உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
இயேசுபிரான் பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதேபோல் தமிழகத்திலும் இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் ஸ்டார்களை தொங்க விட்டு குடில்களை அமைத்து பிரார்த்தனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் விமரிசையாக நடைபெற்றன. சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் தேவாலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களின் வருகையால் களைகட்டியது. திருப்பலியின் போது சமாதானம், அன்பு, சகோதரத்துவம் ஆகியவை கிறிஸ்துமஸ் செய்தியின் மையம் என எடுத்துரைக்கப்பட்டது.
பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்கள் அமைந்த பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
சென்னை பெசன்ட் நகரில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் இந்துக்களும் பங்கேற்றனர், “எல்லா மதத்தையும் ஏற்றுக்கொண்டு நாம் சந்தோஷமாக இருக்கிறோம். இதுதான் தமிழ்நாடு” என்று கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கோவை
இதேபோல் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. புனித மைக்கேல் தேவாலயம், புனித ஜோசப் தேவாலயம் உள்ளிட்ட முக்கிய தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் கலந்து கொண்ட பக்தர்கள், உலக அமைதி, குடும்ப நலன், சமூக ஒற்றுமைக்காக பிரார்த்தனை செய்தனர். குழந்தைகள் சாண்டா கிளாஸ் வேடம் அணிந்து பண்டிகை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
வேளாங்கண்ணி
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த பக்தர்கள் திருப்பலியில் பங்கேற்றனர்.
நள்ளிரவு திருப்பலியின் போது இயேசு பிறப்பை குறிக்கும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு, அன்பு மற்றும் மனித நேயம் குறித்த செய்தி வலியுறுத்தப்பட்டது. பேராலயம் முழுவதும் அலங்கார விளக்குகள் ஒளிவீசியது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதேபோல் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துவ மக்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்தினருடன் பிரார்த்தனையில் பங்கேற்றனர். அண்டை வீட்டினருடன் இனிப்புகளை பரிமாறி மக்கள் மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.
