டிரம்புக்குப் பின் சீனாவும்: இந்தியா–பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்ததாக சர்ச்சையை கிளப்பிய வாங் யி

Published On:

| By Pandeeswari Gurusamy

இந்தியா பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவர தான் கடும் நடவடிக்கைகளை எடுத்ததாக டிரம்ப் பல முறை கூறி வந்த நிலையில் தற்போது சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றமான சூழலின் போது சீனா மத்தியஸ்தம் செய்ததாக கூறி உள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

2025 மே மாதம் இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட கடும் ராணுவ மோதலைத் தணிக்க சீனா மத்தியஸ்தம் செய்ததாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உரிமை கோரிய நிலையில், அந்தக் கூற்றை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியா–பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் முழுமையாக இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் (DGMO) இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே ஏற்பட்டது என்றும், மூன்றாம் தரப்பு எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை என்றும் இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பின்னணி: ‘ஆபரேஷன் சிந்தூர்’

2025 ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு–காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, மே 7-ஆம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நான்கு நாட்கள் கடும் ராணுவ மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் முக்கிய ராணுவ கட்டமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 10: போர் நிறுத்தம்

மே 10-ஆம் தேதி பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு போர் நிறுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தையில், நிலம், வான் மற்றும் கடல் எல்லைகளில் தாக்குதல்களை நிறுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.

ADVERTISEMENT

இந்த ஏற்பாடு தொடக்கம் முதலே இருதரப்பு முடிவு என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா – பாகிஸ்தான் இடைய நடந்த போர் நிறுத்தத்திற்கு நான் தான் காரணம் என்று கூறி வந்தார். இதற்கு இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்திய நாடாளுமன்றத்திலும் இதுகுறித்த காரசார விவாதங்கள் நடைபெற்றது.

சீனாவின் உரிமைக் கோரல்

இந்நிலையில் டிசம்பர் 30-ஆம் தேதி பெய்ஜிங்கில் நடைபெற்ற ‘சர்வதேச நிலவரம் மற்றும் சீனாவின் வெளியுறவுக் கொள்கை’ குறித்த கருத்தரங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, உலகின் பல்வேறு மோதல்களைத் தணிக்க சீனா மத்தியஸ்தம் செய்ததாகவும், அதில் இந்தியா–பாகிஸ்தான் பதற்றமும் அடங்கும் என்றும் கூறினார்.

இந்தியா மறுப்பு

இந்திய அரசு வட்டாரங்கள், “இந்தியா–பாகிஸ்தான் விவகாரங்களில் மூன்றாம் தரப்பு தலையீடு ஏற்கத்தக்கது அல்ல. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் தான் போர் நிறுத்தத்தைக் கோரியது” எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

மோதல் காலத்தில் சீனா பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அளித்ததாகவும், சீன ஆயுதங்களின் திறனை விளம்பரப்படுத்தியதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால், சீனாவின் மத்தியஸ்த உரிமை முரண்பாடானது என இந்திய தரப்பு கருதுகிறது.

எதிர்க்கட்சி விமர்சனம்

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்,
“டிரம்ப் தொடர்ந்து உரிமை கோரிய நிலையில், தற்போது சீனாவும் அதே கோரிக்கையை முன்வைக்கிறது. இதுகுறித்து பிரதமர் மோடியின் மௌனம் தேசிய பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share