறார்.
திரைக்கதை தொய்வடையும்போதெல்லாம், அதனைத் தாங்கிப் பிடித்திருக்கிறது இதிலுள்ள நட்சத்திரப் பட்டாளம்.
நாயகன் சத்யதேவ் ஒரு கமர்ஷியல் நாயகனாக இதில் தென்படுகிறார். மிகச்சில காட்சிகளில் அவரது அதீத உடல் எடை, கொஞ்சம் முதிர்ந்த தோற்றத்தில் அவரைக் காட்டியிருக்கிறது. மற்றபடி, அவரது இருப்பு நம்மை ஈர்க்கும் வகையிலேயே உள்ளது.
தான் தோன்றிய காட்சிகளில் நன்றாக நடித்தால் போதும் என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார் நாயகி பிரியா பவானிசங்கர்.
உண்மையைச் சொன்னால், இப்படத்தில் டாலி தனஞ்ஜெயா பெர்பார்மன்ஸ் கம்பீரமாக திரையில் வெளிப்பட்டிருக்கிறது. அவரது ஜோடியாக வரும் அம்ரிதா சில நிமிடங்களே வந்தாலும் ஈர்க்கிறார்.
சத்யராஜுக்கு இதில் பெரிய வேடம் கிடையாது. ஆனால், பெரிய பில்டப் உடன் அவரது பாத்திரம் காட்டப்பட்டிருக்கிறது.
பின்பாதியில் வரும் ‘கேஜிஎஃப்’ வில்லன் ராமச்சந்திர ராஜுவுக்கும் திரைக்கதையில் போதிய இடம் தரப்படவில்லை.
போலவே, இவர்கள் இருவர் தொடர்பான காட்சிகள் ‘கட்’ செய்யப்பட்டனவோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன சில காட்சிகள். அந்த குழப்பத்தையும் தெளிவுபடுத்தியிருக்கலாம்.
நாயகனின் நண்பனாக வரும் சத்யா, ஆங்காங்கே சில ‘ஒன்லைனர்’களை அள்ளித் தெளித்து கலகலப்பூட்டுகிறார். வங்கி மேலாளராக வரும் ஜெனிஃபர் உடன் அவர் அடிக்கும் ‘ஆபாசக் கூத்து’ காட்சிக்கு தடை போட்டிருக்கலாம். போலவே, சுனிலும் தன்பங்குக்குச் சிரிக்க வைக்கிறார்.
இன்னும் சுரேஷ் மேனன், கல்யாணி நடராஜன், ‘பிதாமகன்’ மகாதேவன் உட்படப் பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
’குற்றம் பண்ண துணிஞ்சவனுக்குத்தான் அதிர்ஷ்டம் துணை நிற்கும்’ என்று ‘சூது கவ்வும்’ பாணியில் அறத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது ‘ஜீப்ரா’வின் திரைக்கதை தொடக்கம். அது போன்ற சில குறைபாடுகளைத் தவிர்த்துவிட்டால், சுமார் இரண்டரை மணி நேரம் வெளியுலகைப் பற்றிய கவலை இல்லாமல் நல்லதொரு பொழுதுபோக்கு படம் பார்த்த அனுபவத்தை இப்படம் தரும். ’அது போதுமே’ என்பவர்களை ‘ஜீப்ரா’ தன்வசப்படுத்தும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மேஜர் முகுந்தின் திருமணத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்? – இந்துவின் தந்தை சொன்ன காரணம்!
வயநாட்டில் வெற்றி…திக்குமுக்காடிவிட்டேன் – பிரியங்கா ட்வீட்!
