சீனாவின் ஷிச்சுவான் மாகாணத்திலுள்ள யான் நகரத்தில் The Yaan Bifengxia வன விலங்குகள் வாழ்விடம் உள்ளது. இங்கு ஏராளமான வனவிலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.
இந்த வனவிலங்குகள் வாழ்விடத்தை சுற்றி பார்க்க சென்ற சுற்றுலாப்பயணிகள் ஒரு வித்தியாசமான விஷயத்தை கண்டு வியந்து போனார்கள். இந்த மிருகக்காட்சி சாலையில் ஒரு பாட்டிலில் அடைக்கப்பட்டு புலியின் சிறுநீர் விற்கப்பட்டதை கண்டுதான் வியந்தனர். அதாவது, ஒரு பாட்டில் புலியின் சிறுநீர் 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சீன பணத்தில் 50 யுவான்.
புலி சிறுநீர் அடங்கிய பாட்டிலில் முடக்கு வாதம், சுளுக்கு மற்றும் தசை வலிகளை குணப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளை ஒயினுடன் இஞ்சித்துண்டுகளை இடித்து புலியின் சிறுநீரை அதில் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால் வலி குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை குடிக்கலாம். ஆனால், குடிக்கும் போது அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக நிறுத்தி விட வேண்டுமென்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சரி …அப்படியென்றால் புலிகளிடத்தில் இருந்து சிறுநீர் எப்படி சேகரிக்கப்படுகிறது என்கிற கேள்வியும் எழுகிறது அல்லவா? புலிகள் சிறுநீர் கழிக்க பிரத்யேக கழிவறை கட்டப்பட்டுள்ளதாம். அங்கு சென்று புலிகள் சிறுநீர் கழிக்கும் வகையில் புலிகள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த மிருக காட்சி சாலையில் பணி புரிபவர் ஒருவர் கூறுகிறார். (அவசரமாக வந்தா எங்கே போகும்னு கேட்காதீங்க)
எனினும், சீன மருத்துவத்தில் புலியின் சிறுநீரில் மருத்துவ குணங்கள் உள்ளதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், புலியின் சிறுநீரை விற்க அனுமதி உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு , அந்த மிருகக்காட்சி சாலை, தங்களிடத்தில் பிசினஸ் லைசென்ஸே உள்ளதாக பதில் அளித்துள்ளது.
பழங்கால சீன மருத்துவத்தின்படி, புலி துணிச்சலும் வலிமையையும் கொண்ட விலங்காக பார்க்கப்படுகிறது. சில பராம்பரிய சீன மருத்துவ நூல்களில் புலிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. புலியின் எலும்புகளை கொண்டு வலிப்பு மற்றும் வாத நோய்க்கு சிகிச்சையளிக்க முடியும் என்றும் அவற்றில் சொல்லப்பட்டுள்ளது. எனினும், புலியின் எந்த உறுப்புகளையும் மருத்துவத்துறையில் பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் அழிந்து வரும் இனங்கள் பட்டியலில் புலி உள்ளது. புலியை வேட்டையாடினால் சிறைத்தண்டனை நிச்சயம்.