எப்போதுமே சிலர் எல்லாவற்றையும் தப்பாகத்தான் பேசுவார்கள் என்று நினைத்து விடக் கூடாது. சில சமயம் அவர்களே கூட சரியாகப் பேசுவதும் உண்டு.
திரௌபதி 2 படத்தில் பாடல் பாடியதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மோகன் ஜி யார் என்றே தெரியாது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அழைத்ததால்தான் போனேன் . இப்போதுதான் எல்லாமே புரிகிறது. முன்பே தெரிந்து இருந்தால் நான் பாடி இருக்கவே மாட்டேன். மோகன் ஜி யின் அரசியல் கொள்கையில் எனக்கும் நிறைய முரண் உள்ளது . அந்தப் பாடல் பாடியதற்காக வருத்தப்படுகிறேன்” என்று சின்மயி சொன்னது இயக்குநர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது.
மோகன் ஜி யின் கருத்தியல் பிடிக்காத இயக்குநர்கள் கூட இந்த விசயத்த்தில் சின்மயியை கண்டித்தனர் . தூவானம் தான் விட்டிருக்கிறது ; மழை இன்னும் வரவே இல்லை . இனிதான் வரும் என்று தோன்றுகிறது.
லெனின் – அஸ்மின், இயக்குனர் ஆர். வி. உதயகுமார், முனிஷ்காந்த் , தருண், கெவின், உடன் நடிக்க, கே .ஆர். வினோத் இயக்கியுள்ள படம் ரெட் லேபிள் . (படத்துக்கு பெயர் வைத்தது .. கதாநாயகி அஸ்மின்.)
இந்தப் பட விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு பேசும்போது, ” இந்தப் படத்தில் பாடல் பாடியுள்ள சின்மயி ஏன் இங்கே வரவில்லை?
இந்தப் படத்திலாவது இயக்குனர் பெயர் தெரிந்துதான் பாடினாரா? பாடி விட்டு அப்புறம் தெரியாமல் பாடினேன் என்று இந்தப் படத்துக்கும் சொல்வாரா?
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சின்மயி ஒரு படத்தில் பாடி விட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் அவர் நடந்து கொண்டிருக்கிறார். தெரியாமல் பாடிவிட்டேன் என்கிறார். வருத்தம் தெரிவிக்கிறார்.
ஒரு படத்தில் பாடல் பாடும் போது என்ன சூழல்? என்ன வரிகள் என்பதைத் தெரிந்து கொண்டு தான் பாடுவார்கள். தெரியாமல் பாடினால் அது பாடியவரின் தவறு. . எல்லாமும் பாடி முடித்த பிறகு வியாபாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல் படத்துக்கு எதிராகப் பேசக் கூடாது.
ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இயக்குநர் யார் என்று தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் தவறானதாகும். இந்தச் சின்மயி இப்படிச் சொல்வது அந்த இயக்குநருக்கு மட்டும் அவமானம் அல்ல. ஒவ்வொரு இயக்குநருக்கும் அவமானம். அதற்காக சின்மயிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இன்று ஒரு படம் எடுப்பது என்றால் உயிர் போகிற விஷயமாக இருக்கிறது. எவ்வளவு சிரமப்பட்டு படம் எடுக்கிறார்கள். ஆனால் சின்மயி போன்றவர்கள் சுலபமாக இப்படி இடையூறு செய்கிறார்கள். எஸ.ஜானகி, பி.சுசீலா போன்ற பெரிய பாடகிகள். எல்லாவிதமான பாடல்களையும் பாடினார்கள். அப்போதெல்லாம் இப்படியா நடந்தது?
இயக்குநரை தயாரிப்பாளரை அவமானப்படுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. பாடி முடித்து விமர்சனம் செய்து தொந்தரவு தருவது தவறு ” என்றார்.
மீண்டும் முதல் வரியைப் படிக்கவும்
– ராஜ திருமகன்
